3 கவிதைகள்

முன்பு ஒரு முறை, ஆனால் எப்போது

மிகுந்த களைப்புடன்
அலுவலக சுத்திகரிப்பான் கருவியில்
ஒரு குவளை நீரை பருகினேன்
அழிக்கம்பிகளின் வழியே வந்த
மெல் அந்தி காற்று முகத்தை வருடியது
இதை எங்கோ சந்தித்திருக்கிறேன்
எப்போ எப்போ எப்போ என வீசியது
மெரீனா கடற்கரையில்
போதையில் நண்பனுடன்
சண்டையிட்டு
தனித்து
விட்டுச் சென்ற
முன்னிரவு பொழுதில் வீசியதோ
காதலை மறுதலித்து
பரிசாக அளித்த நூல்களை
அவள் திருப்பிக் கொடுத்த போது
கோரிப்பாளையம் சிக்னலில்
பிற்பகலில் வீசியதாக இருக்குமோ
அப்பாவின் உறங்கும் உடலை
தத்தனேரியில் தகனம் செய்து விட்டு
வெறும் வயிற்றுடன் வைகையில்
தலை மூழ்கிவிட்டு எழுந்து நடந்த போது
வெறுமையாக வீசியது இது தானோ
எங்கேயோ எப்போதோ ஏதோ ஓர் சந்தர்ப்பத்தில்
எதுவும் சொல்லமாலேயே
மறு ஜன்னல் வழியே சென்று விட்ட போதிலும்
விடாமல் வீசிக் கொண்டேயிருக்கிறது
மனதுக்குள் இன்னும்
***
22 பிப்ரவரி 22
இளங்காலை வெயிலில்
***

திரை எப்போதும் கருப்பாகத்தான் இருக்கிறது

நாள் முழுக்க அந்த
செவ்வகத்தின் முன்னால்
அமர்ந்தபடி இவன் எதை தேடுகிறான்
எலியின் முதுகை வருடியபடி
அதன் மூக்கை சொடுக்கியபடி
மின் பக்கங்களுக்குள் புதையுண்டு போகிறான்
முகநூலில் நட்பு அழைப்பை ஏற்க தயங்குகிறான்
சிறிய ஒளி துணுக்குகளை திறந்து பார்க்கிறான்
அதில் சில மலிவான அரசியல் வாடை
வேறு சில ஞானியோ, குருவோ,
மதத்தலைவரோ, வைத்திய சித்தரோ
யாரோ இடை விடாத பிரசங்கம்
இன்னும் சிலதில்
தன் பாஷையே புரியாமல்
திருகலாக பாடும் சில பேர்
திணறி திணறி பாடும் சில பேர்
மிக வேகமாக
கிளைக்கு கிளை தாவி செல்லும்
அணிலைப் போல பாடும் சில பேர்
இவன் என்ன தான் தேடுகிறான்
பொழுதுகள் பிற்பகலில் சரியத் தொடங்குகின்றன
உணவு பொட்டலத்தை பிரித்து வயிற்றை நிரப்புகிறான்
முடிவற்ற காட்சிகள் திரையில் விரியக் கூடும் என கற்பனிக்கிறான்
இமை மறித்த ஆட்டு மந்தைகளென
எழுத்துகள், காட்சிகள், பிம்பங்கள்
மன வெளியில் திரிகின்றன
சட்டென்ற மின் வெட்டில் அனைத்தும்
வாளிநீர் சரிந்த கோலமாய் கலைந்து விடுகிறது
எழுந்து தேநீர் கடையை நோக்கி நடக்கிறான்
திரும்பி வந்து பார்த்த போதும்
திரை கருப்பாகத்தான் இருக்கிறது
***
நண்பகல்
22 பிப்ரவரி 22
****

வானில் மிதக்கும் சொல்

பிரியமற்றவர்களே
அல்லது
பிரியத்துக்குரியவர்களே
இவன் விரைவில் இறந்து போகக் கூடாது
உங்களிடம் சொல்வதற்கு இவனிடம்
கொஞ்சமே கொஞ்சம் விஷயங்கள் உள்ளன
ஆனால் அதை கூறுவதற்கு
இது பொருத்தமான தருணம் அல்ல
ஆனால் நிச்சயம் ஒருநாள் உங்களிடம் கூறுவான்
அதுவரை அவனது உயிரை
காப்பாற்றி வைக்க ஏதாவது
உத்தி சொல்ல முடியுமா
மரணம் எந்த நொடியிலும் திறந்து மூடும் கதவு
அதை திறக்க விடாமல் வைக்கும் வித்தை
யாருக்காவது தெரியுமா
ஒன்றை நிச்சயம் புரிந்து கொள்ள வேண்டும்
மரணத்தை கண்டு அஞ்சி இதை சொல்லவில்லை
எந்த சொல்
எப்போது வெளிப்பட வேண்டும்
என்பதை யார் தீர்மானிக்கிறார்கள்
ஒரு சொல் பிரபஞ்சத்தில் நுழைந்து விட்டால்
அவன் சென்ற பிறகும்
நீங்கள் சென்ற பிறகும்
நான் சென்ற பிறகும்
யாரும்
அதை கேட்டாலும்
கேட்கா விட்டாலும்
இங்கே அது மிதந்து கொண்டிருக்கும் தானே
ஏதோ மரண படுக்கையில்
இருந்து கொண்டு மிழற்றுவதாக
இதை நீங்கள் கருதலாகாது
ஒவ்வொரு இரவும்
ஒவ்வொருவருக்கும்
படுக்கையில் விழுவதும்
விழித்து எழுவதும்
மறு ஜென்மம் தானே
இந்நாளை எப்போதும் புதிதாக தானே
தீட்டி காட்டுகிறது நிகழ்
மூப்படைந்து விட்டதாகவும் கருத வேண்டாம்
முதுமை என்பது வயதையா குறிக்கிறது
உங்களில் யாராவது சொல்ல முடியுமா
பால்யத்தில், இளமையில், மத்திம வயதில்
இறந்தவர்களுக்கு…
யாராக இருந்தாலும்
மரணத்துக்கு முந்தைய வயதே முதுமை என்பதை
வாழ்க்கையின் நீளம்
எல்லோருக்கும் ஒரே அளவிலானதல்லவே
ஆயிரம் வருடங்கள் வாழும் மரங்களும்
‘அற்பாயுளில்’ மரிக்கும் தாவரங்களும்
இருக்கத்தானே செய்கிறது
நீங்கள் அல்லது நாம் ஒன்றை
அது எதுவாக இருந்தாலும் அதை
மிக தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்
இங்கே சொல்ல முயன்றது இதுவல்ல
இன்னும் அதை அவன் சொல்ல
தொடங்கவில்லை
இப்போது அதை சொல்ல போவதுமில்லை
தருணம் என்பது மிக முக்கியம்
சொல்வதற்கு மட்டுமல்ல
கேட்பதற்கும்
கேட்பதற்கு மட்டுமல்ல அவதானிப்பதற்கும்
தருணம் தற்சமயம் மிக அவசியம்
எந்தவொரு தருணத்திலும்
எதை வேண்டுமானாலும்
சொல்லலாம், கேட்கலாம்
என்பவர்களிடம் சொல்வதற்கோ
கேட்பதற்கோ ஒருவருக்கும் எதுவும் இல்லை
இது சொல்வதை பற்றியதோ
கேட்பதை பற்றியதோ அல்லவே அல்ல
கோடானு ேகாடி உயிர்்கள் அலைவுறும்
இப்பிரபஞ்சத்தில் நீங்களும் நானும் அவனும்
சக பூச்சிகளாக உயிர் தரித்திருக்கும் இவ் வேளையில்
பூப்படையும் பருவங்களைப் போலவே தான்
சொல்ல விரும்பும் சொல்லும் இருக்க
வேண்டும் அல்லவா
தாவரங்களை, விலங்குகளை, பூச்சி
இத்யாதிகளை தவிர்த்து விட்டு
மனித ரூபம் கொண்டிருக்கும்
உங்களிடம் மட்டுமே கூற விழையும்
அந்த தருணத்துக்காக காத்திருக்கிறான்
ஆனால் அவைகளுக்கு தெரியாமல்
ஒரு ரகசிய சொல்லையாவது
அல்லது மெளனத்தையாவது
அவனால் உங்களிடம் தெரிவிக்க இயலுமா
ஒரு மொக்கு அவிழ்தை போல
மெல்ல பருவங்கள் விரிவதை போல
கரைகளை மீறும் நதிகளை போல
கடலின் விளிம்பில் சரியும் தொடுவானை போல
முட்டையின் ஓட்டை திறக்கும்
கோழி குஞ்சு போல
புதுமறி மெல்ல எழுந்து நிற்பதை போல
இதை தான் தருணம் என்கிறான்
ஆனால் மிகச் சரியாக இதையே அல்ல
அவன் கூற விழைவது
பின்னொரு நாளில் சொல்லப்
போவதற்கான ஒரு முன்கதை சுருக்கமல்ல
இது ஒரு வகை இறைஞ்சுதல்
மெலிதான பிரார்த்தனை
நயமான வேண்டுகோள்
சொல்வதற்கும் கேட்பதற்கும் முன்னால்
நமது அனைத்து அம்பறாத்துணிகளையும்
உதறி விட வேண்டும் என்பதற்கான ஓர் அவா
தருணம் என்பது எப்போதோ நிகழ
இருக்கும் ஒரு வேளை என
நம்பும் அவனுக்கும் கூட
ஒரு வேளை தெரியாமலிருக்கலாம்
தருணம் என்பது இப்போது தான் என்பது
***
22-2-22
முன்னிரவு
****

Leave a comment