ஊதா நிற மனிதனின் மெளனம்

வேகவதி பாய்ந்தோடும்
நாணல் படர்ந்த கரைகளை கொண்ட
இவனது வசிப்பிடத்திலிருந்து
வெகு தொலைவில்
தேயிலை செடிகள் அடர்ந்திருக்கும்
மலைப் பிராந்தியத்தில் வசிக்கும்
அந்த ஊதா நிற மனிதன்
பேசுவதை நிறுத்திக் கொண்டான்
இரு நிலங்களுக்கும் மத்தியில்
கடல்கள் பாயும் வெளியில்
கண்ட திட்டுகள் மிதந்தலைகின்றன
முன்னொரு காலத்தில்
இருவரின் மொழி பேசும்
ஏராளமான உடல்கள்
அவற்றில் கரையொதுங்கின
அப்போது இருவரும்
தங்களது மொழிகளை
உடலின் ரகசிய பாகத்தில்
ஒளித்து வைத்துக் கொண்டனர்
உடல்களை காலப்பூச்சிகள்
அரித்து தின்று செரித்திருந்தன
எப்போதும் எதன் பொருட்டும்
முழந்தாளிட்டு கண்ணீர் மல்க
பிரார்த்தித்தபடி இருக்கும்
அவனது மெளனத்துக்கு பின்னால்
யாரும் அறிந்திராத வகையில்
மிகப் பெரிய பள்ளத்தாக்குகள்
ஒளிந்திருக்கக் கூடுமாயிருக்கலாம்
அவற்றில் மிகவும் குளிரடிக்கும்
ஈர மஞ்சுகள் அலைந்தபடியிருக்கும்
எப்போதும் பிம்பங்களை
சுமந்து கொண்டிருப்பவன்
நீண்ட காலத்துக்கு முன்பே
மின் ஒலித் துகளாக மாறியிருந்தான்
ரத்தமும் சதையும் நாற்றமும்
நிறைந்த மனிதனாக அவன்
தற்போதும் இருக்கக் கூடும்தான்
அவனுடன் கைகுலுக்க
இயலாதபடி காலம் விலங்கிட்டிருந்தது
வேதனைகளின் முள் கிரீடத்தை
அணிந்திருப்பதாக எப்போதும் கூறுவான்
அவனது நாவின் சுவையூறிய சொற்கள்
நதிகளில், கடற்கரைகளில், மலைகளில்
இப்போதும் எதிரொலித்துக் கொண்டிருப்பதை
யாரேனும் கேட்டிருக்கவும் கூடும்
முன்பொரு சமயம்
அவனது ஒரு மகரந்த சொல்லை
தனது காலில் சுமந்து கொண்டு
வண்ணத்துப்பூச்சி யொன்று
கடலை தாண்டி செல்ல
புறப்பட்டு போனது
அதன் பிறகுதான்
சமுத்திரங்கள்
அந்தி வேளைகளில்
தனது
நிறங்களை மாற்றிக்
கொள்ளத் தொடங்கியிருந்தது

25 பிப்ரவரி 22
பிற்பகல்

Leave a comment