தனியனின் பயணம்

பேருந்தின்
ஜன்னலோர இருக்கையிலிருந்து
ஒரு தனியன்
வலுக்கட்டாயமாக
இறக்கிவிடப்படும் பொழுது
அது வேற்று கிரகத்துக்குள்
பயணிக்கிறது
இவன் புதிய உலகை படைக்கத் தொடங்குகிறான்

பயணிப்பவர்களுக்கு மட்டுமே
சொந்தமானது பயணம்
அதை யாரும் பறித்துக் கொள்ள முடியாது

பயணம் சென்றவர்கள்
வீடு திரும்பி விடுகின்றனர்
என நம்பப்பட்டு வருகிறது வெகுகாலமாகவே

வெகுகாலமாகவே
பயணம் சென்றவர்கள்
யாரும் வீடு திரும்புவதேயில்லை
போலவே
இடத்தையும்

சென்று சேர்வதில்லை

ஜன்னலோர காட்சிகள்
புகைப்பட ஆல்பங்களாக
மனதில்
சேகரித்து வைக்கப்படுகின்றன
பயணம் தடைப்படும் வேளைகளில்
கனவுகளின் நிலவறைகளில் அவை அவ்வப்போது புரட்டப்படுகின்றன

நீங்கள் எங்காவது
அவனை சந்தித்தீர்களேயானால்
தயவு செய்து சிறிது குளிர்ந்த நீரும் இடமும் வெளிச்சமும் கொடுங்கள்

பயணம்
இருண்ட பாதைகளை கொண்டது
வெளிச்சம்
வேர்க்கடலைகளை போல

வழிநடையில் கொறித்து கொள்வதற்கு

பாறையில் வழிந்து
செல்லும் நீரை போல
அவன் ஒருபோதும்

விடைபெற்று செல்வதில்லை

அவனுக்கு ஓரிடத்தில் இருப்பதும்
மற்றொரு இடத்துக்கு பயணிப்பதும் ஒன்றே தான்

அவன் எங்கும் பயணிப்பதில்லை
போலவே

அவன் ஓரிடத்திலும் தங்குவதுமில்லை

05 பிப்ரவரி 22
மாலை

Leave a comment