ஷ்யாம் பெனகல் : இந்தியாவில் இணை சினிமாவின் முன்னோடி

86 ஆவது வயதிலும் ஓய்வின்றி இயங்கி வரும் ஷ்யாம் பெனகல் தற்போது மேற்கு வங்கத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

மும்பையில் மாற்றம் ஒன்றே நிலையானது, ஆனால் அதன் நகரத்தின் விளிம்பு ஒன்றில் மட்டும் நிலையான ஒன்றே இயல்பு.

1977 முதல், மும்பைக்கு அருகில் உள்ள தார்தியோவிலிருந்தபடியே தனது மந்திர காலத்தால் தனது அலுவலகத்திலிருந்து திரையுலகின் மீது ஷ்யாம் பெனகல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறார். அங்கே காலை 10 மணிக்கெல்லாம் வந்துவிடும் அவர் மாலை 6 மணிக்கு முன்பாக அங்கிருந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். படப்பிடிப்பு காலங்கள் அல்லது பயண வேளைகள் (2006 முதல் 2012 வரை ராஜ்ய சபா உறுப்பினராக இருந்த காலம்) தவிர, மற்ற காலங்களில் அவரை இங்கு காண முடியும்- அவரை அங்கு காணவே அவருக்கும் விருப்பம்.

சுவரில் தொங்கும் சில ஓவியங்கள் அறையை சுற்றியுள்ள சுவர்களில் கண்ணாடி பதிக்கப்பட்ட அலமாரிகளில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் மத்தியில், மிகவும் விசாலாமான அறையில் தான் எழுதும் மேஜையில் அவர் பரபரப்புடன் பணியை தொடர்கின்ற போதிலும் அவரது அறையில் கணிணி கிடையாது வரவேற்பு அறையில், அவர்கள் ஊழியர்கள் பயன்படுத்துவதற்காகத்தான் கணிணி உள்ளது. “நான் கொஞ்சம் பழைய ஆள், எனக்கு கணிணி பயன்படுத்துவதில் விருப்பமில்லை” என நீண்ட உரையாடலுக்கு மத்தியில் அவர் கூறினார். இந்த உரையாடல் முடியும் வரையிலும் அவர் தனது நாற்காலியை விட்டு எங்கும் நகரவில்லை.

86 வயதிலும், நீண்ட காலமாக ஊடகங்களின் பிரதான கவனத்துக்குரியவராக இருந்து வருகிறார். பிசிறின்றி தெளிவாகவும், கண்ணியமாகவும், அனைத்து கால கட்டங்களிலும் பெனகல் தனது குரலை வெளிப்படுத்தி வந்துள்ளார். தனது திரைப்படங்கள், ஆவணப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அணுகும் அதே சிந்தனையுடனேயே ஆர்வமுள்ள பத்திரிக்கையாளர்களையும் அவர் நடத்துகிறார். சுதந்திரத்துக்கு முன்னும் பின்னுமான இந்திய சமூகத்தில் கெட்டித் தட்டிப் போன விஷயங்கள் குறித்து அவரது படங்கள் மறக்க முடியாத வகையில் பரிசீலிக்கின்றன. அவரது படங்கள் ஏராளமான விருதுகளை பெற்றிருப்பதுடன், இந்திய பார்வையாளர்களுக்கு பல்வேறு ஆக்கப்பூர்வமான விஷயங்களையும் அறிமுகம் செய்துள்ளன.

ஆங்கூர், நிஷாந்த், மந்தன், பூமிகா, மண்டி, கல்யுக், பாரத் ஏக் கோஷ், யாத்ரா, சூரஜ் கா சத்வன் கோடா, மம்மு, சர்தாரி பேகம், வெல்கம் டூ சஜ்ஜன்பூர் என, அவர் படம் எடுத்தது போதும், இனி அவர் ஓய்வு பெறலாம் என விவாதிக்கும் அளவுக்கு படங்களை எடுத்து குவித்துள்ளார். அவரது சமீபத்திய முயற்சியாக வங்க தேசத்தின் முன்னாள் அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் வாழ்க்கை வரலாற்றை படமாக்கி வருகிறார். வங்கத்தின் நண்பன் (பங்காபந்து) படத்தின் கதையை அதுல் திவாரியும் ஷமா ஜைதியும் எழுதியுள்ளனர். இந்திய-வங்க தேச அரசுகளின் கூட்டு தயாரிப்பாக படம் உருவாக்கப்படுகிறது. முஜிபுர் ரஹ்மானாக, ஆரிப்பின் ஷூவூ, அவரது மனைவி ஷேக் பஷிலாதுன்னேசாவாக, நஸ்ரத் இம்ரோஸ் திஷா, அவரது மகள் ஷேக் ஹசினாவாக, நஸ்ரத் பரியாவும் பாத்திரமேற்கின்றனர்.

1974, ஆகஸ்ட் 15 இல் முஜிபுர் ரஹ்மான், அவரது மனைவி, 3 மகன்கள் ஆகியோர் அவரது வீட்டில் வைத்து ராணுவ அதிகாரிகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் பங்காபந்து திரைப்படத்தில் பேசுபொருளாகியுள்ளது. ஷேக் ஹசீனாவும், அவரது சகோதரி ஷேக் ரெஹானாவும் அந்த சமயத்தில் ஐரோப்பாவில் இருந்ததால் அவர்கள் உயிர் தப்பினர்.

கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக படப்பிடிப்பில் தொய்வு ஏற்பட்ட போதிலும், தனது கடைசி கட்டப் படப்பிடிப்பை வங்கதேசத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கோவிட் பரவலின் தாக்கம் குறைவதற்காக காத்திருந்தபடியே, தற்போது ஷ்யாம் பெனகலை அவரது அலுவலகத்தில் மீண்டும் பார்க்க முடிகிறது. சமீபத்திய புத்தகங்களை படித்தபடியும், சினிமாவில் அவரது வாழ்க்கையில் எதிர்கொண்ட பன்முகத்தன்மை, செழுமை, சாகசம் ஆகியவற்றை குறித்தும் வெளிப்படுத்தினார்.”திரைப்படம் எடுக்கும் முழுமையான செயல்பாடு, எனக்கு இன்னும் ஈர்ப்புத்தன்மை அளிப்பதாகவே உள்ளது” என்று கூறும் ஷ்யாம் பெனகல், தனது படங்களை நினைவு கூர்ந்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

கே: தினமும் பணிக்கு வருவதை ஏன் அத்தனை முக்கியத்துவம் உடையதாக கருதுகிறீர்கள்…
ப : முக்கியமாக அது ஒரு ஒழுக்கமான செயல். எல்லாவற்றையும் விட, என்னை அது மிகவும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.உங்களுக்கு ஒரு அடிப்படையான ஒழுக்கம் வேண்டும். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலான இந்த பணியை மக்கள் கேலி செய்கிறார்கள், ஆனால் உண்மை என்னவென்றால், அது மிக மிக முக்கியமானது.

நான் வேலையை தொடங்குகிறது போது, அதுவே எனக்கான நேரமாக ஆகிறது, அது போன்ற ஒரு பாணியை நான் பின்பற்றுகிறேன். ஒரு சிலரைப் போல என்னால் இரவில் பணியாற்ற முடியாது. வேலை நான் வீட்டுக்கு எடுத்துச் செல்ல விரும்புவதில்லை. அது போன்ற ஒன்றை எப்போதும் நான் விரும்பியதில்லை.

நான் எப்போதும் பகலிலேயே வேலை செய்கிறேன். அதுதான் தொந்தரவில்லாத நேரம். இங்கே நான் படிப்பது, திரைக்கதை எழுதுவது, ஆய்வு செய்வது, மக்களை சந்திப்பது என ஏராளமான பணிகளை செய்கிறேன்.பல்வேறு நிலைகளில் உருவாக்கப்பட்ட திரைக்கதைகள் எப்போதும் இங்கு இருக்கும் – சில விஷயங்கள் உங்களை பாதிக்கும், சில நிஜ வாழ்க்கை நிகழ்ச்சிக்கள் அல்லது சில வரலாற்று அம்சங்கள் இப்படி பல.

அதனால் தான் வாசிப்பு என்பது மிகவும் முக்கியமானது, எனக்கு பிடித்தமானதாக இருந்தால், அதை நான் விரும்பி படிக்கிறேன். ஹைதராபாத்தில் உள்ள நிஜாம் கல்லூரியில் படித்த போது, பல்வேறு நிறுவனங்களால் கொடையாக அளிக்கப்பட்ட ஆறாயிரம் முதல் ஏழாயிரத்துக்கும் அதிகமான புத்தகங்களை கொண்ட நூலகம் இருந்தது. அந்த நூலகம் எதிர்பாராத வகையில் முற்றிலும் சமகாலத்தன்மை கொண்டதாக இருந்தது. அவ்வாறு இல்லையெனில் உங்களால் வெறும் செவ்வியல் இலக்கியங்களை மட்டுமே படித்திருக்க முடியும்.

என்னமாதிரியான படங்களை எடுக்க வேண்டும் என்பதை பணமே தீர்மானிக்கிறது. உங்களிடம் ஒரு கரு இருந்தால், உங்களைத் தவிர வேறு யாரும் அதில் ஆர்வம் காட்டவில்லையென்றால், அது திரைப்படமாக உருவாகாது, கட்டாயமாக அதை படமாக எடுக்கக் கூடாது என்பதை கண்டுகொள்வதற்கான சிறந்த சோதனை இதுதான்.

கே: உங்கள் உறவினர் குருதத் மிகவும் பிரபலமான இயக்குநர். நீங்கள் அவருடன் பணியாற்றினீர்களா, 1950களில் எப்போது நீங்கள் ஹைதராபாத்திலிருந்து மும்பைக்கு வந்தீர்கள்?
ப : நான் பல்கலை கழகத்தில் படிப்பை முடித்ததும் மும்பைக்கு வந்து விட்டேன். படமெடுக்க முடியும் என்ற நம்பிக்கையில்தான் நான் இங்கு வந்தேன். நான் குருதத்துடன் பணி புரிய போனால், என்னால் எதையும் கற்றுக் கொள்ள முடியாது என்பதை தெரிந்து கொண்டேன். இரண்டாவது, அல்லது மூன்றாவது, அல்லது நான்காவது உதவி இயக்குநராக இருக்க நான் விரும்பவில்லை.

இருந்த போதிலும், அவரை நான் சந்தித்தேன். அவரது இளைய சகோதரி லலிதா லஜ்மி கொலாபாவில் வசித்து வந்தார். ஏனெனில், அவரும் அவரது கணவரும் மிகப் பெரிய வீட்டில் வசித்து வந்ததாலும், அப்போது மும்பையின் நான் முதன் முதலில் வாங்கிய சம்பளம் 175 ரூபாய் என்பதாலும், அதை வைத்துக் கொண்டு என்னால் தனியாக எங்கும் தங்க முடியவில்லை என்பதாலும் நான் அங்கு செல்லவேண்டியதாயிற்று. குருதத்தின் தாயார் என் மீது பரிதாபப்பட்டு, அதற்கு பதிலாக நீ ஏன் எங்களோடு வந்து இங்கு தங்கக் கூடாது என்று கேட்டார். லிண்டாஸ் விளம்பர ஏஜென்சியில் எனக்கு வேலை கிடைக்கும் வரையில், நான் அங்கு தங்கியிருந்தேன், பிறகு அங்கிருந்து வெளியேறினேன்.

1959 முதல் 1963 வரை நான் லிண்டாஸில் பணியாற்றினேன். அப்போது லிண்டாஸில் நான் ஏராளமான விளம்பரப் படங்களை உருவாக்கினேன். அது எனக்கு கற்றுக் கொள்வதற்கான மிகப் பெரிய பயிற்சி காலமாக இருந்தது. திரைப்படப்பிரிவின் தலைவராக அலிக் பதம்சி இருந்தார். நான் அவருக்கு உதவியாளராக இருந்தேன். மேலும் காப்பி ரைட்டராகவும் வேலை செய்தேன்.

அலிக் நாடகத்தில் மிகவும் ஆர்வமுடையவராக இருந்தார், அது மிகப் பெரிய நன்மையாகிப் போனது. இல்லையெனில் ஒரு பாஸ், உங்களை போட்டு பிறாண்டி எடுத்து, இங்கே போ, அங்கே போ என நச்சரித்து விடுவார்.அதிர்ஷ்டவசமாக, அலிக் தனது நாடக சகாக்களுடனேயே அதிக நேரத்தை செலவிட்டார். அதனால் விளம்பர படங்கள் தயாரிப்பதில் எனக்கு அதிக சுதந்திரம் வழங்கினார். அதற்காக அவருக்கு எப்போதும் என் நன்றியை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். அது எனக்கு ஏராளமான அனுபவங்களை கொடுத்தது. இதனால் ஒரு திரைப்படம் எடுக்க கற்றுக் கொள்வதற்காக திரைப்படப் பள்ளிக்கு செல்ல வேண்டிய தேவை இல்லாமல் போன்து.

கே : பங்காபந்து படத்துக்கான வாய்ப்பு எப்படி வந்தது?
ப : அந்த படம் எடுக்கும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டது. இது தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகமும், வங்க தேச திரைப்பட மேம்பாட்டு கழகமும் இணைந்து உருவாக்கும் கூட்டுத் தயாரிப்பு. அதன் பெரும்பாலான பணிகளை நான் முடித்து விட்டேன். நடிகர்கள் வங்க தேசத்திலிருந்து மும்பைக்கு வந்தனர். இன்னும் ஒரே ஒரு – கடைசி கட்ட படிப்பிடிப்பு மட்டும் வங்க தேசத்தில் நடத்தப்பட்ட உள்ளது. அனைத்தும் (கோவிட்) இயல்பு நிலைக்கு வந்ததும் அதுவும் விரைவில் முடிக்கப்பட்டு விடும்.

கே : படத்திலிருந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானை குறித்து நாம் ஏதாவது கற்றுக் கொள்ளலாம் அல்லவா?
ப : அந்த மோசமான நிகழ்வைத் தவிர முஜிபுர் ரஹ்மான் பற்றி எனக்கு பெரிதாக எதுவும் தெரியாது. அது ஒரு அசாதாரண விஷயமாகவும், பல்வேறு பரிமாணங்களை கொண்ட சோக நிகழ்வுமாகும்.

அது புனிதராக்கப்பட்ட சரிதமாக அல்லாமல்,நிச்சயமாக, நடுநிலையாக சித்தரிக்கப்பட்ட படமாக இருக்கும். நீங்கள் ஒரு ஆளுமையின் இதயத்தை உணர வேண்டும், அது இல்லாமல், எந்தவகையிலும் அவர் ஒரு மனிதராக இருக்க முடியாது. ஒரு வழக்கமான அரசியல் வாதியாக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் வங்கத்தின் தேசியவாதியாக முஜிப் உருவானார்.அவர் ஒரு அசாதாரணமான, ஈர்ப்புமிக்க தலைவராகவும், தனது பேச்சை கேட்பவர்களை மயக்கும் அளவுக்கு அளப்பரிய பேச்சாளராகவும் திகழ்ந்தார். என்னை ஈர்த்த விஷயம் என்னவென்றால், அவர் மிகப் பெரிய தலைவர் என்பதை காட்டிலும், அவர் தனது மக்களை அதிகமாக நேசித்தார் என்பதுதான். கிரேக்க துன்பியல் நாடகத்தில் நீங்கள் சொல்வதைப் போல, அவரது முடிவு மிகவும் சோகமான ஒன்றாகும். அவர் அளவுக்கு அதிகமாக நம்பியதால்தான் வஞ்சிக்கப்பட்டார். அவருக்கு அவ்வப்போது (அவர் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சிகள் குறித்து) எச்சரிக்கப்பட்டது. திருமதி. இந்திரா காந்தி கூட அவரை எச்சரித்திருந்தார்.

மறுபுறம், குடும்ப வாழ்க்கையில் அத்தனை இணக்கமும், முழுமையான பிணைப்பும் கொண்டிருந்த, அவரைப் போன்ற அந்தஸ்தில் இருந்த ஒரு சில அரசியல்வாதிகளில் அவரும் ஒருவர். இது மிகவும் அரிதானது.

கே: இந்த படத்துக்கான கதையை ஷாமா ஜைதியும் இணைந்து எழுதியுள்ளார். அவருடன் உங்களுக்குள்ள பல பத்தாண்டுகள் கூட்டுச் செயல்பாடு பற்றி கூறுங்கள்?
ப : முசெளரியில் எனது மனைவி நிராவுடன் சேர்ந்து பள்ளியில் கூடப் படித்தவர் ஷாமா. இதனால் எங்களுக்கு இடையே இயல்பாகவே சேர்ந்து பணியாற்றும் உறவு உருவானது. ஷாமாவும் படிப்பதிலும், ஆய்வு செய்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர் கதாசிரியராக என்னுடன் பிரதானமாக பணியாற்றிய போதிலும் கூட, எனது தொடக்கக்கால படங்களான மந்தன், பூமிகா போன்றவற்றுக்கு ஆடை வடிவமைப்பாளராகவே பணி செய்து வந்தார்.

பாரத் ஏக் கோஷ் தொடரின் போதுதான் அவர் கதாசிரியராகவும், எடிட்டோரியல் பிரிவின் தலைவராகவும் ஆனார். அதன் பிறகு, அப்போது தொடங்கி, இப்போது வரை என்னுடன் சேர்ந்து அவர் பணியாற்றி வருகிறார்.

கே: 1974 இல் ஆங்கூரில் அறிமுகமாகி, வன்ராஜ் பாட்டியா உங்களது 17 படங்களுக்கு இசை அமைத்துள்ளார் அல்லவா..
ப : வன்ராஜ் பாட்டியாவின் லட்சியம் ஒரு திரைப்பட இசையமைப்பாளராக வேண்டும் என்பதுதான், என்ற போதிிலும், அவருக்கு வித்தியாசமான குணாதிசயமும், மாறுபட்ட உணர்வும் இருந்தது. எனது நூற்றுக்கணக்கான விளம்பர படங்களுக்கு அவர் இசை அமைத்துள்ளார்.

அவர் தனக்கேயுரிய சில விசித்திரமான குணாம்சங்களை கொண்டிருந்தார், இருந்த போதிலும் நாங்கள் ஒன்றாக நன்றாகவே வேலை செய்தோம். எனக்கு எந்த பிரச்னையும் கிடையாது, இருந்தாலும், அவர்தான் என்னைப் பற்றி எல்லோரிடமும் எப்போதும் புகார் சொல்லிக் கொண்டே இருப்பார்.ஒவ்வெரு படத்தின் போதும், இனி ஒருபோதும் உங்களுடன் வேலை பார்க்க மாட்டேன் என்பார், நானும் உடனே அடுத்த படத்துக்கு அவரை கூப்பிடுவேன், அவரும் வந்து விடுவார்.

குறிப்பாக சர்தாரி பேகத்தில் நாங்கள் ஒன்றாக வேலை பார்த்திருந்ததால், ஜூபைதாவுக்கு நான் ஏ.ஆர்.ரஹ்மானை தேர்வு செய்ததும் அவர் மிகவும் வருத்தமடைந்து விட்டார். ஆனால் அவரது பாணி முன்னை காட்டிலும் மிகவும் செவ்வியல் தன்மை கொண்டாக மாறி விட்டது.

கே: உங்களால் கைவிடப்பட்ட பல்வேறு படங்களில், இந்திய பாணியில் எடுக்கத் திட்டமிட்டிருந்த இசைக் காவியமான “கார்மென்” (ஒபரா) வும் ஒன்று. அது போன்று வேறு ஏதும் திட்டம் உள்ளதா?
ப : டஜன் கணக்கில் உள்ளன, அது போன்ற எத்தனையோ படங்களை எடுத்துமிருக்கிறேன். நான் எதற்காகவும் வருத்தப்பட்டதில்லை, எனக்கு இப்போது மிகவும் வயதாகி விட்டது. நான் பத்து வருடங்களுக்கு முன்பே இதற்கெல்லாம் பழகிக் கொண்டு விட்டேன்.

கார்மென் படைப்புக்காக நான் பல முறை தயாராகி இருக்கிறேன், சிறிதளவு படப்பிடிப்பும், ஆய்வும் கூட மேற்கொண்டேன. ஏ.ஆர். ரஹ்மானை வைத்து சிறிதளவு இசையும் கூட தயார் செய்து வாங்கினோம். ஒரு கட்டத்தில் நடிகர்கள் யாரையும் நாங்கள் முடிவு செய்யவில்லை. அந்த நேரத்தில் நடிக்கத் தொடங்கியிருந்த, கரீனா கபூர் போன்ற ஒருவரை நடிக்க வைக்கலாம் என நான் ஆர்வமாக இருந்தேன்.

கே : ஹிந்தி திரைப்பட உலகுக்கும் உங்களுக்கும் இடையிலான உறவு எப்படி இருந்தது? மிகப் பெரிய அளவில் பிரபலமாகாத நடிகர்களை உங்கள் படத்தில் நடிக்க வைப்பதன் மூலம் நீங்கள் ஒரு மாற்றான நட்சத்திர அமைப்பை உருவாக்கியுள்ளீர்கள்..
ப : எப்போதும் பாத்திரங்களின் தேவைக்கேற்பவே நடிகர்களை என் படங்களில் நடிக்க வைக்கிறேன். எப்போதும் எனது முதல் தேர்வு நட்சத்திரங்களை விட நடிகர்கள்தான்- மேலும் நட்சத்திரங்களை நட்சத்திரங்கள் என்பதாலல்ல தேர்வு செய்வது, ஏனெனில் அவர்கள் நல்ல நடிகர்கள் என்பதாலும்தான். உதாரணமாக, ஜூபைதா பேகத்துக்கு நான் கரீஷ்மா கபூரை தேர்வு செய்ததற்கு காரணம் அவர் நட்சத்திரம் என்பதால் அல்ல, அவருக்குள் நான் ஒரு நடிகையை பார்த்தேன்.

கே : ஒரு இயல்பான தோற்றத்தில், ஹிந்தி நட்சத்திரம் ரேகாவை “கல்யுக”த்தில் நடிப்பதற்கு எப்படி சம்மதிக்க வைத்தீர்கள்?
ப : நான் எப்போதும் ரேகாவை ஒரு படத்திலாவது நடிக்க வைத்துவிட வேண்டும் என விரும்பினேன். அவர் மிகவும் திறமையான நடிகை. ஆனால் நட்சத்திர அந்தஸ்தில் இருந்ததால், நடிப்பை அவர் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை.

லக்ஸ் சோப் விளம்பரத்துக்காக முதன் முதலில் நான் அவருடன் இணைந்து வேலை செய்தேன். அப்போது தான் அவரிடம் மிகப் பெரிய அளவில் நடிப்பாற்றல் இருக்கிறது என்பதை நான் கண்டு கொண்டேன்.

கல்யுகத்தில் நான் அவருடன் வேலை செய்யத் தொடங்கியதுமே, அவர் எவ்வளவு புத்திசாலியான நடிகை என்பதை நான் உணர்ந்து கொண்டேன். குறிப்பாக தமிழ், தெலுங்கு படங்களிலிருந்து வரும் ஒரு சில நடிகர்களிடம் சில வழக்கம் உள்ளது, அவர்கள் உரையாடலை படிக்க மாட்டார்கள்.அவர்கள் அங்கே உட்கார்ந்து கொண்டிருப்பார்கள், உதவியாளர் உரையாடலை அவரிடம் படித்து காட்டுவார், அதன் பின்னர் அவர் காட்சியில் நடிக்கத் தொடங்குவர். ரேகாவும் அதைப் போன்றவர்தான் – அவருக்கு கற்பூர புத்தி.

கல்யுக் படத்துக்கு டப்பிங் பணியின் போது, ஒரு ஒலிப்பதிவு கூடத்தில் நான்கைந்து நாட்கள் இருந்தேன். அப்போது அவரை அழைத்தேன். அவர் என்னை காத்திருக்க வைத்து கடுப்படித்தார். மதிய உணவுக்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக வந்தார். நான் வெறித்தனமாக கூச்சலிட்டேன்.

அடுத்த ஒரு மணி நேரத்தில், அவர் ஒட்டுமொத்த டப்பிங் வேலைகளையும் முடித்து விட்டார். அவர் திரையில் காணும் காட்சியில் உதட்டசைவை பார்த்தே உரையாடல்களை சரியாக அவரால் பேச முடிந்தது. ஒரு கட்டத்தில் எனது உதவியாளர், அவர் ஒரு வார்த்தையை தவறாக உச்சரித்து விட்டார் என்றார். ஆனால் உண்மையில் படப்பிடிப்பின் போது அந்த நாங்கள் திருத்தம் செய்திருந்த வார்த்தையை நினைவில் வைத்திருந்து மிகச் சரியாக டப்பிங்கின் போது பேசினார். அதன் பிறகு நான் உருவாக்கிய படங்களுக்கு எந்த வகையிலும் ரேகா பொருத்தமானவராக இல்லை.

கே : இரண்டு தொழிலதிபர் குடும்பங்களுக்கு இடையிலான பகையை சொல்வதற்கு கல்யுகத்தில் மகாபாரதத்தின் கதை சொல்லல் பயன்படுத்தப்பட்டது. அது எவ்வாறு வந்தது?

ப : பிரீமியர் ஆட்டோமொபைல்ஸின் தலைவரான வினோத் ஜோஷி, என்னிடம் கூறிய தொடர் சம்பவங்களிலிருந்து இது தொடங்கியது.ஒரு தொழிலதிபராக இருந்தபோதிலும், பல்வேறு வழிகளில் பிரிந்த குடும்பத்திலிருந்து வந்த அவருக்கு தோன்றிய சில எண்ணங்களை, என்னிடம் கூறினார். ஒரு வணிகக் குடும்பம் பிளவுபடுவது என்பதில் எனக்கு மிகப் பெரிய ஆர்வம் ஒன்றுமில்லை. ஆனால், அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள மக்கள் விரும்பாத போது என்ன நடக்கும் என்பதை காட்டுவதற்கு ஒரு முன்மாதிரியாகவும், அதை காண்பது சுவாரசியம் அளிக்கக் கூடியதாகவும் இருக்கும் என்று கருதினேன். வினோத் நாடகத்திலும், சிறிதளவு நடிப்பிலும் ஈடுபாடு கொண்டவர். கிரீஷ் கர்னாட் அப்போது மும்பையில் தான் இருந்தார். அவர் எனக்காக கதை எழுதவும், நடிக்கவும் செய்தார். வினோத் ஜோஷியை உதாரணமாக வைத்து மகாபாரதத்தை சமகாலத்தன்மை கொண்ட கதையாக செய்ய விரும்புவதாக கிரீஷிடம் கூறினேன். கிரீஷூம், வினோத்தும் ஒன்றாக அமர்ந்து பேசி, கதையை தயார் செய்து கொடுத்தனர். அதுதான் கடைசியில் கலியுக் திரைப்படமாக மாறியது.

கே : உங்களை “இணை சினிமா” அல்லது இந்தியாவின் “புதிய அலை சினிமா” இயக்குநர் என குறிப்பிடுகின்றனர். இந்த அடையாளங்களை எப்படி பார்க்கிறீர்கள்?
ப : நான் எனது பாணியிலான படங்களை எடுக்கவே விரும்புகிறேன், படங்களை பொறுத்த அளவில் பொழுதுபோக்காக இருக்க வேண்டும். புதிய அலை சினிமா, இணை சினிமா போன்ற இந்த சொற்கள் ஊடகங்களில் உள்ளவர்களால் பயன்படுத்தப்பட்டவை.

சினிமாவுக்கென்று ஒரு தனித்த வடிவம் இருக்க வேண்டும் என உணர்ந்தேன், அதே நேரத்தில் எளிமையான நாடக நடிப்பே திரைப்படமாக இருக்கக் கூடாது, அதுதான் பிரபலமான வெகுஜன சினிமாவாக இருக்கும் என அந்த சமயத்தில் கருதினேன்.

கே:உங்களது படங்கள் வடிவரீதியாக துணிச்சலான முயற்சி இல்லை என இன்று வரையிலும் விமர்சிக்கப்படுகிறதே…

ப : நான் ஒரு போதும் உருவவியல்வாதியாக இருந்ததில்லை, உருவம் சார்ந்த எண்ணத்தில் ஒருபோதும் பணியை நான் தொடங்கியதேயில்லை. உள்ளடக்கமே அதன் உருவத்தை உருவாக்கிக் கொள்ளும் என்பதை நான் எப்போதும் உணர்ந்தே இருக்கிறேன். நான் வாழ்க்கையின் சூழ்நிலைகளையே கையாண்டுள்ளேன், அருவத்தையோ, அரூபமான கருத்தாக்கங்களையோ அல்ல. எனது பெரும்பாலான படங்கள் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றவை. நான் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி, நான் சொல்ல விரும்பிய கதைகள் பார்வையாளர்களின் அனுபவத்துடன் ஏதோ ஒருவகையில் தொடர்பு கொண்டதாக இருந்திருக்கலாம் என்றே நான் கருதுகிறேன். இலட்சிய பார்வையாளர்கள் என்று யாரும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. நீங்கள் பார்க்க விரும்புவது உங்களுக்கு இசைவானதாக உள்ளதா என்பதே முக்கியம். சத்யதேவ் துபே கூறியது போல, நீங்கள் ஒத்திசைவாக இருக்கிறீர்களா, சம காலத்துக்கு ஏற்ப இருக்கிறீர்களா?

இது போன்ற அடையாளங்கள் எல்லாம் அர்த்தமற்றவை. நான் ஷ்யாம் பெனகல், திரைப்பட கலைஞன். எனக்கு எந்த தடுமாற்றமும் கிடையாது – ஒரு படத்துக்கு பாடல்கள் தேவைப்பட்டால், நான் பாடல்களை பயன்படுத்துவேன்.

கே: உங்களது ஒவ்வொரு படங்களும் சமூக, அரசியல் கிளர்ச்சிகளையும், நீதிக்கான தேடலையும், முன்தீர்மானிக்கப்பட்ட பாத்திரங்களை எதிர்ப்பதற்கான தனிநபர்களின் முயற்சிகளையும் ஆய்வு செய்கிறது.இது உங்களை சமூக உணர்வுள்ள திரைப் படைப்பாளி என்ற மற்றொரு முத்திரைக்கு வழிவகுத்துள்ளது இல்லையா…
ப : அன்றாட வாழ்க்கையோடு திரைப்படங்கள் இணக்கமாக இருக்க வேண்டும் என நான் கருதுவதுண்டு. சமூக இயக்கங்களின் உருவாக்கம் குறித்த புரிதல் உங்களுக்கு அவசியம். மேலும் சித்தாந்தங்களின் மோதல், சமூக அமைப்புகளுக்கு இடையிலான பதற்றங்கள், இந்திய சமூகம் எப்படி மாறி வருகிறது – என்பது போன்ற இவற்றில் சில என் படங்களில் இடம் பெற்றுள்ளன. ஆனால் முன்பே பேசப்பட்டதைப் போலவே அவை பேசப்படவில்லை. நேற்று ஆதிக்க சக்தியாக இருந்த ஒன்று இன்றும் ஆதிக்க சக்தியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

அரசியல் வரலாற்றில் முக்கிய திருப்புமுனைகள் நடைபெற்ற கால கட்டத்தில் வளர்ந்தவன் நான்.இந்தியா விடுதலையடைந்த போது நான் சிறுவன். அது எளிதாக கிடைத்த சுதந்திரமாக இருந்துவிடவில்லை. தெலங்கானா இயக்கம் தோன்றியது, முந்தை நிஜாம் மாகாணத்துடன் பிரச்னைகள் எழுந்தன. எனது பள்ளி, கல்லூரி ஆகிய இரண்டிலும் அறிவூட்டப் பருவத்தின் மையப்பகுதியில் இருந்தேன்.

கே : ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய திரை்படத் தணிக்கை வாரிய மறுசீரமைப்புக்காக பரிந்துரைக்கப்பட்ட அரசால் நியமிக்கப்பட்ட குழுவுக்கு நீங்கள் தலை வகித்தீர்கள். தணிக்கை குறித்து உங்களது சொந்த அனுபவம் எவ்வாறு இருந்தது?
ப : தணிக்கையோடு நான் எப்போதும் பிரச்னைகளை சந்தித்தே வந்துள்ளேன். பூமிகாவுக்கு “ஏ” சான்றிதழே தருவோம் என வலியுறுத்தினர். படத்தின் நாயகியை நான் பாலுணர்வு கொண்டவராக சித்தரிப்பதாக அவர்கள் கருதினர். “ஏ” வயது வந்தோருக்கான சான்றிதழ் வழங்கினால், 50-60 சதவீத பார்வையாளர்களை இழக்க வேண்டி வரும்.

நிஷாந்த் படத்துக்கு தணிக்கை அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டது. நான் உயர் அதிகாரிகள் வரையிலும் அணுகினேன். பிரதமர் இந்திரா காந்தியையும் சந்தித்தேன். இறுதியில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கொண்டுரா, மண்டி என பல படங்களுக்கும் நான் போராட வேண்டியிருந்தது.

கே : மண்டி, திரைப்படம் ஒரு விபச்சார விடுதியின் உரிமையாளர், 1975 இன் அவசர நிலையை பற்றிய ஒரு உருவகமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் உண்மை ஏதும் உள்ளதா?
ப : அது அவ்வாறு அல்ல. மண்டி திரைப்படம் குலாம் அப்பாஸின் ஒரு சிறுகதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகும். அவர் அலகாபாத்தில் வசித்து வந்தார். அதன் சிவப்பு விளக்கு பகுதியைப் பற்றி அவர் எழுதியிருந்தார். இந்த கதை ஹவேலியை அடிப்படையாகவும், சிவப்பு விளக்கு ஏரியாவின் ஒரு பகுதியாகவும் வைத்து எழுதப்பட்டது. மோதிலால் நேருவுக்கும் ஹவேலிக்கும் கடந்த காலத்தில் ஏதோ தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. ஒரு வேளை அது கூட இவ்வாறு இணைத்து பேசப்படுவதற்கு காரணமாக இருக்கலாம்.

கே : உங்கள் படத்தை மறுபரிசீலனை செய்ததுண்டா? அவற்றில் ஏதேனும் ஒன்றை மீண்டும் உருவாக்க விரும்புவீர்களா?
ப : நான் எனது படங்களை மறுபரிசீலனை செய்வதில்லை. என்னால் அவற்றை சுமக்க முடியாது. அவற்றில் எந்தவொரு படத்தையும் திரும்ப உருவாக்க (remake) நான் விரும்பவில்லை. அவை குறிப்பிட்ட காலத்துக்கும் இடத்துக்கும் உரியவை.

கே : உங்கள் வாழ்க்கையிலும் தொழிலிலும் இந்த கட்டத்தில் நீங்கள் சினிமாவை எவ்வாறு உணர்கிறீர்கள்?
ப : சினிமா என்பது இப்போது அதன் பழைய அர்த்தத்தில் இல்லை. ஊடகங்களின் ஏராளமான கலப்பு அதில் சேர்ந்து விட்டது. பரிமாற்றத்தின் ஏராளமான கூறுகள் இப்போது அதில் உள்ளன. இப்போது நீங்கள் ஒரு திரைப்படத்தை உருவாக்கும் போது, அது ஒரு பெரிய திரையரங்கு, சிறிய திரை, அல்லது செல்போனில் கூட தெரியும் என்பதை நீங்கள் உணர்ந்திருக்க வேண்டும். பழைய காலங்களில் இவற்றை பற்றி உங்களால் ஒரு போதும் நினைத்துக் கூட பார்த்திருக்க முடியாது. அதன் நீட்சியாக, ஓரளவுக்கு நீங்கள் ஒரு திரைப்படத்தை எடுக்கும் விதத்தை அது பாதிக்கிறது. உள்ளடக்கத்தையும், பாத்திரங்களையும் அது ஒரு குறிப்பிட்ட அழுத்தத்துக்கு உள்ளாக்குகிறது. மிக நெருக்கமான (close-ups) காட்சிகள், அண்மை காட்சிகள் (mid-shots) ஆகியவற்றுடனும், பாத்திரங்கள் உடல் ரீதியாக நன்கு வரையறுக்கப்பட்டனவாகவும் கட்டாயம் இருக்க வேண்டும்.

கே : திரைப்படம் எடுப்பது என்பது இப்போதும் உங்களுக்கு உற்சாகம் அளிப்பதாக உள்ளதா? திரைப் படைப்பாளியாக இருந்ததற்காக எப்போதாவது சோர்வடைந்ததுண்டா?
ப : ஒரு போதும் கிடையாது. ஒரு மருத்துவரிடமோ, அல்லது தச்சரிடமோ நீங்கள் சோர்வடைவதில்லையா கேட்பது போல உள்ளது, ஒரு தொழிலில் நீங்கள் சிறப்பாக இருக்கும் போது சோர்வு ஏன் வரப்போகிறது? என்னுடைய தேர்வுகள், நான் கடந்து வந்த பாதை ஆகியவற்றில் நான் சலிப்படைந்து விட்டேன் என என்னால் சொல்ல முடியாது. நான் தவறு செய்து விட்டேன் என ஒரு நிமிடம் கூட நான் நினைத்தது கிடையாது. ஒரு திரைப்பட படைப்பாளியாக இருப்பது என்பது எழுத்தாளராக அல்லது ஒரு ஓவியராக இருப்பதை போன்றது. இது துல்லியமானதும், உலகளாவிய கண்ணோட்டத்தை கொண்ட செயல்பாடாகும். இது உள்ளூர்தன்மை வாய்ந்தது, அதே வேளையில் உலகளாவியது. வேறு எந்த தொழிலில் இது போன்ற ஒன்றை நாம் பெற முடியும்? நீங்கள் ஆய்வுக்கூடத்தில் இருப்பவரைப் போல நுண்ணோக்கியிலும் தொலைநோக்கியிலும் பார்ப்பவராக இருக்க வேண்டும்.

பங்காபந்து மிகவும் கடினமான எனது இறுதி திரைப்படமாகும். எனது உடலும் மனமும் ஒத்துழைக்கும் வரையிலும் நான் திரைப்படங்களை உருவாக்குவேன்.

நன்றி : ஸ்க்ரோல் டான் இன்
நந்தினி ராம்நாத், செப். 2021
தமிழில் ஹவி

Leave a comment