சத்யஜித் ரே: இந்திய சினிமாவின் முகத்தை மாற்றி தீட்டிய திரைக் கலைஞன்

“நமது படங்கள், அவர்களது படங்கள்” என்ற நூல் அறிமுகத்தில் சத்யஜித்ரே எழுதுகையில், “லண்டனில் தங்கியிருந்த காலம் முழுவதும், பைசைக்கிள் தீவ்ஸ் படத்திலிருந்தும் நியோ ரியலிச சினிமாக்களிலிருந்தும் நாங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் எங்களுக்குள் தங்கியிருந்தன” என்கிறார்.

உலகின் சினிமா முகத்தை மாற்றியதில் இத்தாலியில் விக்டோரியா டிசிகா வின் பை சைக்கிள் தீவ்ஸ் ( சைக்கிள் திருடர்கள்) என்ற திரைப்படம் தொடங்கி வைத்த தாக்கம் வரலாற்று திருப்பு முனையாக அமைந்தது. அது மட்டுமின்றி, அதன் பாணியால் ஈர்க்கப்பட்டு உலகம் முழுவதிலும் பல்வேறு சினிமா ஆளுமைகள் தோன்றி சினிமாவை அதன் அசலான கலை வடிவத்தை நோக்கி வளர்த்தெடுத்ததில் மிகப் பெரிய பங்காற்றினர். அந்த வகையில் இந்தியாவின் பண்பாட்டு கலாச்சார முகம் என போற்றப்படும் சத்யஜித்ரே நியோ ரியலிச படங்களின் தாக்கத்தினால்தான் தனது முதல் படமான பதேர் பாஞ்சாலியை எவ்வாறு எடுப்பது என்பது குறித்த ஒரு தெளிவான முடிவுக்கு வந்தார்.

1921 இல் கொல்கத்தாவில் உள்ள ஒரு செல்வாக்கான குடும்பத்தில் சத்யஜித்ரே பிறந்தார்.இவரது தாத்தா உபேந்திர கிஷோர் ரே (ராய்சவுத்ரி) மிகச் சிறந்த எழுத்தாளர், ஓவியர், வயலின் இசை கலைஞர். வரை அச்சு தயாரிப்பதில் முன்னோடியாகவும், அன்றைய கால கட்டத்தில் இந்தியாவிலேயே மிகச் சிறந்த U. Ray & Sons என்ற அச்சுக் கூடத்தையும் உருவாக்கியிருந்தார். ரே பிறப்பதற்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மறைந்தார்.

ரேயின் தந்தை சுகுமார் ரே அவரது தாத்தா உபேந்திர கிஷோருக்கு மூத்த மகன். இங்கிலாந்து சென்று அச்சுத் தொழில் நுட்பத்தை படித்து வந்து குடும்ப வணிகத்தை மேற்கொண்டிருந்தார். அவரும் லூயி கரோல், எட்வர்ட் லியர் ஆகியோரின் (nonsense literature) பாணியிலான கவிதை, கதை ஆகியவற்றை எழுதி வந்தார். சத்யஜித்ரே பிறந்த போது அவரது தந்தை சுகுமார் ரே நோய்வாய்ப்பட்டிருந்தார்.

ரேயின் தாத்தாவால் தொடங்கி நடத்தப்பட்டு வரும் வங்காள குழந்தை இதழான சந்தேஷ் பத்திரிக்கைக்கு சுகுமார் ரே தொடர்ந்து பாடல்கள், கதைகள், சித்திரங்களை எழுதி பங்களித்து வந்தார். ஆகவே அச்சாக்கம், பதிப்பாக்கம் ஆகியவற்றில் ரேக்கு குழந்தை பருவத்திலேயே ஆர்வம் ஏற்படத் தொடங்கி விட்டது.

1880களில் ராஜா ராம் மோகன்ராயால் தொடங்கப்பட்ட பிரம்மா சமாஜத்தின் மீது ரே குடும்பத்தினருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. ராஜாராம் மோகன் ராய்க்கு பிறகு இதை தாகூரின் தந்தை தேவேந்திரநாத் தாகூர் பொறுப்பேற்றி நடத்தி வந்தார். அக்கால கட்டத்தில் பெண்கள் கல்வி, உடன் கட்டை ஏறுதலுக்கு எதிரான சிந்தனை போன்ற பல்வேறு முற்போக்கு கருத்தாக்கங்களை கொண்டிருந்த பிரம்ம சமாஜத்தின் தாக்கம் பிற்காலத்தில் ரேயின் தேவி, சாருலதா, தீன் கன்யா போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் எதிரொலித்தது.

தந்தையின் மரணத்துக்கு பிறகு அச்சுத் தொழலை நடத்தும் பொறுப்பு ரே வசம் ஆனது.அவர்கள் வசித்து வந்த மிகப் பெரிய வீட்டை விட்டு அவரது தாயுடன் ரேயும் அவரது மாமாவின் வீட்டுக்கு குடிபெயர்ந்தனர். வீட்டு வருமானத்துக்காக தாயார் பின்னல் வேலைகளை கற்றுக் கொடுத்து பணம் ஈட்டி வந்தார். இங்குதான் தனது உறவினர் பெண்ணும், எதிர்கால மனைவியுமான பிஜோயாவை ரே சந்திக்கிறார்.

பாலிகுன்ச் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தொடக்கக் கல்வியை கற்ற ரே, கொல்கத்தா மாகாண கல்லூரியில் பயின்றார். கல்லூரி காலத்தில் தான் அவரது திரைப்பட ஈடுபாடுகள் வளர்ந்தன. அந்த கால கட்டத்தில் இடைவிடாமல் திரைப்படங்கள் பார்ப்பதிலும், கிராமபோன் இசைத் தட்டுக்களில் மேற்கத்திய செவ்வியல் இசையை கேட்பதிலுமாக ஆர்வமாக ஈடுபட்டார். திரைப்படங்களில் அவரது ஆர்வம் நட்சத்திரங்களிலிருந்து இயக்குநர்களை நோக்கி திரும்பியது. சைட் அன்ட் சவுண்ட் இதழுக்கு சந்தாதாரரானார். ரேயிக்கு இயல்பிலேயே ஓவியம் தீட்டும் திறன் கைவரப்பெற்றிருந்தது.

1940 இல் தாகூரின் சாந்தி நிகேதனத்தில் இணைந்து கலை சார்ந்த தனது ஈடுபாடுகளை வளர்த்துக் கொண்டார். அதற்கு முன்பு வரையிலும் மேற்கத்திய ஓவிய ஆளுமைகளின் படைப்புகளை மட்டுமே அவதானித்து வந்த ரேவுக்கு சாந்தி நிகேதன்தான் இந்திய வகை சிற்பங்கள், ஜப்பானின் வரை அச்சுகள், சீனாவின் நீர் வண்ண ஓவியங்கள் உள்ளிட்ட கீழைத்தேய கலைகளின் கதவுகளை திறந்து விட்டது. சாந்தி நிகேதனிலும் ரேவின் சினிமா ஆர்வத்துக்கான பல்வேறு வாசிப்புகள் காணக் கிடைத்தன.

பின்னர் ரே கொல்கத்தா திரும்பிய போதிலும், சாந்தி நிகேதனில் படம் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு இருந்தது.அதே நேரத்தில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்த பிஜோயா மீது அவருக்கு காதல் மலர்ந்தது. அப்போது கொல்கத்தா மிகவும் கொந்தளிப்பாக விளங்கிய கால கட்டமாகும். காந்தியின் வெள்ளையனே வெளியேறு இயக்கம், கொல்கத்தா மீது ஜப்பான் படைகளின் குண்டு வீச்சு என வங்க பூமி ரணகளமாகியது.

இதற்கிடையில் பிரிட்டிஷ் விளம்பர நிறுவனத்தில் ரே பணியில் சேர்கிறார். அந்த கால கட்டத்தில் எழுத்துருவாக்க கலையில் ஈடுபாடு காட்டுகிறார். ரே ரோமன், ரே பிஸாரே போன்ற ஆங்கில எழுத்துருவாக்க வடிவங்களை உருவாக்கினார். இது அவர் மீது பரவலான கவனத்தை ஏற்படுத்தியது.

தனது திரைப்பட ஆர்வத்துக்கு வடிவம் கொடுக்கும் வகையில் கொல்கத்தாவில் முதன்முறையாக 47 இல் கொல்கத்தா திரைப்பட கழகத்தை உருவாக்குகிறார். இதில் முதன் முதலாக அவரது நண்பர்கள் சிலரும் இணைந்து ஐசன்ஸ்டீனின் பேட்டில் ஷிப் பொட்டம்கின் படத்தை திரையிடுகின்றனர். இதைத் தொடர்ந்து இதழ்களுக்கும் நாளேடுகளுக்கும் சினிமா குறித்த கட்டுரைகளை வங்காளத்திலும் ஆங்கிலத்திலும் ரே எழுதத் தொடங்குகிறார். அன்று தொடங்கி 1971 வரையிலும் அவர் எழுதிய கட்டுரைகள் “நமது படங்கள் அவர்களது படங்கள்” என்ற நூலாக பின்னாளில் வெளியானது.

இந்த எழுத்துப் பணியின் ஊடாகவே தனது திரைக்கதை எழுதும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்கிறார். தனது நண்பர் ஹரிசதன் தாஸ் குப்தா உரிமம் பெற்று வைத்திருந்த தாகூரின் காரே பைரே கதைக்கு ரே திரைக்கதை எழுதுகிறார.அதை ஹரி இயக்குவதாக இருந்தது. ஆனால் திரைக்கதையில் சில மாற்றங்களை தயாரிப்பாளர் கூறியதை ரே ஏற்க மறுத்ததால் அப்படம் நின்று விடுகிறது. ஆனால் சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அக்கதைக்கு ரே திரைக்கதை எழுதி அதை படமாக ஆக்கினார். இது குறித்து ரே கூறுகையில், நல்லவேளையாக அப்போது அப்படம் எடுக்கப்பட்டிருக்கவில்லை. அப்போது நான் ஹாலிவுட் திரைப்படப் பாணியில் அந்த திரைக்கதையை எழுதியிருந்தேன். நல்ல வேளையாக அதிலிருந்து தப்பியது என்று குறிப்பிட்டார்.

49 வாக்கில் பிரெஞ்சு இயக்குநர் ஆலன் ரெனே கொல்கத்தாவில் நதிகளை குறித்து படமெடுக்க வருகிறார். அவரை சந்திக்கவும், அவருடன் பயணிக்கவும் ரேவுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அவரது ஆர்வத்தை கண்ட ரெனே, ரேவிடம் திரைப்பட இயக்குநராக விரும்புகிறீர்களா என கேட்க, ஆச்சரியமடைந்த ரே, பதேர் பாஞ்சாலியின் கதை சுருக்கத்தையும், அதறகு அவர் வரைந்து வைத்திருந்த சில காட்சி சித்திரங்களையும் காட்டுகிறார்.

இந்த சூழலில் பிரம்ம சமாஜத்தின் தாக்கத்தில் பிஜோயாவை மும்பை பதிவாளர் அலுவலகத்தில் வைத்து எளிமையாக திருமணம் செய்து கொள்கிறார்.

ரெனே மீண்டும் கொல்கத்தா திரும்பி நடத்திய படப்பிடிப்பில் ரேவின் நண்பர்கள் பன்சி சந்திர குப்தா கலை இயக்குநராகவும், ஹரிசதன் தாஸ் குப்தா உதவி இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். ரேயின் படங்களில் பின்னாட்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சுப்ரதா மித்ரா புகைப்பட கலைஞராகவும் பணியாற்றினார். இப்படத்தில் பங்கேற்க விரும்பினாலும் தான் பணியாற்றிய நிறுவன பணி காரணமாக லண்டனில் உள்ள தலைமையகத்துக்கு ரே அனுப்பப்பட்டார்.

அங்குதான் வரலாற்று திருப்புமுனை நடந்தது. தனது மனைவியுடன் கப்பலில் லண்டனுக்கு பயணித்தார். அங்கு பார்க்க நேர்ந்த பைசைக்கிள் தீவ்ஸ் உள்ளிட்ட நியோ ரியலிச சினிமாக்கள் ரேயிடம் வெகுவாக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்த அனுபவத்தை குறித்து ரே கூறிய அந்த வார்த்தைகள் தான் இந்த கட்டுரை தனக்கான தொடக்க வரிகளாக கொண்டுள்ளது என்பதை நாம் மீள் நினைவு கொள்ளலாம்.

அது மட்டுமின்றி தனது சினிமாவின் உருவம் குறித்தும் தொலை நோக்கு குறித்தும் அவருக்கு மிகப் பெரிய தரிசனம் கிடைக்கிறது. இந்திய சினிமாவை மாற்றி அமைத்த வரலாற்று தருணமாக அது அமைந்து விட்டிருந்தது. நாடு திரும்பும் வழியில் கப்பலில் வைத்து பதேர் பாஞ்சாலிக்கான திரைக்கதையை முழுமை படுத்திய பிறகுதான் தனது தேசத்தில் காலடியை எடுத்து வைக்கிறார். அது இந்திய சினிமாவின் கலை உருவாக்கத்துக்குமான முதல் காலடி.

இப்போதும் முற்றிலும் புதிய படைப்பாளியாக மாறி விட்ட ரே, தனது படத்துக்கான குழுவினரையும் தயாரிப்பாளரையும் தேடும் பணியில் தீவிரம் கொள்கிறார். சுப்ரதா மித்ரா ஒளிப்பதிவாளராகிறார்,அனில் சவுத்ரி நிர்வாக மேலாளர், பன்சி சந்திர குப்தா கலை இயக்குநர் என குழு தயாராகிறது. நிதி நெருக்கடிகள் இருந்த போதிலும் பதேர் பாஞ்சாலி நாவலை எழுதிய அமரர் விபூதி பூஷன் பந்தோபாத்யாயா வின் மனைவி விபூதி பூஷன் பானர்ஜியை கதையின் உரிமத்துக்காக அணுகுகின்றனர். ரேயின் சித்திரங்களால் கவரப்பட்டு, வாய்மொழியாகவே ரேவுக்கு பூஷன் பானர்ஜி வாக்குறுதி அளிக்கிறார்.தயாரிப்பாளர்களுக்கு கதையின் சாரத்தையும் முக்கியத்துவத்தையும் படத்தின் நோக்கத்தையும் விிளக்குவதற்காகவே ரே தன் வசம் ஒரு சிறிய நோட்டு புத்தகத்தை வைத்துக் கொண்டு, அதில் ஏராளமான சித்திரங்கள், வரைபடங்கள், குறிப்புகள் ஆகியவற்றை எழுதி எடுத்துச் செல்வார். அவரது இந்த பாணி பலரை ஈர்த்தாலும் யாரும் தயாரிக்க முன்வரவில்லை.

இதற்காக சுமார் 2 ஆண்டு காலம் கடுமையான சோதனைகளையும் தடங்கல்களையும் ரே சந்திக்க வேண்டியிருந்தது. அப்போது பெரும்பாலான இந்திய படங்கள் அரங்களுக்குள்ளேயே படோடோபமான தளங்களிலேயே படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்ததால், வெளிப்புற படப்பிடிப்பு காட்சிகளை கொண்ட இப்படத்தை தயாரிக்க பலரும் தயக்கம் காட்டினர்.

வேறு வழியின்றி அங்கும் இங்கும் கடன் வாங்கியும், காப்பீட்டு பத்திரங்களை விற்றும், நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் படப்பிடிப்பைத் தொடங்கினார். துர்காவும், அபுவும் நாணற் பூக்கள் மலர்ந்து கிடக்கும் நிலத்தின் ஊடாக ஓடிச் சென்று ஆச்சரியத்துடன் ஓடும் ரயிலை காணும் காட்சி முதன்முறையாக படமாக்கப்பட்டது. இந்த அனுபவம் குறித்து பின்னாட்களில் ரே எழுதுகையில், “நடிகர்கள், கேமராவுடன் நான் மேற்கொண்ட ஒரு நாள் பணி, டஜன் கணக்கான புத்தகங்களை காட்டிலும் அதிகம் கற்றுக் கொடுத்தது”. ஞாயிற்றுக் கிழமைகளிலும், சூரிய காந்தி மலர்கள் பூத்து குலுங்கும் அடுத்த பருவத்திலும் என காத்திருந்து  காத்திருந்து தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தினார். தொழில் முறை நடிகர்கள், நடிப்பில் முன் அனுபவம் இல்லாதவர்கள் என கலவையான கலைஞர்களை கொண்டு கதாபாத்திரங்களை படமாக்கினார். அபுவாக நடித்த சுபீர் பானர்ஜி, அவரது அம்மாவாக நடித்த கருணா பானர்ஜி, கிராமவாசிகள் ஆகியோர் நடிப்பின் வாசனை கூட தெரியாதவர்கள். பாட்டியாக நடித்த 80 வயது மூதாட்டி சுன்பலா தேவி முன்னாள் நாடக நடிகை உள்ளிட்ட ஒரு சிலர் மட்டும் தொழில் முறை நடிப்பு கலைஞர்கள்.

இந்த கால கட்டத்தில் பிமல்ராய் எடுத்த இரண்டு ஏக்கர் நிலம் திரைப்படம் சில பாடல்களுடன், வெளிப்புறங்களில் படம் பிடிக்கப்பட்டு வந்ததுடன், கேன்ஸ் பட விழாவில் விருதையும் அள்ளிச் சென்றது. ஒருவழியாக 1953 இல் அனா தத்தா என்ற தயாரிப்பாளர் படத்துக்கு நிதி உதவி செய்ய முன்வருகிறார்.நிறுவனத்தில் ஒரு மாத காலம் சம்பளம் இல்லா விடுப்பு எடுத்துக் கொண்டு கிராமத்துக்கு படப்பிடிப்புக்கு செல்கிறார் ரே. இதற்கிடையில் படப்பிடிப்புக்கு தேவையான சில ஏற்பாடுகளை அப்பகுதியில் பிஜோய் செய்து வைத்து விடுகிறார். தயாரிப்பாளரின் அண்மைய படம் தோல்வி அடைந்ததால் மேற்கொண்டு பணத்தை கேட்க இயலாத நிலை. பிஜோயின் நகைகளை அடகு வைத்து படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது.ஒருவழியாக படப்பிடிப்பை முடித்துக் கொண்டு நிறுவன வேலைக்கு திரும்புகிறார் ரே. 4000 அடி படச்சுருளை எடிட் செய்ய பணம் இல்லை. அவரது தயாரிப்பு மேலாளராக பொறுப்பில் இருந்த நண்பர் அனில் சவுத்ரி, அப்போதைய மேற்கு வங்க முதல்வர் டாக்டர் பி.சி. ராயை சந்திக்க ஆலோசனை சொல்கிறார். படத்துக்கு நிதி உதவி அளிக்க அரசு சம்மதம் தெரிவிக்கிறது. ரேவுக்கு அவரது மகன் சந்தீப் பிறக்கிறார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு 54 இல் மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. அரசு ஒவ்வொரு கட்டமாகவே நிதியை விடுவிக்கிறது. பல்வேறு இடர்களையும் சந்தித்தபடி பதேர் பாஞ்சாலி வளர்கிறது. படத்துக்கு இசை அமைக்க பிரபல சிதார் கலைஞர் ரவிசங்கரை அணுகினால், அப்போது ரவிசங்கர் ஏராளமான இசை பயண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பரபரப்பாக இயங்கிய நேரமாகும். இதனால் பாதி படத்தையே அவரால் பார்க்க முடிந்தது. அதன் பின்னா் சுமார் 11 மணி நேர அமர்வில் முழு படத்துக்குமான இசையை ரவிசங்கர் அமைத்துக் கொடுக்கிறார். இது மிகவும் களைப்பை ஏற்படுத்தினாலும், இசை அற்புதமாக அமைந்து விட்டிருந்தது என பின்னாளில் ரே இதை குறிப்பிட்டார். நேரமின்மை காரணமாக ஒரு சில காட்சிகளுக்கு ரவிசங்கரால் இசை அமைக்க இயலவில்லை. இந்த இடங்களில் அவரது ஒளிப்பதிவாளரான சுப்ரதா மித்ரா, சிதார் இசைத்து கொடுத்தார். சுமார் 10 நாட்கள் இரவு பகலாக உழைத்து பதேர் பாஞ்சாலியின் முதல் பிரதியை உருவாக்கினர்.

எல்லாம் நல்லபடியாக முடிந்து 1955 ஆகஸ்ட் 26 அன்று அந்த திரைப்பட வரலாற்றின் முக்கிய திருப்புமுனையாக அமைந்த அந்த நிகழ்வு நடந்தேறியது. கொல்கத்தாவில் பதேர் பாஞ்சாலி வெளியாகி மிகப் பெரிய வெற்றியை ஈட்டியது. வணிக ரீதியாகவும் கலை ரீதியாகவும் ரேவுக்கு அப்படம் மிகப் பெரிய வெற்றியை ஈட்டித் தந்ததுடன். இந்திய சினிமாவின் முகத்தை அழுத்தம் திருத்தமாக வடிவமைத்தும் கொடுத்தது. அதன் பிறகு ரேவும் அவருக்கு பின்னர் வந்தவர்களும் எடுத்த படங்கள் அனைத்தும் அனைவருக்கும் வெளிப்படையாக தெரிந்த திரை வரலாறு.

அதன் பிறகு 92 இல் ரே மறையும் வரையிலும், அவர் எடுத்த அபு முத்தொகுப்பு படங்களும், மற்ற படங்களும் இந்திய சினிமாவை உலக கலைகளின் உச்சத்துக்கு கொண்டு சென்ற வரலாற்று சம்பவங்களாகும். திரைப்படத்தின் வாயிலாக ரே இந்திய கலைக்கு ஒரு அரிய வகை கலை பொக்கிஷத்தை அளித்துச் சென்றுள்ளார். அவரது படங்கள் இந்திய கலையின் விலைமதிப்பில்லா அருங்காட்சியகங்கள். அவரது காலத்தின் மீது படர்ந்த இந்திய வெளிச்சத்தால் தீட்டப்பட்ட மனித காவியங்கள் அவை. உலகின் ஆகச் சிறந்த 100 படங்களை பட்டியலிட்டால் முதல் 10 படங்களில் அவரது பதேர் பாஞ்சாலியை யாராலும் தவிர்த்துவிட முடியாது.

இதனால் தான் அகிரா குரோசோவா ரேயின் படங்கள் குறித்து இவ்வாறு கூறினார் :

“அவருடைய அனைத்துப் படங்களும் அமைதியான, ஆனால் ஆழமான அவதானிப்பும், புரிதலும் மனித இனத்தின் மீதான அன்பும் கொண்டவை. அவை என்னை மிகவும் வெகுவாக கவர்ந்தன…திரைத்துரையின் மிகப் பெரிய “ஜாம்பவானாக” அவரை உணர்கிறேன். ரேயின் படங்களை பார்க்காமல் இருப்பது என்பது சூரியனையோ, சந்திரனையோ பார்க்காமல் பூமியில் இருப்பதற்கு சமமானது. பதேர் பாஞ்சாலி எனது மனதில் ஏற்படுத்திய உற்சாகத்தை என்னால் மறக்கவே இயலாது.இது போன்ற சினிமா, ஒரு மிகப் பெரிய நதி அமைதியும் ஆவேசமும் கொண்டு பாய்ந்து செல்லும் தன்மையைக் கொண்டது”.

நன்றி : ரேயின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் உள்ளிட்ட இணையதளங்களுக்கு.

Leave a comment