சிம்பொனி : ஒரு சுருக்கமான வரலாறு

Flute Concert with Frederick the Great in Sanssouci Courtesy of Wikimedia Foundation

உலக சிம்பொனி இசையின் சங்கமம் இன்றைக்கு தானுபே நதிக்கரையில் உள்ள வியன்னாவாக இருந்த போதிலும் அதன் ஆதி தடங்கள் இத்தாலியிலேயே உதயமாகின. இத்தாலியில் உள்ள மிலான் நகரும், லொம்பார்டி பிராந்தியத்தை சுற்றிலுமே 1730களில் தொடக்கக் கால சிம்பொனிகள் இசைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் மிகப் பெரிய ஆச்சரியம் என்னவென்றால், பாரம்பரிய குரலிசை கலையான ஓபராவிலிருந்தே சிம்பொனிக்கான தொடக்கக் கால தடயங்களை காண்கிறோம். இத்தாலிய ஒபராக்களில் தொடக்கத்தில் இசைக்கப்பட்ட இசை வடிவங்கள் சின்போனியா என அழைக்கப்பட்டன. இவற்றிலிருந்தே நவீன கால கட்டத்தில் இசைக்கப்பட்ட இசைக் கோர்வைகளுக்கு சிம்பொனி என்ற பெயரை உருவாக்கிக் கொண்டதாக கருதவும் இடமுண்டு. அதே நேரத்தில் பண்டைய கிரேக்க சொல்லான சிம்பொனியா என்பதற்கு கூட்டாக இசைத்தல் என்ற பொருளும் உள்ளது. அதே நேரத்தில் பல்வேறு கால கட்டங்களில் இந்த சொல்லின் பொருள் மாறுபட்டு வந்த போதிலும் பெரும்பாலும் அது இசையுடன் தொடர்புடையதாகவே இருந்து வந்துள்ளது. அது படிப்படியாக தற்போது கூட்டாக இசைக்கப்படும் கருவியிசைகளுக்கான பெயரை கண்டடைந்தது.

தொடக்கக் கால சிம்பொனி 3 இயக்கங்களை மட்டுமே கொண்டிருந்தது. நமது தமிழில் கூறுவதாக இருந்தால் எடுப்பு தொடுப்பு முடிப்பு என்பதான பாணியில் அது அமைந்திருந்தது. அதை அலெக்ரோ, அன்டான்டே, ஃபினாலே என்பதாகவும், துரிதம் மெது துரிதம் என்பதாகவும் அதன் இயக்கங்கள் இருந்தன. அதே போல தொடக்கக் கால கட்டத்தில் மிகவும் குறைவான 20 முதல் 30 எண்ணிக்கையிலான இசைஞர்களுக்கானதாகவும், சுமார் 10 முதல் 20 நிமிட நேரங்களை கொண்டதாகவுமே அதன் வடிவம் காணப்பட்டது.

தொடக்கக் கால சிம்பொனிக்கான வடிவத்தை உருவாக்கியதில் இத்தாலியின் இசைஞர் ஜியோவான்னி பாடிஸ்டா சம்மர்தினி மிகவும் முக்கிய பங்காற்றினார். அவரது பெரும்பாலான இசைக்கோர்வைகள் மூன்று இயக்கங்களை கொண்டதாகவும், துரிதம் மெது துரிதம் ஆகிய கால பிரமாணத்தில் இயங்குவதாகவும் காணக்கிடைக்கின்றன. இது சொனாட்டாவின் முந்தைய வடிவம் என்று கூறலாம். அடுத்தடுத்த கால கட்டங்களில இந்த சொனாட்டா வடிவம் மிகப் பெரிய அளவில் பல்வேறு இசைஞர்களாலும் பயன்படுத்தப்பட்டு மெருகேற்றப்பட்டது.

இந்த வடிவத்துக்கு கிடைத்த வரவேற்பும், ஆதரவும் வெகுவேகமாக ஐரோப்பா முழுவதும் அது பரவுவதற்கு காரணமாக அமைந்தது.
வியன்னாவை சிம்பொனி சென்று சேர்வதற்குள் ஐரோப்பாவின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கும் அதன் தொடக்கக் கால வடிவங்கள் சென்று விட்டிருந்தன. பிரான்ஸில் உள்ள பாரீஸ், ஜெர்மனியில் உள்ள மன்ஹெய்ம் உள்ளிட்ட பிராந்தியங்களுக்கு 1700களின் மத்தியில் இவை தங்களது இசையை எழுப்பத் தொடங்கியிருந்தன. ஐரோப்பாவின் ஆற்றல் மிக்க இசை மையங்களில் ஒன்றாக மன்ஹெய்ம் விளங்கியது.அங்குதான் பொகிமியன் இசைஞரான பண்டைய செக் பிராந்தியத்தைச் சேர்ந்தவரான ஜோஹன் ஸ்டாமிட்ஸின் ஐரோப்பாவின் தலை சிறந்த இசைக்குழு வளர்ச்சி பெற்றது. மன்ஹெய்ம் பாணியின் தந்தை என இவர் போற்றப்படுகிறார். மேலும் பரோக் மற்றும் செவ்வியல் கால கட்டங்களுக்கு இடையில் மாறும் பாணியை இவரது இசை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மன்ஹெய்ம் சிம்பொனியால் மட்டுமின்றி இசைக்குழுக்கள் வலுவாக நிலைபெற்ற ஐரோப்பிய நகரங்களில் மிகவும் பிரதானமாக உருப்பெற்றது. அவ்வாறு இயங்கிய இசைக்குழுக்கள்தான் சிம்பொனி வளர்ச்சி அடைவதற்கான ஆதார சக்தியாக விளங்கின. மிகவும் படைப்பூக்கத்துடனும், ஆற்றலுடனும், கற்பனாப்பூர்வமாகவும் இயங்கிய அந்த குழுக்களின் வழியாகவே சிம்பொனி படிப்படியாக பூப்படையத் தொடங்கியது. ஸ்டாமிட்ஸ்தான் சிம்பொனியில் கூடுதலாக ஒரு இயக்கத்தை சேர்த்து நான்கு இயக்கமாக சிம்பொனிக்கு வடிவத்தை கொடுத்தார். மினட், ட்ரையோ ஆகியவையே அவை ஆகும். இறுதி இயக்கத்துடன் கூடிய விரைவான முடிவுக்கு முன்பாக தனது மூன்றாவது இயக்கத்தை வைத்தார். அதே போல சோனாட்டா வடிவிலான சிம்பொனியின் நீளத்தையும் அவர் அதிகரித்தார். அதே போல கருப்பொருள்களுக்கு இடையில் மாறுபாடு, ஓபோஸ், ஹார்ன் போன்ற புதிய கருவிகள் ஆகியவற்றையும் இணைத்து இசைக்குழுக்களின் அளவையும் விரிவாக்கம் செய்தார்.

அதே போல சிம்பொனியின் தொடக்க கால வடிவங்களை உருவாக்கியதில் மற்றொரு முக்கியமான இசைஞர் ஜியோவானி பாடிஸ்டா சம்மர்தினி (Giovanni Battista Sammartini). இவர் பிரான்ஸ் நாட்டின் ஓபோ இசைஞர் அலெக்ஸிஸ் செயின்ட் மார்டினின் மகனாக இருந்த போதிலும், ஜியோவானி பெரும்பாலும் தனது காலத்தை இத்தாலியில் உள்ள மிலன் நகரத்திலேயே கழித்தார். ஆன்மிக இசைக் கலைஞராக திகழ்ந்த ஜியோவானி இத்தாலிய ஒபராக்களுக்கான முன் தொடக்க இசையை உருவாக்கியதிலும், தொடக்க கால சிம்பொனியை உருவாக்கியதிலும் முக்கிய பங்காற்றினார். இவரது இசை நிகழ்த்துதல் இத்தாலிக்கு வெளியிலும் அறியப்பட்டிருந்தது. மிலன் மக்களுக்கு மிகவும் பிடித்த இசைஞராக இவர் செயல்பட்டார். இவரால் ஈர்க்கப்பட்டு கிரிஸ்டோப் க்ளூக் போன்றவர்கள் இவரது மாணவர்களாக இவரிடம் இசை பயின்றனர்.

இவ்வாறு அவர்களிடம் தனது குழந்தை பருவத்தை கண்டடைந்து பதின் பருவத்தை நோக்கி நடந்த சிம்பொனி ஆஸ்திரியாவின் இசை மேதையாகவும், வியன்னாவின் முக்கியமான இசைஞராகவும் விளங்கிய ஜோசப் ஹைடனிடம் வந்து சேர்ந்த போது சிம்பொனி பருவ செழிப்புடன் வளர்ச்சி பெற்றது. தானுபே நதியின் தீரத்தில் சிம்பொனிக்கு ஆகச் சிறந்த வடிவத்தை கொடுத்த மூலவராக ஜோசப் ஹைடன் விளங்கினார். அவரிடமிருந்து மொசார்ட் அதை மேலும் வளர்த்தெடுத்து மிகப் பெரிய அளவுக்கு படைப்பூக்கமுள்ள வடிவமாக சிம்பொனியை இந்த உலகுக்கு பரிசளித்து சென்றார்.

சிம்பொனியை மிகவும் ஆக்கப்பூர்வமான வடிவில் உருவம் கொடுத்தவர் ஹைடனே. இன்றைக்கு பொதுவாக சிம்பொனி என்று ஏற்றுக் கொள்ள வடிவத்தை உருவாக்கியவர் அவர்தான். அதனால் அவரை சிம்பொனியின் தந்தை எனக் குறிப்பிடுகின்றனர். அவரிடமிருந்து கற்றுக் கொண்ட மொசார்ட் சிம்பொனியை படைப்பாக்கம் மிக்க செழுமையான கலைப்படைப்பாக உருவாக்கினார். ஹைடன் நான்கு இயக்கங்களை கொண்டதாக அதன் வடிவத்தை தரப்படுத்தினார்.

ஹைடனின் சிம்பொனி பாணி, முதல் இயக்கமாக சொனாட்டா-அலக்ரோ வடிவம், இரண்டாவது இயக்கம் மூன்று கூறுகளைக் கொண்டதான அன்டன்டே வடிவம், மூன்றாவது இயக்கம் மினட் மற்றும் ட்ரையோவை கொண்ட வடிவம், நான்காவதாக இறுதியாக வழக்கமாக கையாளப்படும் ரோன்டோ அல்லது சொனாட்டா வடிவம் என்ற வடிவத்தை கொண்டிருந்தது எனலாம்.

தொடக்கக் கால சிம்பொனி சாகித்தியங்கள் அனைத்தும் மிலன், வியன்னா, மன்ஹெய்ம் ஆகியவற்றை மையமாக வைத்தே எழுதப்பட்டன.
மிலன் நகர பாணியானது ஜியோவானி பாடிஸ்டா சம்மர்தினி, அன்டோனியோ பிரியோச்சி, பெர்டினான்டோ கலிம்பெர்தி, ஜியோவானி பாடிஸ்டா லம்புக்னானி ஆகியோரை மையப்படுத்தி வளர்ச்சி அடைந்தது. வியன்னா பாணியானது தொடக்கக் காலத்தில் ஜியோர்க் கிறிஸ்டோப் வாகென்செயில், வென்ஸெல் ரெய்மன்ட் பிர்க், ஜியோர்க் மத்தியாஸ் மோன், ஆகியோரோடும், பின்னர் வியன்னாவின் குறிப்பிடத்தக்க இசைஞர்களான ஜோகன் பாப்டிஸ்ட் வன்கல், கார்ல் டிட்டர்ஸ் வோன் டிட்டர்ஸ்டோர்ப், லியோபோல்ட் ஹாப்மன் ஆகியோரை மையப்படுத்தியும் வளர்ச்சி அடையத் தொடங்கியது. மன்ஹெய்ம் பாணி ஜோகன் ஸ்டாமிட்ஸ்சை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சி அடைந்தது.

அதே வேளையில் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஹைடன் சுமார் 36 ஆண்டுகளில் 107 சிம்பொனிகளையும், மொஸார்ட் 24 ஆண்டுகளில் 47 சிம்பொனிகளையும் இயற்றி வியன்னா பாணியை வளப்படுத்தியதுடன் சிம்பொனிக்கே முகவரிகளாக மாறுகின்றனர்.பீத்தோவான் சிம்பொனியை மிகவும் பிரமாதமான முறையில் விரிவாக்கம் செய்தார். அவரது எண்.3 ஆவது சிம்பொனியான தி எரோய்கா, அவரது முந்தைய படைப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு மிகவும் உணர்ச்சிப் பூர்வமான அம்சங்களை கொண்டதாக விளங்கியது. அதே போல எண்.5 சிம்பொனி முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் பிரபலமானதாக விளங்கியது. அதே போல 6 சிம்பொனியில் பறவைகளின் குரல்கள், புயல் ஆகியவற்றை கருவியிசை மூலம் நிகழ்த்தி காண்பிக்கும் அதிசயத்தை நிகழ்த்தியது. சிம்பொனி வரலாற்றையே புரட்டி போடும் அளவுக்கு அவரது சிம்பொனி எண்.9 கருவியிசை, கூட்டுக் குரல், தனிக்குரல், பாடகர்களுக்கான வெளி ஆகியவற்றை மிகச் சிறந்த அளவில் நெய்ததுடன் ஒரு நூற்றாண்டு உணர்ச்சிகளை படம் பிடிக்கும் வகையில் மாபெரும் உணர்வெழுச்சியை உள்ளடக்கியதாக விளங்கியது. ஆனால் குரல் மற்றும் கருவியிசைக்கான நுட்பமான சிம்பொனி வடிவை அவருக்கு முன்னதாகவே ஹெக்டர் பெர்லியோஸ் கோரல் சிம்பொனி என்ற பெயரில் கையாண்ட போதிலும் அதன் உச்சபட்ச அழகியலுக்கு எடுத்துச் சென்றது பீத்தோவானின் சிம்பொனி எண்.9.

தொழில் முறைரீதியான இசைக்குழுக்களின் மிகப் பெரிய எழுச்சியுடன் சுமார் 1790 கள் தொடங்கி 1820க்கு இடையிலான கால கட்டத்தில் சிம்பொனி ஒரு பிரதான இடத்தை வகிக்கத் தொடங்கியது எனலாம். 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் Charles-Marie Widor, அவரது மாணவர்கள் Charles Tournemire, Louis Vierne போன்ற சில பிரெஞ்சு இசை அமைப்பாளர்கள் தங்களது ஆர்கன் இசைக் கோர்வைகளுக்கு சிம்பொனி எனப் பெயரிட்டனர். அவர்களது இசைக் கருவிகள் கச்சேரி நிகழ்த்துதல் பாணிக்கான ஒரு திறப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தன. இதில் Aristide Cavaillé-Coll போன்றவர்கள் ஆர்கன் இசையில் மிகவும் சிறந்தவர்களாக விளங்கினர்.

சிம்பொனி இசை வரலாற்றில் அதன் தடத்தை மாற்றி அமைத்த சில முக்கியமான சிம்பொனிகள் என சிலவற்றைக் குறிப்பிடலாம். அவற்றில் கார்ல் பிலிப் இமானுவேல் பாஹ் 1756 இல் இயற்றிய இ மைனர் Wotquenne 177, Helm 653 சிம்பொனி, மொசார்ட் 1788 இல் எழுதிய ஜி மைனர் எண் 40, கே. 550 சிம்பொனி, பீத்தோவான் 1808 இல் இயற்றிய சி மைனர் எண். 5 சிம்பொனி, பெலிக்ஸ் மாண்டெல்ஸ்ஸான் 1842 இல் ஏ மைனரில் எழுதிய எண்.3 ஸ்காட்டிஷ் சிம்பொனி, பியோதர் இலியிச் டிசாய்கோவிஸ்கி 1893 இல் இயற்றிய பி மைனர் எண்.6 பேத்தட்டிக் சிம்பொனி, இகோர் ஸ்ட்ராவின்ஸ்கி 1940 இல் எழுதிய சி ஸ்கேலில் எழுதிய சிம்பொனி, கிரிஸிஸ்டோப் பென்டர்க்கி 1995 இல் எழுதிய எண்.3 ஆகியவை குறிப்பிடத்தகுந்தவையாக இசை விமர்சகர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது.

20 ஆம் நூற்றாண்டில் தொடக்கத்தில் சிம்பொனி மேலும் பல்வேறு புதுமைகளை கண்டடையத் தொடங்கியது. Gustav Mahler மிகவும் நீளமான சிம்பொனி இசைக் கோர்வைகளை எழுதினார். அவரது எட்டாவது சிம்பொனி 1906 இல் Symphony of a Thousand என்ற பெயரில் இயற்றப்பட்டது. அதற்கு காரணம் அதை இசைப்பதற்கு ஆயிரம் இசைக் கலைஞர்கள் தேவையாக இருந்தனர். இவ்வாறாக சிம்பொனி இருபதாம் நூற்றாண்டின் தொழில் நுட்பத்தின் வசதியுடன் மிகவும் பிரம்மாண்டமான உருவத்தை வந்தடைந்தது.அதே நேரத்தில் பாணி, வடிவம், நிகழ்த்துதல் ஆகியவற்றிலும் பன்மைத்தன்மை உடையதாக சிம்பொனி மாற்றம் அடைந்தது. இருந்த போதிலும் Dmitri Shostakovich, Sergei Rachmaninoff, Carl Nielsen போன்றோர் மரபான வடிவில் சிம்பொனிகளை எழுதி வந்தனர். போலவே Jean Sibelius, Alan Hovhaness போன்றோர் புதுமையான வடிவில் சிம்பொனியை எழுதி ஒரு மாறுபட்ட இசை அணுகுமுறையை சிம்பொனியில் ஏற்படுத்தினர்.சில மரபான சிம்பொனியை அவர்கள் எடுத்து கையாண்டு முற்றிலும் புதிய வடிவில் மறுஉருவாக்கம் செய்ய படைப்புகளும் இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்டன. இது சிம்பொனி மிகப் பெரிய பரிணாம வளர்ச்சியை நோக்கி நடைபோடத் தொடங்கியதின் அலங்காரமாகவே தோன்றியது. ஆனால் எத்தனை வகைகள்,போக்குகள், பாணிகள் மாறிய போதிலும் அதன் கச்சேரி நிகழ்த்துதல் முறைக்கான பாரம்பரிய இசைக் கோர்வையாகவே சிம்பொனி தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது அதன் சிறப்பம்சமாகும். ஆகவே ஒரு இசைக் கோர்வையை சிம்பொனி என்பதன் அடையாளம் என்பது அதன் ஆதாரமான இசை நுட்பத்தின் தீவிரத்தன்மையை குறிப்பதாகவே இன்றைக்கு பரவலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது எனலாம்.

நன்றி : Course Hero வலைதளத்தில் History of symphony கட்டுரை
கட்டற்ற கலைக் களஞ்சியம் உள்ளிட்ட இணையதளங்கள்

Leave a comment