வியன்னாவை மீட்டிய பால்கன் ஆதிகுடிகளின் தானுபே

மேற்கத்திய இசையில் உலகின் அனைத்து சங்கீதமும் தானுபே நதியில் சங்கமிக்கும் நகரமாக விளங்குவது வியன்னா.உலக இசையின் தலைநகரம் என்று போற்றப்படும் அளவுக்கு வியன்னாவில் என்ன உள்ளது. மேற்கத்திய இசை வரலாற்றில் யாரை கேட்டாலும் வாய் விட்டுச் சொல்லக் கூடிய இசை மேதைகளான மொசார்ட்,ஹைடன்,பீத்தோவான்,ஸ்கூபர்ட், பிராம்ஸ், குஸ்தாவ், ஸ்ட்ராஸ் என மிகப் பெரிய பட்டியலுக்கே ஆதார நிலமாக விளங்கியது வியன்னா. அது மட்டுமா இன்றைக்கும் அதன் தெருக்களில், மூலை முடுக்குகளில், முச்சந்திகளில், பூங்காக்களில், மிகப் பெரிய அரங்குகளில், மக்கள் கூடுமிடங்களில் எப்போதும் ஏதேனும் கன்சர்ட்டோ, ஒரட்டோரியா, ஓபரா, கருவியிசை என மேற்கத்திய இசையில் பல்வேறு பட்ட நிகழ்ச்சிகளும் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் நகரமாக விளங்கி வருகிறது.இந்நகரில் தினமும் ஏதேனும் ஒரு அரங்கில் எப்போதும் மொசார்ட், பீத்தோவான், ஹைடன், ஸ்ட்ராஸ் உள்ளிட்டோரின் சிம்பொனி நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருப்பதை இன்றைக்கும் காணலாம். இதை காண்பதற்காகவும், கேட்பதற்காகவும் உலகம் முழுவதிலும் இருந்து ஆண்டு தோறும் நூற்றுக்கணக்கான இசை ரசிகர்கள் வியன்னாவை நோக்கி குவிகின்றனர். அள்ள அள்ள தீராத இசை வெள்ளத்தை இம்மண் உலகுக்கு வழங்கிக் கொண்டே இருக்கிறது.

அதே போன்று அதற்கு இணையாக இந்தியாவில் உள்ள பழமையான நகரங்கள் சாஸ்திரீய சங்கீதம் எனப்படும் தமிழிசை, கர்நாடக இசை, இந்துஸ்தானி உள்ளிட்ட பாரம்பரிய இசை செழித்து வளர்ந்த இடமாகும். அதிலும் குறிப்பாக ஒவ்வொரு பாணியும் ஒரு குறிப்பிட்ட நகரத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக வழி வழியாக இசைக்கப்பட்டு மெருகேற்றப்பட்டு வந்துள்ளது. அண்மை காலத்தில் இந்த நகரங்கள் இசை நகரங்கள் என யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலிலும் இடம் பெற்றுள்ளன. இதில் கங்கையால் உருவாக்கப்பட்ட நகரம் வாரணாசி சிதார் ரவிசங்கர், ஷெனாய் பிஸ்மில்லா கான, புல்லாங்குழல் ஹரி பிரசாத் செளரசியா, வாய்ப்பாட்டு கிரிஜா தேவி வரையிலான எண்ணற்ற இந்துஸ்தானி ஜாம்பாவான்களை அளித்துள்ளது. அதே போன்று பெங்களுரு, மும்பை, ஜோத்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களும் அதே போன்ற பாரம்பரிய இசை, நடன வடிவங்களை தன்னகத்தே கொண்டு வளர்த்து வந்துள்ளன. தமிழகத்தில் பிற்காலத்தில் சென்னையும், பண்டைய காலத்தில் வையை கரையில் மதுரை, காவிரிக் கரையில் தஞ்சை, பொருநை கரையில் நெல்லை ஆகிய நகரங்களும் கலையாலும், இசையாலும் செழித்து வளர்ந்தன.

மாற்று கலாச்சாரத்தை சேர்ந்தவர்களுக்கு மேற்கத்திய இசை புரிகிறதோ இல்லையோ, அன்றாடம் வெவ்வேறு வழிகளில் ஒவ்வொருவரையும் அவர்களது செவிகளின் வழியே அக உலகை தீண்டியபடியே இருக்கிறது. அதனால் உருவான ஒரு மன உலகம், புலனாகா கனவுகளை தீட்டிக் கொண்டே இருக்கிறது. இதனால் அவர்களது அகமும் புறமும் அவர்களே உணராத வண்ணம் மாறிக் கொண்டே இருக்கிறது. இவை அனைத்துக்கும் ஊற்றுக் கண்ணாக இருப்பது வியன்னா. வியன்னா ஒரு நகரோ, இசை சங்கமமோ, நிலப்பரப்போ மட்டுமல்ல. அது உலக இசைஞர்களின் கூட்டுக் கனவு. பால்கன் ஆதி குடிகளின் மந்திரக் குரல். முடிவே இல்லாமல் ஒலிக்கும் லட்சக்கணக்கான இசைஞர்களின் லட்சிய சிம்பொனி. அது மண்ணாலும், கட்டிடங்களாலும், மரங்களாலும் தெருக்களாலும் மட்டுமே ஆனதல்ல. பல்வேறு ரசிகர்களாலும் தொடர்ந்து பேணப்பட்டு வருவதாலேயே அந்த நகரம் தனது இசை ஆன்மாவை தொடர்ந்து முடிவின்றி ரீங்கரித்தபடி இருக்கிறது. உலகில் எந்த மூலையில் ஒரு இசை கலைஞன் தோன்றினாலும் அவனது முதல்- இறுதி கனவாக இருப்பது வியன்னாவே. வியன்னாவின் ஒவ்வொரு தாவரத்திலும், இலையிலும், நடைபாதை சிறு கற்களிலும் இசையால் அதிர்வூட்ட்பட்ட ஸ்ருதி விடாது சுழன்று கொண்டிருக்கிறது.

ஆஸ்திரியாவின் வடகிழக்கு எல்லையில் ஆல்ப்ஸ் மலைத் தொடர் அடிவாரத்துக்கும் கார்பிந்தியன் மலைத் தொடர் அடிவாரத்துக்கும் நடுவில் தானுபே நதிக் கரையில் அமைந்துள்ள வியன்னாவில் மனித வாழ்வின் ஆதார காற்று இடை விடாமல் லயத்துடன் வீசிக் கொண்டிருக்கிறது. தானுபேவை தொட்டுத் தீண்டிச் செல்லும் போதெல்லாம் உயிரை சலசலக்க செய்யும் ஆயிரம் ஆயிரம் வயலின்களின், பியானோக்களின்,ஹார்ன்களின், செல்லோக்களின், சாக்ஸபோன்களின், டிரம்பெட்டுகளின் இசை முடிவின்றி ஒலிக்கிறது. ஐரோப்பாவின் இரண்டாவது மிகப் பெரிய நதியான தானுபே வியன்னாவை சுற்றிலும் விவால்டியின் வயலினைப் போல முடிவற்று சலசலத்து ஓடுகிறது. சுற்றிலும் மலைத் தொடர்களும், நதியும் என பைம்பொழிலின் மையத்தில் வியன்னா ஒரு ஜலதரங்கத்தை போல அமைந்துள்ளது.

போலவே வியன்னா தனித்த நகராக அல்லாமல் அதன் தொடர்பின் இசை நரம்புகள் தானுபேயின் கரையில் அமைந்துள்ள ஐரோப்பாவின் புடாபெஸ்ட்,பெல்கிராடு, சேரஜோவோ, மூனிச் போன்ற பல்வேறு நகரங்களுடன் பிணைத்து கட்டப்பட்டுள்ளது. அதுவே ஐரோப்பிய கலாச்சாரத்தின் இசையை இடைவிடாது மீட்டியபடி இருக்கிறது. ஐரோப்பாவின் எந்தவொரு நகரத்தில் நடைபெறும் இசையும் வியன்னாவின், தானுபேயின் நரம்புகளை அதிரச் செய்யாமல் நடந்துவிட முடியாது. பாரம்பரிய இசை தொடங்கி நவீன பாப், ராக், ஜாஸ் வரையிலான அனைத்துக்கும் மூல ஊற்றாக வியன்னா தொடர்ந்து உச்சஸ்தாயியில் தனது சோப்ரானோ ஆலாபனையை ஒலிக்கச் செய்கிறது.

வியன்னா இசையைப் போலவே போர்களையும் சந்தித்து வந்துள்ளது. ஆனால் அவை அனைத்தையும் தனது கலையால், குறிப்பாக இசையால் மட்டுமே தன்னை மீட்டும் வியன்னா மீண்டும் வந்துள்ளது.பல்வேறு மன்னர்களின் ஆட்சியிலும் இசையை தக்க வைப்பதற்கான வாழ் முறையை வியன்னா கண்டறிந்து கொண்டுள்ளது. அதற்கான உத்திகளை கற்றுக் கொடுத்தபடி பாய்ந்து கொண்டிருக்கிறது தானுபே. உண்மையிலேயே வியன்னாவில் மட்டும் இசைதான் தன்னை மீட்டிக் கொண்டதே ஒழிய, இசையை யாரும் காப்பாற்றவில்லை. வியன்னாவில் மேற்கத்திய சாஸ்திரிய இசை மட்டுமின்றி, அதன் உள்நாட்டு இசையாலும் பண்பாட்டாலும் அது தன்னை தக்க வைத்துக் கொண்டது. தானுபே நதிக்கரையில் வளர்ந்த ஒரு இசைக்கலாச்சாரமாக வியன்னா வரலாற்றில் வளர்ந்து நிற்கிறது. வியன்னாவை ஆட்சி செய்த ஆஸ்திரிய ஹங்கேரிய ஆட்சியாளர்களானாலும் சரி, ஐரோப்பிய ஆட்சியாளர்களானாலும் சரி வியன்னா தன்னை இசையாலேயே தக்க வைத்துக் கொண்டது. அந்நகரை ஆட்சி செய்யும் யாரும் இசை தவிர்த்து விட முடியாது. மிகப் பெரும் பிரபுக்களும், பேரரசர்களும், இசைக்கான நிதியை கொடையை ஆதரவை தொடர்ந்து அளித்து வந்தனர். இந்த மாயத்தை தானுபே நதிதான் செய்து வந்தது.

நிறைமதி நாளில் பொன்னிறத்திலும், கதிரவனின் கதிரால் மஞ்சள் நிறத்திலும், பனிக்காலங்களில் வெள்ளை நிறத்திலும் மறைமதி நாளில் நீல நிறத்திலும் தானுபே தனது ஜாலத்தை மாற்றி மாற்றி காண்பித்து வந்துள்ளது. நிறமற்ற கூவம் நதியின் ஆதிகனவின் கரையில் அமர்ந்தபடி தானுபேயின் இசைக்கான சொற்களை மீட்டியபடி இருப்பது நதிதான். அடையாற்றின் ஆதி ஒலியில் இருந்து கிளம்பும் நாதங்கள் கார்பிந்தியன் மலைகளையும் தாண்டி சென்றிருக்கக் கூடும்.

தானுபே நதியில் பயணித்த போதுதான் பீத்தோவான் மூன்லைன் சொனாட்டாவை கண்டுபிடித்திருக்க வேண்டும். அதன் அலைகளை கண்டுதான் மொசார்ட் மேஜிக் புல்லாங்குழலை இசைத்திருக்க வேண்டும். ஸ்ட்ராஸின், வசந்தம் செப்டம்பர், குளிர்கால இசையை தானுபே நதியே உருவாக்கிக் கொடுத்தது. ஸ்ட்ராஸ் தொடக்கத்தில் பிரார்த்தனை இசையில் கவனம் செலுத்திய நிலையில் தானுபேயை தொட்டவுடன் அவனது குறிப்புகள் இயற்கையை நோக்கி ஏன் திரும்ப வேண்டும். மலைகளுக்கு மத்தியில் வற்றாத நீரோட்டமாக ஓடும் தானுபே தனது முடிவற்ற ராகத்தால் தன்னை கடக்கும் ஒவ்வொரு இசை கலைஞனையும் மெய்மறக்க செய்து விடுகிறது. அதன் மந்திர சக்திக்குள் தங்களையும் அறியாமல் வீழ்ந்து விடுகிறார்கள்.
வியன்னாவில் வசித்த காலங்களில் பீத்தோவான் தனது இருப்பிடத்தை 69 முறை மாற்றிக் கொண்டார். அங்குதான் அவர் தனது புகழ்பெற்ற 3ஆவது சிம்பொனியான எரோய்காவை, Heiligenstädter Testament ஆகியவற்றை படைத்தார். தற்போது அவர் தங்கியிருந்த பெரும்பாலான இடங்களும் இசை நிகழ்த்துமிடங்களாக நினைவிடங்களாக பராமரிக்கப்படுகின்றன. அங்கு முடிவின்றி பீத்தோவானின் இசை ஒலித்தபடி உள்ளது.

நதி மகத்தானது. காலத்தின் முடிவற்ற ஸ்வரங்களை நதியே எப்போதும் ஒளித்து வைத்திருக்கிறது. ஒருமுறை ஹரி பிரசாத் செளரஸியா தனது புல்லாங்குழலுக்கான அடிப்படை நாதத்தை தனது ஊரில் உள்ள கங்கை நதியிலேயே கண்டடைந்தான்.பதின் பருவத்தில் கங்கை ஓட்டத்தின் தீராத அலைப்பாட்டுக்கு ஏற்ப தனது குழலும் ஒலிக்க வேண்டும் என போட்டியிடத் தொடங்குகிறான். இயற்கை உடனான அவனது போட்டி முடிவின்றி காலத்தில் ஓலித்தபடியே இருக்கிறது. முடிவில் வென்றவர் யார் என்பதை யார் சொல்ல முடியும். தனது குழலுக்குள் செளரசியா மட்டுமா பாஹ் கும், ஸ்கூபர்ட்டும் இன்ன பிறரும் நதியின் முடிவற்ற ஒசைகளை தங்களது நாதத்துக்குள் ஊற்றி செழிக்கச் செய்தனர். வியன்னாவின் மூச்சு காற்று பண்ணைப்புரத்தின் மேற்கு மலைக் குன்றுகளில் மோதி எதிரொலித்தது. வரலாற்றில் இடைவிடாத ஸ்ருதியாக வியன்னா தனது சொனாட்டக்களை வாரி வழங்கி வந்துள்ளது. வரலாற்றின் ஒரு கால கட்டத்தில் தன் பெயரைத் தனக்குத் தானே சூட்டிக் கொண்டது வியன்னா.

பிரபஞ்சம் பிறப்பதற்கு சற்று முன்னதாக மெளனம் பிறந்திருக்கக் கூடும். நீண்ட காலமாக ஆழ்துயிலில் கிடந்த மெளனம், வையையில், பொருநையில்,காவிரிக்கரையில் தன்னை குறித்து தியானித்தவர்களின் புறநீர்மைப் பண்ணை (பூபாளத்தை) கேட்டு சற்றே சோம்பல் முறி்த்தது. அப்போது கரும் வன மலைத்தொடரிலிருந்து உருகி வழியும் தனுபேவின் கரைகளின் மருத நிலங்களில் சலசலத்து புரண்டு படுத்தது. அதிலிருந்து தெறித்த தானிய விதைகள் வியன்னாவின் தொல் நிலங்களில் இசைத் தாவரங்களாகின. ஆதி குடிகள் அவற்றை புசித்தும், பருகியும் வால்ட்ஸ்சையும், கொம்புகளையும், சோப்ரானாவையும் குலவையிட்டனர். ஐரோப்பாவின் தொப்பூழ் கொடியென நீண்டு கிடக்கும் தானுபேயையும் வியன்னாவையும் தாண்டி ஆதி குடிகளின் குலவையை பறவைகள் கொத்தி சென்று பூமியின் நிலமெங்கிலும் எச்சமிட்டன. அவற்றின் எச்சங்களிலிருந்து ஐரோப்பாவின் நிலங்களில் மந்திர செடிகள் வளர்ந்து தொல் கனவை பூக்கச் செய்தன.

தானுபேயில் படகோட்டிய வணிகர்கள் ஈலையும், சாலமோனையும் பிடித்துச் சென்று குறுக்கும் நெடுக்குமாக ஆதி குடிகளின் இசையை பரிமாறினர். வியன்னா தனது மந்திர வளையத்தால் ஐரோப்பா முழுதும் உள்ள இசைஞர்களை ஈர்க்கத் தொடங்கியது. மருத நிலத்தில் விளைந்த புகையிலையின் மயக்கமூட்டும் சுவையும், போதமும் பேரரசர்களையும், பிரபுக்களையும் ஈர்த்தன. வியன்னா தன்னைத் தானே வளர்த்துக் கொள்ளும் பாதையை கண்டு பிடித்தது. சுரத்தின் மூர்க்கத்தோடு சுருண்டு கிடந்த மெளனம், வியன்னாவின் விளை நிலங்களிலும், ஓய்வு தணல்களிலும் சீற்றமடையத் தொடங்கியது. வையையின், பொருநையின், காவிரியின், அடர் ஸ்ருதி படகோட்டிகளின் வழியே தானுபேயில் கலந்தன.

புகையிலைகளாலும், தானியக் கதிர்களாலும், இசைக் கோர்வைகளாலும் வியன்னா குடியிருப்புகளை பெருக செய்தது. ஆக்கிரமிப்பாளர்களும், புலம் பெயர்ந்தவர்களும், விருந்தினர்களும், இசை கலைஞர்களும் தானுபேயின் கரையில் கூடி கலந்தனர். தானுபேயை கடந்து வந்த தண்டவாளங்களில் கரிய புகையை கக்கிய படி ஐரோப்பா முழுவதும் வியன்னாவின் நாதத்தை முழங்கியபடி தொடர் வண்டி குறுக்கும் நெடுக்குமாக பாய்ந்து சென்றது. எப்போதோ வந்து செல்லும் அதன் நிலையத்தில் கரிய புகை கக்கி சென்ற இசைக் குறிப்புகள் குறித்து இசைஞர்கள் முடிவற்று விவாதித்தபடி இருந்தனர். தனது முன்னோடிகளின் ஆசிக்காக இசைஞர்கள் தங்களது இசைக்குறிப்புகளை நிலையங்களில் கையளித்தனர். அவர்களின் இசைக்குறிப்புகளை சுமந்தபடி நூறாண்டுகளாக ரயில் ஐரோப்பாவின் குளிர் நிலத்தில் கரும்புகையை கக்கியபடி சென்று பரிமாறிக் கொண்டிருந்தது. இசைஞர்களின் கனவில் வியன்னாவின் ரயில் ஊதல்கள் புதிய குறிப்புகளை எழுதத் தொடங்கின. படகுகளும், தொடர் வண்டியும் இடையறாது அவர்களை சுமந்தபடி வியன்னாவுக்குள் வந்து சென்று கொண்டிருந்தது. ஏழ்மையின் நெருப்பில் கருகி உயிரை நாதமாக்கிய பல நூறு இசைஞர்களின் உடல்கள் புதைந்து மண் மேடிட்ட தானுபே கரையில் அவர்களது ஆன்மாவை முடிவின்றி ஒலித்தபடி வீற்றிருக்கிறது வியன்னா.

இசையின் போதமும், ஆதி குடிகளின் களி நடனமும், மந்திர நிலமும் இசைஞர்களின் கனவாகின. அனைவரும் வியன்னா நோக்கி திசை தப்பத் தொடங்கினர். தானுபேயின் புணையில் கடந்த பீத்தோவான் மூன் லைட் சொனாட்டாவையும், தானுபேயின் அழகில் மயங்கி, எரோயிகாவையும், மொசார்ட் தானுபேயின் ரகசிய கரைகளில் அமர்ந்தபடி, தி மேரேஜ் ஆஃப் பிகாரோவையும்,என் மொழி உலகம் முழுவதும் பேசப்படுகிறது என்று கூறிய ஹைடன் தானுபே கரையில் எழுதிய நூற்றுக்கணக்கான சிம்பொனிகளையும், ஸ்கூபர்ட் தனது நூற்றுக்கணக்கான படைப்புகளையும், வியன்னாவின் வழிபாட்டுத் தளங்களில் யாருக்கும் புலனாகாமல் மறைந்திருந்து கடவுளின் இசையை இசைத்த பர்கனர் படைப்புகளும்,ஜோகன்னஸ் ஸ்ட்ராஸின் நீல நிற நதியையும் இன்னும் இன்னும் மாக்லர், சோகன்பர்க் உள்ளிட்ட எண்ணற்ற இசைஞர்களின் குறிப்புகளும் அங்கே தாவரங்களாகவும், தானியங்களாகவும் உருமாறின. பால்கன் ஆதி குடிகளின் நடனமும், தாளமும், ஆரோகணமும் தானுபேயில் மிதந்து ஐரோப்பா முழுவதும் அதிர்ந்தபடி யிருக்கின்றன.

இசைஞர்கள் யாரும் வியன்னாவில் பிறக்காத போதும், வியன்னாவின் இசையே தனக்கான இசைஞர்களை தேர்வு செய்து தனது மந்திர உச்சாடனத்தால் அவர்களை தன்பால் ஈர்த்தது. அதன் அழகிலும், கார்வைமிக்க குரலுக்கும் மயங்கிய இசைஞர்கள் வியன்னாவுக்கு வந்து கார்பிந்தியன் தொடர்களை தியானித்தபடி தானுபேயின் கரைகளில் அமர்ந்து அது சொல்லிக் கொடுத்த அலை முணுமுணுப்பை இசைக் கோர்வைகளென எழுதி தள்ளினர். பால்கன் ஆதி குடிகளின் ஆன்மா தங்களது மந்திர சடங்கால் இசையை வியன்னாவின் நிலங்களில் பூட்டி வைத்தனர். இந்த ரகசிய விளையாட்டை கண்டு கொண்ட உலகம் முழுவதும் இருக்கும் இசைஞர்கள் சதா சர்வகாலமும் அவர்கள் ஒளித்து வைத்த இசைக்குறிப்புகளை கண்டுபிடிக்க வந்து கொண்டே யிருக்கிறார்கள். தனது இறுதி காலத்திலேனும் ஒரு சிறு சொனாட்டாவையாவது, குவார்ட்டெட்டையாவது, ஓரட்டோரியாவையாவது தானுபேயின் காதுகளில் ரகசியமாக சொல்லிவிட வேண்டும் என்ற தீராத பித்த நிலையில் காலம் தோறும் வந்து கொண்டேயிருக்கின்றனர்.
பால்கன் ஆதி குடிகள் கையளித்த தானுபேயின் ரகசிய இசை ஆல்ப்ஸ் தொடர்களையும், கார்பிந்தியன் மலைகளையும், தனது மூலாதாரமான கருப்பு வனங்களையும் தாண்டி உலகெங்கும் எதிரொலித்தபடி இருக்கிறது. உலகின் எந்தவொரு அரங்கிலும் சிம்பொனி ஒலிக்கத் தொடங்குகிற போது தானுபேயில் மெலிதாக நீரோட்டம் அதிகரிக்கிறது. அது ஒவ்வொருவரின் இதயத்தின் ரகசிய பாதாளம் வரையிலும் பாய்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்கும் வேட்கையுடன் ஓடி கருங்கடலில் கலக்கிறது. அதன் கரையில் இந்த அலகிலா விளையாட்டை கண்டு களித்தபடியே பிரமாண்டமான இசைத்தாவரமென வீற்றிருக்கிறது வியன்னா.

Leave a comment