மராத்தியில் புதிய அலை சினிமாவுக்கு வித்திட்டவர் : ஜப்பார் படேல்

ஜப்பார் படேல், இந்தியாவெங்கிலும் கடந்த இரு தசாப்தங்களுக்கு முன்பு ஓங்கி ஒலித்த குரல். அம்பேத்கரை திரையில் உயிரோட்டத்துடன் உருவாக்கி இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மனங்களை கொள்ளையடித்தவர். அதற்கு ஏற்ற பாத்திரத்தை வகித்து அம்பேத்கரை நம் கண் முன் கொணர்ந்தவர் நடிகர் மம்முட்டி.

குழந்தை மருத்துவரான ஜப்பார்படேலுக்கு மற்றொரு முகமும் இருந்தது.அவர் தொடக்க காலத்தில் தீவிர நாடகத்துடன் தொடர்புடையவர். மராத்தியில் புகழ் பெற்ற விஜய் டெண்டுல்கர், கர்நாடகாவின் கிரீஷ் கர்நாட் ஆகியோருடன் இணைந்து மாற்று நாடக முயற்சியில் ஈடுபட்டு வந்தவர். இதன் மூலம் மராத்தி திரைப்படத்திலும் தனது முத்திரையை பதிக்க தொடங்கினார்.தனது படிப்புடன் இணைந்து நாடக செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வந்த போதிலும் நாடகத்தின் மூலம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் ஒருபோதும் அவருக்கு ஏற்பட்டதேயில்லை. வணிக நாடகங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல் பரிசோதனை நாடக முயற்சிகளில் ஈடுபட்டு வந்த ஸ்ரீராம் லகூவும், விஜய் டெண்டுல்கரும் இவருக்கு மிகுந்த ஆதர்சனத்துக்குரியவர்களாக இருந்துள்ளனர். இது குறித்து பேட்டி ஒன்றில் கூறுகையில், “லகூஜியின் நாடகம் நடக்கும் போது அவரையே நான் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்பேன். பாணியிலும், நாடக உருவாக்கத்திலும் அவர் மிகச் சிறந்த மேதைமையாளராக திகழ்ந்தார். மேலும் நான் பார்த்திலேயே மிகச் சிறந்த வாசகர் விஜய் டெண்டுல்கர். தனக்கென தனித்துவமான வெளிப்பாட்டு முறையை விஜய் டெண்டுல்கர் கொண்டிருந்தார்” என்றார்.

மராத்தி திரைப்படங்களை பொறுத்தவரையில் தனது சமகால மற்ற இயக்குநர்களிடமிருந்து முற்றிலும் திரைப்படங்களை உருவாக்கியவர் ஜப்பார்படேல். தனது வாழ்நாளில் 5 ஆவணப்படங்கள் உள்பட சுமார் 15 படங்களை மட்டுமே இயக்கி இருந்த போதிலும் அனைத்து பார்வையாளர்கள், விமர்சகர்கள் மத்தியில் மிகவும் கவனத்துக்குரிய இயக்குநராக விளங்கியவர். 1974 இல் அவரது முதல் திரைப்படம் சாம்னா வெளியானதைத் தொடர்ந்து 2014 இல் யஷ்வந்த்ராவ் சவான் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்கியுள்ளார். முதல் படமான சாம்னா பெர்லின் திரைப்பட விழாவில் தங்கக் கரடி விருதை வென்றது.

யஷ்வந்த்ராவ் சவான் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்களில் முக்கியமானவர். அதை காட்டிலும் மகாராஷ்ராவில் மக்கள் தலைவர் என போற்றப்படும் அளவுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவராகவும், மிக சிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் விளங்கினார். காந்தி தலைமையில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையேனே வெளியேறு இயக்கம் போன்ற பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர். நேரு, படேல்,கேசவராவ் போன்ற அன்றைய காங்கிரஸின் முதுபெரும் தலைவர்களுடன் நெருங்கி பழகியவர். சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று, தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து, சிறைக்கு சென்று, பின்னர் 1944 இல் விடுதலையானார். பின்னாளில் சரண் சிங் ஆட்சியின் போது துணை பிரதமராகவும் பதவி வகித்தார்.

மேலும் யஷவந்த்ராவ் சவான் குறித்து கூறுகையில், “ஒரு கலைஞன் என்பவன் சமகாலத்தின் செய்தி தொடர்பாளன். இன்று கலைஞர்கள் உருவாக்கும் ஒவ்வொரு படைப்பும் வரும் தலைமுறையினருக்கு வரலாற்று ஆதாரமாக மாறும். ஒரு திரைப்படத்தால் எதையும் மாற்ற முடியாது. ஆனால் சமூகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை மக்களுக்கு உணர்த்தும்” என அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டார்.

சாம்னா (1974),ஜெய்த் ரே ஜெய்த் (1977), சிங்காசன் (1979) ஆகிய படங்களை எடுத்து சர்வதேச கவனத்தை பெற்றிருந்தார். மராத்தி திரைப்பட துறையில் புதிய அலை சினிமாவுக்கு வித்திட்ட முன்னோடிகளில் முதன்மையானவர் ஜப்பார்படேல். ஜப்பார்படேல் வருகைக்குப் பிறகே மராத்தி படங்களின் உள்ளடக்கத்திலும் தரத்திலும் மிகப் பெரிய மாறுதல்கள் உருவாகின. புதுமையானதும், படைப்பூக்கம் கொண்டதுமான கருப்பொருள்களுடன் சமகால மராத்தி வாழ்வினை பேசு பொருளாக கொண்டவையாக இவரது படங்கள் திகழ்ந்தன. மராத்தியின் மைய நீரோட்ட சினிமாவில் பேச மறுத்த, மறந்த விஷயங்களை பேசுவதற்கு இவரது படங்கள் ஒரு தூண்டுகோலாக விளங்கின.

இதைத் தொடர்ந்து 1982 இல் இவர் எடுத்த உம்பர்தா திரைப்படம் இந்திய சினிமாவில் புதிய பாதை சமைத்தது என்றால் அது மிகையல்ல. உம்பர்தா திரைப்படம் பெண் எழுத்தாளர் ஷாந்தா நிசால் எழுதிய மராத்தி நாவல் பெகாரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இப்படத்துக்கான திரைக்கதையை பிரபல நாடகாசிரியர் விஜய் டெண்டுல்கரும், வசந்த் தேவ் வும் இணைந்து உருவாக்கினர்.
இதில் வரும் மைய கதாபாத்திரத்தை நடிகை ஸ்மிதா பாட்டீலும் கிரீஷ் கர்நாடும் ஏற்று நடித்திருந்தனர். ஒரே சமயத்தில் இந்த படம் ஹிந்தியிலும் உருவாக்கப்பட்டது. ஹிந்தியிலும் ஸ்மிதா பாட்டீலே மைய பாத்திரத்தை ஏற்றிருந்தார்.

தனது சமூகவியல் பட்டப்பிடிப்புக்கு தகுந்த வேலைக்காக கணவரையும், மாமியாரையும் மீறிக் கொண்டு நகரத்திலிருந்து தொலைவில் உள்ள சங்கம்வாடியில் அமைந்திருக்கும் பெண்கள் மறுவாழ்வு மையத்தில் கண்காணிப்பாளராக பணியேற்கிறார். அங்கு அவர் பணியில் பல்வேறு சவால்களையும் சந்திக்கிறார். அதில் இரு பெண்களுக்கு இடையில் ஏற்படும் தன்பால் ஈர்ப்பு விவகாரமும், அதனால் ஏற்படும் பிரச்னைகளும், அவர்கள் தப்பிச் செல்ல முயல்வதும் உள்ளிட்டவை படத்தின் பிரதான பேசு பொருளாகின்றன.

80களில் வரம்புக்குள்பட்ட கால கட்டத்தில் மிகவும் துணிச்சலாக பெண் தன்பால் ஈர்ப்பு விவகாரத்தை மையமாக வைத்து ஜப்பார்படேலும், விஜய் டெண்டுல்கரும் இக்கதையை தேர்வு செய்து படமாக்கியது மிகுந்த தொலை நோக்கையும், பாராட்டுக்கும் உரியதாக அமைந்திருந்தது. இந்த படத்தில் இடம்பெற்றிருந்த லெஸ்பியன் காட்சியானது அதை அடிப்படையாகக் கொண்ட நாவலில் அது போன்ற காட்சி எதுவும் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது. ஏற்கனவே விஜய் டெண்டுல்கர் பெண் தன்பால் ஈர்ப்பு கொண்ட “மித்ராச்சி கோஷ்டா” என்ற நாடகத்தை எழுதியுள்ளார். இது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது. அந்த நாடகத்தின் முடிவில் மைய பாத்திரமான பெண் தன்பால் ஈர்ப்பாளர் இறுதியில் ஒரு ஆணுடன் நிச்சயக்கப்பட்ட திருமணத்துக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டது போல சித்தரிக்கப்பட்டிருந்தது. இப்படம் வெளியாகி 16 ஆண்டுகள் கழித்தே தீபா மேத்தா இயக்கத்தில் உருவான ஃபயர் திரைப்படம் வெளியாகி நாடு முழுவதும் தீவிர வலதுசாரி ஆதரவாளர்களால் கடுமையாக எதிர்கொள்ளப்பட்டு, விவாதப் பொருளாகியதையும் நாம் கவனிக்க வேண்டும்.

உம்பர்தா படம் உருவாக்கம் குறித்து அண்மையில் (2019) ஜப்பார்படேல் தனது அனுபவங்களை பகிர்ந்திருந்தார்.

அதில், “திரைப்படத்தில் இந்த கருப்பொருளை நான் மிகவும் துணிச்சலாக கையாண்டேன்.இந்த படம் ஏராளமான சர்ச்சைகளை உருவாக்கியது. அப்படத்தில் தனது கனவை நிறைவேற்றிக் கொள்வதற்காக தனது கணவனுக்கு துரோகம் செய்ய முனைந்த பெண்ணை சித்தரித்திருந்தேன். இது அப்போது ஆண்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.படம் வெளியான பிறகு நீங்கள் எப்படி இவ்வாறு சித்தரிக்கலாம் என கூறி திருமணமான இரண்டு ஆண்கள் என்னை தாக்க முனைந்தனர். கணவன் மனைவி குறித்து இப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருந்த விதம் குறித்து தேசிய திரைப்பட விருது நடுவர்கள் குழுவினர் காரசாரமாக விவாதித்தனர். இத்தனைக்கும் அந்த நேரத்தில் நடுவர் குழுவில் நடிகர் அசோக் குமார், இயக்குநர் யாஷ் சோப்ரா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் இருவரும் என்னிடம் ஆர்வத்துடன் சில கேள்விகளை கேட்டனர்” என்றார்.

மேலும் கூறுகையில்,
“கணவர் பாத்திரத்துக்கு கிரீஷ் கர்னாட் மிகவும் பொருத்தமாக இருந்தார். அவர் வழக்கமான ஆண்தன்மையுடன்தான் படத்தில் காட்சியளிப்பார், அதே வேளையில் தொந்தரவில்லாமல் மிகவும் அமைதியாக தோற்றமளித்தார். அவர் திரையில் முக்கியமாக தோன்றும் போதெல்லாம், தனது மனைவி பிரிந்து சென்று தனது லட்சியத்தை தொடர முடியும் என தனது தாயை நம்ப வைக்கும் தருணங்களிலும், மனைவியை விட்டு பிரியும் தருணங்களிலும் பார்வையாளர்களிடம் அனுதாபத்தை உருவாக்குவார். ஆனால் கடைசியில் கணவன் செய்த துரோகம் அதையெல்லாம் சிதைத்து விடும். ஸ்மிதா பாட்டீலோடு ஒப்பிடும் போது அவரது பாத்திரம் மிகவும் சிறியதுதான். ஆனால் அதே வேளையில் அந்த பாத்திரத்தை நானே செய்வேன் என கிரீஷ் கூறினார். ஒரே நேரத்தில் மராத்தியிலும் ஹிந்தியிலும் அந்த படம் உருவாக்கப்பட்டது. இரண்டிலும் தனது பங்களிப்பை கிரீஷ் அளித்திருப்பார்” என்றார்.

ஷாந்தா நிஷால் எழுதிய மராத்தி நாவலான பெகாரை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது. இது தொடர்பாக ஜப்பார்படேல் கூறுகையில், ” கணவரின் துரோகத்தை பற்றி அறிந்ததும் சுலபா (ஸ்மிதா பாட்டீல்) வீட்டை விட்டு வெளியேறுவதைத் தாண்டியும் அந்த நாவலில் கதை செல்கிறது. ஆனால் அந்த பகுதியை சேர்க்க வேண்டாம் என விஜய் டெண்டுல்கர் கூறினார். எனவே இது தொடர்பாக ஒரு அறிவிப்பை படத்தின் இறுதியில் சேர்க்க வேண்டியதாகிவிட்டது” என்றார்.

இந்திய சினிமாவின் தன்பால் ஈர்ப்பு படங்களில் இதுவரையிலும் காட்டப்படாத வன்முறைக் காட்சியானது உம்பர்தாவில் மிகச் சிறப்பாக படமாக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு கேதன் மேத்தாவின் ஹோலி (1985), ராஜ் ராவ் கவிதைகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ரியாத் வாடியாவின் பாம்ஹே(1996), ஓனிரின் ஐ ஆம்(2010); கரண் ஜோகரின் பாம்பே டாக்கீஸ் குறும் படங்களின் தொகுப்பு படமான அஜீப் தஸ்தான் யே ஹை (2013). ஆனால் இவைகளை காட்டிலும் பெண் தன்பால் ஈர்ப்பு காட்சியை முதலாவதாகவும் துணிச்சலாகவும் சித்தரித்த ஒரே படம் உம்பர்தா மட்டுமே.

நன்றி : Annette James Ukken எழுதிய JABBAR PATEL FILMMAKING – AN AUTEUR THEORY APPROACH ஆய்வுக் கட்டுரை,பெமினிசம் இன்டியா டாட் காம், இஜம்ப்கட் டாட் ஆர்க், 2019 இல் டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்த ஜப்பார்படேல் பேட்டி.2016 இல் தி ஹிந்துவில் வந்த பேட்டி.

Leave a comment