வன்ராஜ் பாட்டியா : இந்திய புதிய அலை சினிமாவுக்கு இசையால் உயிரூட்டியவர்

இந்திய இசையில் தொடங்கி மேற்கத்திய செவ்வியல் இசையான சிம்பொனி வரையிலும் தனது ஆற்றல்களை விரித்து இந்திய புதிய அலை சினிமாவுக்கு தனது இசையின் மூலம் புதிய உணர்வை ஊட்டியவர் வன்ராஜ் பாட்டியா. இந்துஸ்தானி இசை பற்றிய ஆழமான புரிதலுடன் கூடவே மேற்கத்திய செவ்வியல் இசையையும் திரிபற கற்று தேர்ந்த அவர் இவை இரண்டையும் மிகவும் அறிவுப்பூர்வமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் தனது படைப்புகளில் கையாண்டு அதை வெற்றிகரமாக ஆக்கிய இந்திய இசைக் கலைஞர்களில் முதன்மையானவர். மேறகத்திய செவ்வியல் இசையை கற்றுக் கொள்வதற்காக அவருக்கு கிடைத்த உதவித் தொகைகளும், சன்மானங்களும் இந்தியாவின் மற்றெந்த இசைக் கலைஞர்களை காட்டிலும் அவரை அத்துறையில் மிகவும் ஆழமாகவும் நீடித்தும் நிலைத்து நிற்பதற்கு உதவியாக அமைந்தது. ஒரு வணிகக் குடும்பத்தில் 1927 இல் அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின் வணிக நகரமாக விளங்கிய மும்பையில் பிறந்தார். மும்பையில் உள்ள எலிபின்ஸ்டோன் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு அவர் லண்டன் ராயல் இசை அகாடெமியிலும், பாரீஸில் உள்ள கன்சர்வேட்டரியிலும் மேற்கத்திய செவ்வியல் இசையை பயின்றார். 1960 இல் டெல்லி பல்கலை கழகத்தில் மேற்கத்திய இசையியல் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். இசைக் கலைஞனை வரம்புக்குள்படுத்தும் அந்த பணி அவருக்கு திருப்தியை அளிக்கவில்லை. தனது வாழ்நாள் முழுவதும் இந்திய முழுவதிலும் உள்ள ஊடகங்களுக்கு சாத்தியமான வரையில் இசை கோர்ப்பு பணிகளை செய்து தனது தனித்தன்மையை வெளிப்படுத்தியதுடன் இந்திய-மேற்கத்திய செவ்வியல் இசையில் புதிய தடங்களையும் அவர் உருவாக்கினார். அவர் உருவாக்கிய விளம்பர படங்களுக்கான இசைதான் இந்திய ரசிகர்களின் செவிகளில் முதன் முதலாக இசையாக இருந்தது. பிரபலமான சக்தி சில்க் மில்ஸ், லிரில் சோப் ஆகிய இரண்டும் அவர் இசை அமைத்த ஆயிரக்கணக்கான சோற்றில் இரு சோறுபதம்.

இதுதான் அவரை இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த இணை சினிமா இயக்குநர் ஷ்யாம் பெனகல் வசம் அவரை அடையாளப்படுத்தியது.  இருவரும் இணைந்து இந்திய சினிமாவின் புதிய அலையில் பதித்த தடங்கள் அழுத்தம் திருத்தமானவை. அங்கூர் (1974), மந்தன்(1976), பூமிகா(1977), ஜூனூன்(1978) ஆகிய அவரது தொடக்கக் கால படங்களுக்கும், பின்னர் மண்டி(1983), த்ரிகால்(1985) ஆகிய படங்களுக்கும் பாட்டியா இசை அமைத்தார். குன்டன் ஷாவின்  Jaane Bhi Do Yaaro (1983) படத்துக்கும் பாட்டியா தான் இசை அமைத்தார்.

அதன் பிறகு அவர் தூர்தர்ஷனுக்காக பணியாற்ற சென்றார். அங்கு அவருக்கு மறக்க முடியாத கந்தன், கோவிந்த் நிகலானியின் டெலி பிலிமான தமஸ் ஆகியவற்றுக்கு இசை அமைக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அது அவருக்கு 1988 இல் தேசிய விருதையும் கொண்டு வந்து சேர்த்தது.  அவர் மீண்டும் ஷ்யாம் பெனகலுடன் கைகோர்த்து 1988 இல் Bharat Ek Khoj என்ற தொடருக்காக பணியாற்றினார்.

அவர் தனது பிற்காலத்தில் இந்திய, மேற்கத்திய செவ்வியல் இசை பாணிகளை ஒன்றிணைத்து புதிய இசை வடிவங்களை உருவாக்கும் பரிசோதனை முயற்சிகளிலேயே தனது வாழ்நாளை செலவிட்டார். 2012 இல் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

 அவருடன் பிரபலமான இனவரைவியல் இசை மற்றும் திரை இசை அறிஞர் கிரெக் பூத் உரையாடினார். அப்போது தனது 90 ஆவது வயதிலும் கிரிஷ் கர்னாடின் அக்னி வர்ஷா நாடகத்தை ஓபராவாக மேடையேற்றம் செய்ய வேண்டும் என்ற ஆசையை பாட்டியா வெளிப்படுத்தினார்.

ஆக்லாந்து பல்கலை கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் கிரெக் பூத், Brass Baja: Stories from the World of Indian Wedding Bands (2005), Behind the Curtain: Making Music in Mumbai’s Film Studios (2008) ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.

எனது இசை அப்போதும் இப்போதும் தனித்தன்மை கொண்டதுதான்

பூத் : நீங்கள் எப்படி மேற்கத்திய செவ்வியல் இசைக்குள் வந்தீர்கள்?

பாட்டியா : அது ஒரு விசித்திரமான கதை. நவோதயா பள்ளியில் (New Era School) இந்திய செவ்வியல் இசையின் மூலமாகவே நான் வளர்ந்தேன். எனக்கு அனைத்து ராகங்களும் அத்துப்படி. எனக்கு ஒரு ஆசிரியர் இருந்தார், திரு. குல்கர்னி, அவர் 1942 இல் காலமானார். 1942 இல் ஜப்பானிடம் சிங்கப்பூர் வீழ்ந்த போது, ஏராளமான சீனர்கள் மும்பைக்கு புலம் பெயர்ந்து வந்தனர். அதில் ஒருவர்தான் Miss Yeoh. அவர்தான் எங்களுக்கு பள்ளியில் 3 மாதங்களுக்கு மேற்கத்திய செவ்வியல் இசையை போதித்தார். அது வரையிலும் நான் ஜோகன் ஸ்ட்ராஸின் தி ப்ளூ தானுபேயை கேள்விப்பட்டதேயில்லை. கேட்டதும் அது என்னை ஈர்த்தது. நான் பாடங்களை கவனிக்கத் தொடங்கி விட்டேன்.

அவர் சிறப்பான ஆசிரியராக இல்லை. அவர் ஸ்ட்ராஸின்  Die Fledermaus, La Boheme கேட்க வலியுறுத்தினார். நான் அந்த ஒபராவின் இசைத்தட்டை வாங்கி, ஒவ்வொரு நாளும் மிகவும் கவனமாகக் கேட்டேன். ஆனால் அந்த பாடலை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால், La Boheme உண்மையிலேயே மிகவும் அற்புதமானது. அதை நான் எட்டு முறை பார்த்திருக்கிறேன். அதே போல டிசாய்கோவ்ஸ்கியின் Piano Concert No. 1 ஐயும் நண்பர் ஜஹாங்கீர் ரெடிமோனியின் இல்லத்தில் வைத்து கேட்டிருக்கிறேன். அதை கேட்டதும் அது என்னை என்னவோ செய்து விட்டது. என்னால் வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை.

குழந்தை மருத்துவரும், மிக சிறந்த இசை ஆசிரியருமான மாணிக் பஹத் உடன் 4 ஆண்டுகள் உள்பட மும்பையில் உள்ள அனைத்து ஆசிரியர்களிடமும் நான் இசை கற்றுக் கொண்டேன். நான் ஒரு பியானோ கலைஞராக மட்டும் இருக்க முடியாது என்பதை அவர்தான் எனக்கு உணர்த்தினார். அதனால் அந்த 4 ஆண்டுகளில் அவர் மேற்கத்திய பியானோ இசையின் அனைத்து எல்லைகளையும் எனக்கு காண்பித்தார். எந்தவொரு சிறிய இசைத் துணுக்கையும் என்னால் சரியாக வாசிக்க முடியவில்லை. ஆனால் அவை அனைத்தையும் மனதால் உணர்ந்திருந்தேன். நான் லண்டன் சென்று படித்த வேளையில், பிராம்ஸ், சோபின், பீத்தோவான், ஸ்கூபர்ட், மொசார்ட் உள்ளிட்ட அனைவரையும் நான் அறிந்து கொண்டேன்.

பூத் : செவ்வியல் இசையின் மீதான உங்கள் ஆர்வத்துக்கு பெற்றோர்கள் ஆதரவளித்தனரா?

பாட்டியா : எனது தந்தை ஒரு வியாபாரி. ஜவுளித் தொழில் செய்து வந்தார். எனது பாட்டியா இனத்தவர் அனைவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் பியானோவை கொளுத்த வேண்டும் என ஆவேசம் அடைந்தனர்.அது சோஷலிசமும் காந்திய இயக்கமும் எழுச்சி பெற்றிருந்த நேரமாகும். எனது உறவினரின் மாமனார், அவனை இசை பயில அனுப்பினால், அவன் திரும்பி வந்த பிறகு செளபட்டியில் ஜவுளி (சனா) விற்பார் என்று கூறினார்.

நான் இசை பயில்வதற்கு எனது தந்தை ஆதரவாக இருந்தார். இங்கிலாந்தில் 6 மாதம் இசை பயில நான் பண உதவி தருகிறேன். அதற்குள் உதவித் தொகை பெறாவிட்டால் எல்லாவற்றையும் மூட்டைக் கட்டிக் கொண்டு நான் திரும்பி வந்துவிட வேண்டும் என்றார். அதிர்ஷ்டவசமாக, ராக்பெல்லர் ஃபெல்லோஷிப் உள்பட எனக்கு உதவித் தொகை கிடைத்தது. நான் பாரீசிலும் சென்று பயின்றேன். நான் ஒரு படத்துக்கோ, ரெஸ்டாரெண்டுக்கோக் கூட சென்றதில்லை. ஒரு நாளில் தினமும் 3 மணிநேரம் சிறப்பாக சேர்ந்திசையை கற்றுக் கொண்டேன்.

பூத் : நீங்கள் திரும்பி வந்த பிறகு டெல்லி பல்கலைக் கழகத்தில் பணியாற்றீனீர்கள் அல்லவா…

பாட்டியா : எனது குடும்ப சூழல் சரியில்லாத காரணத்தால் நான் பணியை ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. பல்கலை கழகத்தில் ராக்பெல்லர் பவுண்டேசன் மேற்கத்திய இசையியலுக்கான இருக்கை ஒன்றை உருவாக்கியிருந்தது. அந்த பணியை  நான் வெறுத்தேன்- ஒரு மோசமான இசை கலைஞன்தான் இசையியலாளராக இருக்க முடியும்.

பூத் : மேற்கத்திய இசையியலுக்கு டெல்லியில் யாரேனும் ஆர்வம் காட்டினரா?

பாட்டியா : ஒருவரும் ஆர்வம் காட்டவில்லை.உண்மையில், நான் ஐந்து ஆண்டுகள் பணியாற்றி விட்டு அங்கிருந்து வெளியேறினேன். எனது துறை தலைவர் (டீன்) என்னை அழைத்தார். நீ மிகப் பெரிய புத்திசாலி என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நீ ஒரு முட்டாள் – எனது கல்லூரியில் நான் ஒரு போதும் மேற்கத்திய செவ்வியல் இசையை அனுமதிக்க மாட்டேன். என்னை வெளியே அனுப்பியதில் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் வேலை எனக்கு கை கொடுத்தது. நான் பெரும்பாலான நேரத்தை ஜப்பானிலும் அமெரிக்காவிலும் கழித்தேன்.

பூத் : அப்புறம் ஒரு சமயம் நீங்கள் மும்பை திரும்பிய பிறகு, விளம்பர படங்களுக்கு (ஜிங்கிள்ஸ்) இசை அமைக்கத் தொடங்கினீர்கள் அல்லவா..

பாட்டியா : 1954 இல் நான் விளம்பரப் படங்களுக்கு இசை அமைக்கத் தொடங்கினேன். நான் குறைந்தது 6 ஆயிரம் விளம்பரங்களுக்காவது இசை அமைத்திருப்பேன் எனக் கருதுகிறேன். நான் இணைந்து வேலை செய்யாத ஒரு இசைக் கலைஞர் கூட இல்லாமல் இருக்க முடியாது. ஷரோன் பிரபாகர், கவிதா கிருஷ்ண மூர்த்தி, வினோத் ரத்தோட், உதித் நாராயண் உள்ளிட்டோருடன் பணியாற்றியுள்ளேன்.

என்னிடமிருந்து கற்றுக் கொள்வதற்காக விஜூ ஷா வந்தார். நான் முதலில் நடத்தியது ஸ்ட்ராவின்ஸ்கியின் தி ரைட் ஆஃப் ஸ்பிரிங் என்ற பக்கத்திலிருந்து ஒரு பக்கத்தை. அடுத்ததாக எனக்குத் தெரிந்த விஷயம் என்னவென்றால், தனது சொந்த இசையில் அந்த மெட்டை (ட்யூன்) பயன்படுத்தினார்.

கையில் சல்லிக் காசு இல்லாமல் நான் மும்பைக்குத் திரும்பினேன். துர்கா கோடே என்னிடம் சொன்னார், ஷக்தி சில்க் மில்ஸ்-க்கான விளம்பரப் படத்துக்கு நான் இசையமைக்க வேண்டும், உன்னால் இசைக்க முடியுமா என்றார். அந்த கால கட்டத்தில் விளம்பர படங்கள் சுமார் 3 நிமிட நேரம் கொண்டதாக இருக்கும் ஏனெனில் அதன் இன்னொரு புறம் 3 நிமிட இசைத்தட்டில் பதிவு செய்ததாக இருக்கும். இவை முதலில் வானொலியிலும் பின்னர் திரையரங்குகளிலும் ஒலிக்க விடப்படும்.

எனது விளம்பரப் பட இசையை கேட்ட ஷ்யாம் பெனகல், எனக்கு வாய்ப்பு அளிக்கத் தொடங்கினார். நாங்கள் பாம்பே லேப், பிலிம் சென்டர், பேமஸ் ஸ்டுடியோஸ் ஆகிய இடங்களில் இசைத்தட்டுகளை பதிவு செய்தோம். நான் 5 இசைக் கலைஞர்களை பயன்படுத்தி 50 பேர் இசைப்பது போல ஒலிக்கச் செய்தேன். அதற்கு காரணம் அவர்களுக்கு வித்தியாசமாக இசைப்பதற்கு நான் எதையாவது கொடுப்பேன். இது வழக்கமாக நிகழ்த்துவது போல இருக்காது.

அந்த நேரத்தில் பெரும்பாலான இசை அமைப்பாளர்கள் பஞ்சாப், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். அவர்கள் ஹார்மோனியம் வாசிப்பவர்களாகவும், நாட்டுப்புறக் கலையில் ஆழமாக வேரூன்றி சிறப்பான மெட்டுகளை உருவாக்கினர். ஆனால் அவைகளுக்கு எந்த வரம்பும் கிடையாது.ஒரு முறை இசையமைப்பாளர் ஒருவரிடம் உங்கள் மெட்டில் ஒரு குறிப்பு (key) மிகவும் கூர்மையாக உள்ளது என்று சொன்னபோது, அப்படியானால் அந்த கூர்மையான கீயை அகற்றி விடுங்கள் என்றார்.

இந்த இசை அமைப்பாளர்கள் அனைவரும் முழுக்க முழுக்க இசை நடத்துநர்களையே (arrangers) சார்ந்திருந்தனர். ஒரு வேளை இசை நடத்துநர் இறந்து விட்டாலோ, விலகிச் சென்று விட்டாலோ, அவர்களது இசை முற்றிலும் வேறாக மாறிவிடும்.  ஷபி, ஷங்கர்-ஜெய்கிஷான், செபாஸ்டியன் ஆகியோரை நெளஷாத் தனது பணிக்காக பயன்படுத்திக் கொண்டார். கய்யாமின் இசை நடத்தும் பணியை எனோக் டேனியலை பயன்படுத்திக் கொண்டார்.

பூத் : இதற்கிடையில், நீங்கள் உங்கள் உங்கள் இசை குழுவை ஏற்பாடு செய்து, உங்கள் சொந்த இசை கலைஞர்களை பயன்படுத்திக் கொண்டீர்கள் அல்லவா?

பாட்டியா : எனது ஒவ்வொரு இசைக் குறிப்பையும் நானே வழி நடத்தினேன். என்னிடமே அனைத்து இசைக் குறிப்புகளையும் வைத்திருந்தேன்.

பூத் : உங்கள் திரைப்பட இசை உண்மையில் திரையிசையாக ஒலிக்கவில்லை – அது ஒரு தனித்துவமான பாணி.

பாட்டியா : முதல் படம் ஷ்யாம் பெனகலின் ஆங்கூர். 1972 இல் நாங்கள் ஒன்றாக வேலை செய்யத் தொடங்கினோம். திரைப்பட ஊழியர்கள் வேலை நிறுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், நாங்கள் மெகபூப் ஸ்டூடியோவில் பதிவு செய்தோம். அப்போது போராட்டக்காரர்கள் கூறினர், அது பெனகலின் படம், அவர் நிச்சயம் ஆவணப்படத்துக்காகத் தான் வேலை செய்வார் என்றனர். அப்படித்தான் நாங்கள் தப்பினோம்.

எனது இசை அப்போதும் இப்போதும் தனித்தன்மை கொண்டதாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஜூனூன் படத்தில் ஒரு மழைப் பாடல், Saawan Ki Aayi Bahar, அதை ஆஷா போஸ்லே பாடினார். அதில் மூன்று பல்லவிகளும்(mukhdas) சரணங்களும் (antara) மிகச் சரியாக ஒரே மெட்டில் அமைக்கப்பட்டிருக்கும். வித்தியாசம் என்னவென்றால், இவை அனைத்திலும் இசை அமைப்பு வித்தியாசமாக இருக்கும்.நான் செய்ததிலேயே முதன்முதலாக மிகவும் பிரபலமான பாடல், பூமிகாவில் இடம் பெற்ற Tumhare Bin Jee Na Lage Ghar Mein என்ற பாடல்தான். ஒலிப்பதிவாளர் மிகவும் கடுப்பாகிவிட்டார், அவர் சொன்னார், போயும் போயும் ஒரு சிறுமியை போய் இந்த பாடலை பாட கொண்டு வந்தீர்களே என்றார், நான் சொன்னேன், தெளிவான ஒரு குரல் வேண்டும் என்றேன். அதை பாடியது ப்ரீதி சாகர். அப்போது அவருக்கு வெறும் 14 வயதுதான்.

லதா மங்கேஷ்கர் எனக்காக ஒரு பாடலை பாடியுள்ளார். ஆஷா பல பாடல்களை பாடியுள்ளார். மண்டி திரைப்படத்தில், Chubti Hai Yeh To Nigodi என்ற பாடலை ஆஷா பாடினார். இந்த பாடல் பல நூறாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. என்னால் இந்த வார்த்தைகளை பாட முடியாது, இது மிகவும் ஆபாசமான பாடல் எனக் கூறி ஆஷா மூன்று முறை ஒலிப்பதிவை ரத்து செய்துவிட்டு சென்று விட்டார். எழுத்தாளர் இஷ்மத் சுக்தாயை அழைத்து ஆஷாவிடம் பேசச் செய்தேன். அவர் ஆஷாவிடம் கூறினார், கொச்சையான குத்துப் பாடல்களைப் பாடித்தான் நீ இவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறாய், இதில் என்ன பெரிய வித்தியாசத்தை கண்டு விட்டாய் என கூறியுள்ளார்.

பூத் : வெகுஜன திரைப்பட இசை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

பாட்டியா : வெகுஜன சினிமாவின் ஒருபகுதியாக நான் ஒருபோதும் இருந்ததில்லை. நான் அது போல இசையமைக்க ஒரு போதும் விரும்பியதுமில்லை. அவர்கள் என்னை சகித்துக் கொண்டார்கள், ஆனால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை, இப்போது வரையிலும் கூட.

மக்கள் என்னை மேற்கத்தியன், மேற்கத்தியன் என்கிறார்கள். நான் சொல்கிறேன், சரி, இங்கே “சர்தாரி பேகம்” திரைப்படம் உள்ளது. அதில் தபேலா, சாரங்கி, ஹார்மோனியம் மட்டுமேதான் பயன்படுத்தப்படுத்தியுள்ளோம். இதற்கு என்ன சொல்கிறீர்கள்.

படத்தின் பாடலாசிரியரான ஜாவேத் அக்தருடன் நான் கடுமையாக சண்டை போட்டிருக்கிறேன். ஜூஹூவில் உள்ள தனது வீட்டில் வந்து 9 மணிக்கு என்னை வந்து பார்க்கும்படி சொன்னார், ஒன்பது மணிக்கா என்றேன்? அது என்னால் முடியாது, நான் நேபியன் கடற்கரை சாலையில் உள்ளேன். அவ்வளவு சீக்கிரம் என்னால் அங்கு வரமுடியாது என்றேன். அவர் சொன்னார், காலையில் அல்ல, இரவு ஒன்பது மணிக்கு.

ஒருவழியாக நாங்கள் சந்தித்த போது, எங்கே இசைக் கலைஞர்களை காணோம் என்று கேட்டார். மெட்டைக் கொடுங்கள் பாடலைத் தருகிறேன் என்றார். இசைக் கலைஞர்களா,நான் கேட்டேன், என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள், மெட்டைக் கொடுக்காமல், நான் எப்படி பாடலை எழுதுவேன் என்று எப்படி எதிர்பார்த்தீர்கள் என்று அவர் கேட்டார். வார்த்தைகள் இல்லாமல் நான் ஒருபோதும் மெட்டமைத்தது கிடையாது.

இந்தியாவில் உள்ள சினிமா மற்றும் தொலைக்காட்சி இன்ஸ்டிடியூட்டிலிருந்து வந்த ஏராளமான இயக்குநர்களுக்கு நான் பின்னணி இசை அமைத்துக் கொடுத்திருக்கிறேன். அவர்கள் அனைவரும் மிகவும் குறைந்த செலவில் இசை அமைத்துத் தரும்படி என்னிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டனர். தாங்கள் பிரபலம் ஆனதும் பணம் தருவதாக கூறினர். ஆனால் அப்படி எந்த பணமும் எனக்கு கிடைக்கவில்லை.

கொல்கத்தாவில் உள்ள நியூ தியேட்டர் ஸ்டுடியோஸிலிருந்து எனக்கு பிடித்தமான அற்புதமான திரை இசை கிடைத்தது. ஆர் சி போரல், பங்கஜ் முல்லிக், ஆகிய இவை அனைத்துமே குந்தன்லால் சைகால் பாடிய படங்களின் பாடல்கள். போரலின் இசை இந்த உலகத்துக்கு வெளியே எங்கோ உள்ளது. இந்த இசைக்கோர்வைகள் எனது இசையில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின. அவர்களின் இசையை கவனித்துதான் இசைக்குழுவுக்கு எதிராக ஒரு குரலை எவ்வாறு அமைப்பது என்பதை நான் கற்றுக் கொண்டேன்.  குறிப்பாக, போரலின் இசையில், இசை குழு ஏற்பாடு மிக சிறப்பாக இருக்கும், அதுதான் அவரது இசை சிறப்பாக அமைந்ததற்கும் ஒரு காரணம்.

பூத் : நீங்கள் தூர்தர்ஷன் உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் இசை அமைத்துள்ளீர்கள் அல்லவா, அது உங்களது திரை இசையிலிருந்து முற்றிலும் மாறுப்பட்டு இசைத்தது.

பாட்டியா : தூர்தர்ஷனில் முதன்முறையாக ஒளிபரப்பான கந்தன் மற்றும் தமஸ், நகாப், யாத்ரா போன்ற தொடர்களில் பணியாற்றியுள்ளேன். அது வித்தியாசமாக ஒலித்ததற்கு காரணம் நான் திரைப்பட இசையமைப்பாளர் அல்ல என்பதுதான்.

ஷ்யாம் பெனகலின் பாரத் ஏக் கோஷ் மிகவும் கடுமையான பணி. ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய எபிசோட் வெளியாகும். கோரேகவுனில் உள்ள திரைப்பட நகரில் ஷ்யாம் படப்பிடிப்பு பணியில் இருப்பார், தர்தியோவில் உள்ள பிலிம் சென்டரில் பணியாற்றிக் கொண்டிருப்பேன். தொகுக்கப்படாதவற்றை (rushes) பார்த்து நான் பயன்படுத்திக் கொண்டேன். அந்தளவுக்கு எங்களுக்கு நேரமே கிடையாது.

தொடக்க இசையில் ஒலிக்கும் மந்திரங்கள் வேதங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. நான் பள்ளியிலும், எல்பின்ஸ்டோன் கல்லூரியிலும் சமஸ்கிருதம் கற்றேன். எல்பின்ஸ்டோனில் பேரா. கஜேந்திரகாட்கர்தான் எங்களுக்கு சமஸ்கிருதம் போதித்தார். ஆங்கிலத்தை விட சமஸ்கிருதத்தில் இளங்கலை படிக்கச் சொன்னார். நீ சமஸ்கிருதத்தில் நன்றாக படிக்கும் போது ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்று என்ன செய்ய போகிறாய் ? வாழ்நாள் முழுவதும் நாவல்களை படிக்கலாம், ஏன் அதை போய் படிக்க வேண்டும்? ஒரு நாள் நீ சமஸ்கிருதத்துக்கு திரும்பி வர வேண்டும் என அவர் சொன்னார்.

Bharat Ek Khoj க்கு இசை அமைப்பது கடினமானதுதான், ஆனால் படப்பிடிப்போடு ஒப்பிடும் போது அந்தளவுக்கு கடினமானதல்ல, மேலும் ஷ்யாமுக்கு வயதாகி விட்டது.

பூத் : தற்போது நீங்கள் மீண்டும் ஒபராவுக்கு திரும்பி விட்டீர்கள்.

பாட்டியா : ஐரோப்பாவில் இருக்கும் போது ஒபரா மீது மிகுந்த பைத்தியமாக இருந்தேன். ஒபராவை பார்க்க வேண்டும் என்பதற்காகவே 1952 இல் நான் வியன்னா சென்றேன். பகல் நேரங்களில் நாட்டுப்புற ஒபராக்களையும், மாலை வேளைகளில் செம்மையான வடிவிலான ஒபராக்களையும் கண்டு களித்தேன். ரிச்சர்ட் ஸ்டாரஸின் Der Rosenkavalier (The Knight of the Rose) ஒபராவை லண்டனிலிருந்த போது ஒரு 10 முறையாவது பார்த்திருப்பேன். எனக்கு பிடித்தமான ஒபராக்களில் அதுவும் ஒன்று, போலவே Tchaikovsky இன் Eugene Onegin (opera) வும் ஒன்று.Andha Yug நாடகத்தில் நான் பணியாற்றினேன். ஆனால் அதை இடையிலேயே விட்டுவிட்டேன். ஏனெனில் அதில் உள்ள வார்த்தைகள் மிகவும் மறைபொருள் (abstruse) தன்மை கொண்டவையாகவும், பாடுவதற்கு ஏற்றதாகவும் இல்லாததால் நான் விலகினேன். கிரீஷ் கர்னாட்டின் அக்னி வர்ஷா நாடகத்தை கையில் எடுத்துள்ளேன். அந்த நாடகம் தோல்வியை தழுவியது. திரைப்படமும் தோல்வியடைந்தது. ஆனால் ஒபரா நிச்சயம் தோல்வியடையாது என நம்புகிறேன். அது ஒரு மிகச் சிறந்த ஒபரா.அதில் இந்தியர்கள் நம்ப முடியாத அளவுக்கு சூனியக்காரர்கள், ரத்தம், கொலைகள், தலை துண்டித்தல்கள் என அதில் எல்லாமே உள்ளன.

பூத் : அப்படியானால் அடிப்படையில் அது ஒரு மேற்கத்திய ஒபரா, அப்படித்தானே?

நீங்கள் அப்படிச் சொல்லிக் கொள்ளலாம், ஆனால் அது அனைத்தும் ராகத்தின் அடிப்படையிலானது. நான் ஒரு காட்சியை விவரிக்கிறேன். கதா பாத்திரங்களில் ஒருவரான யவகிரிக்கு இந்திரன் வரம் அளிக்கிறான்.இவ்வளவு சக்தியை எங்கிருந்து பெற்றாய் என அவனது காதலி விஷாகா அவனிடம் கேட்கிறாள். அப்போது தனது உடலின் பாகத்தை வெட்டி நெருப்பில் போட்டு எவ்வாறு தியாகம் செய்தேன் என்பதை விவரிக்கிறான்.மேடையின் முன்புறத்தில் யவகிரி பாடப்பாட,  கோரஸாக மற்றவர்களும் இந்திரனைப் புகழ்ந்து பாட, பின் புறத்தில் இளவயது யவகிரி தனது உடல் உறுப்புகளை ஒவ்வொன்றாக வெட்டி வீசுகிறான். யவகிரி நிர்வாணமாக இருக்க வேண்டும், இல்லையெனில் எவ்வாறு அவனது அவயங்களை வெட்ட முடியுமா? இறுதியாக, இந்திரனிடம் என்னிடம் எஞ்சியிருப்பது எனது கண்கள் மட்டும்தான் என்கிறான். இதை கேட்டு இந்திரன் மகிழ்ச்சி அடைகிறான். அவனை மீண்டும் முழு உருவமாக ஆக்கி விடுகிறான்.

நியூயார்க்கில் ஒப்பனைகள், அரங்க அமைப்புகள் இல்லாமல் இது ஒரு முறை அரங்கேற்றப்பட்டது. கிட்டத்தட்ட ஒபரா முடிந்து விட்டது. – பிரதியின் மூன்று அல்லது நான்கு பக்கங்கள் மட்டுமே இன்னும் மீதமுள்ளன. ஒரு மிகப் பெரிய காட்சியை எழுதி முடித்து விட்டேன்.

நன்றி : ஸ்க்ரோல் டாட் இன் மார்ச் 2017

தமிழில் ஹவி.

(இந்தியாவில் உள்ள மேற்கத்திய செவ்வியல் இசைக் கலைஞர்களில் முதன்மையானவர் வன்ராஜ் பாட்டியா.Fantasia and Fugue in C for piano,  Sinfonia Concertante for strings, the song cycle Six Seasons ஆகியன அடிக்கடி இவரால் மேடையேற்றம் கண்ட இசைப் படைப்புகளாகும். 2019 இல் இவரது  Reverie – ஐ பிரபல செல்லோ இசை கலைஞர் யோ-யோ-மா மும்பையில் மேடையேற்றம் செய்தார். கிரீஷ் கர்னாட்டின் அக்னி வர்ஷா நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு முதல் இரண்டு காட்சிகளை ஒபராவாக 2012 இல் நியூயார்க்கில் மேடையேற்றம் செய்யப்பட்டது. 2021 மே மாதம் தனது 93 ஆவது வயதில் மறைந்தார்.)

Leave a comment