இசையும் ரேயும்

சத்யஜித்ரே தனது தொடக்கக் கால படங்களுக்கு பல்வேறு இந்துஸ்தானி செவ்வியல் இசைக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றினார். தனது முதல் படமான பதேர் பாஞ்சாலிக்கு அவர் இசை அமைத்துத் தர நாடியது அப்போதும் எப்போதும் இந்துஸ்தானி செவ்வியல் இசையில் சிறப்பாக விளங்கிய சிதார் கலைஞர் ரவிசங்கரை. அப்படம் உள்பட அபுவின் முத்தொகுப்பு படங்களுக்கும் பரஸ் பதாருக்கும் ரவிசங்கரே இசையமைத்தார். அதன் பிறகு அவரது இசைப்படமான ஜல்சாகருக்கு உஸ்தாத் விலாயத் கான், தேவி படத்துக்கு அலி அக்பர் கான் என செவ்வியல் இசை கலைஞர்களுடன் ரே பணியாற்றினார்.

1961 இல் தீன் கன்யா படத்திலிருந்துதான் அவரது படங்களுக்கு அவரே இசை அமைக்கத் தொடங்கினார். அதன் பிறகு வேறு எந்த இசை அமைப்பாளரையும் அவர் நாடவில்லை. மேற்கத்திய இசை குறிப்புகள் எழுதுவதில் ரே ஆற்றலை வளர்த்துக் கொண்டார். மேலும் வங்காள இசை கலைஞர்கள் மேற்கத்திய இசை குறிப்புகளை பின்பற்றி இசைக்க பழகவில்லை. எனவே அவற்றை இந்திய இசை குறிப்புகளாக மாற்றுவதற்கு அவர்களுக்கு அதிக காலம் செலவானது. இதனால் பின்னாளில் பெங்காலியிலேயே இசைக் குறிப்புகளை ரே எழுதக் கற்றுக் கொண்டார். இது அவருக்கு மிகச் சிறந்த பலனை அளித்தது.

“தொழில் முறை இசையமைப்பாளர்களுடன் ஒருபோதும் வேலை செய்யாததற்கு காரணம், எனக்கென சொந்தமாக பல இசை கருத்துகள் இருந்தன. மேலும் இசையமைப்பாளர்களை பொறுத்த வரையில், நான் புரிந்து கொண்ட வரையில், ஒரு கட்டத்துக்கு மேல், அவர்கள் அதிகமாக வழிநடத்தப்படுவதை விரும்புவதில்லை என்பதும் ஒரு காரணமாகும்” என ரே குறிப்பிடுகிறார்.

ஜல்சாகரில், பின்னணி இசை கோர்ப்பின் போதுதான் ஒரு சில குறிப்பிட்ட காட்சிகளுக்கு இசையமைப்பாளர் தான் விரும்பிய இசையை வழங்கவில்லை என்பது ரேவுக்கு திடீரென தெரிய வந்தது. இதனால் அப்பகுதியில் இசையை சேர்ப்பதற்காக ரே தனது இசைத் தட்டுகளின் சேகரிப்புகளுக்கு திரும்பினார். அங்கே பின்லாந்து இசை கலைஞர் Jean Sibelius இசைக் கோர்வையை கண்டுபிடித்தார். அவரது சிம்பொனி இசையை பின்னோக்கி இசைக்க செய்தார். இது அப்படத்துக்கு இசை அமைத்த விலாயத் கானின் இசைக்கு மிகவும் சிறப்பான விதத்தில் சற்றும் முரண்படாமல் பொருந்தி போவதை ஆச்சரியகரமான வகையில் ரே கண்டுபிடித்தார்.

படங்களின் தயாரிப்பின் தொடக்கக் கட்டத்திலேயே ரே இசையில் பணி புரிய தொடங்கி விடுவார். சில நேரங்களில் திரைக்கதை எழுதும் போது, அவற்றில் தேவையான குறிப்புகளை அதில் எழுதி வைத்துக் கொள்வார். முழுமையாக படத்தொகுப்பு முடிந்த பிறகு இசை கோர்ப்புக்காக பல நாட்கள் அவர் முழுமையாக ஆய்வில் மூழ்கி விடுவார். இசை கலைஞர்களை கருத்தில் கொண்டு இந்திய இசையிலோ அல்லது மேற்கத்திய இசையிலோ மிகவும் தெளிவாக இசைக்குறிப்புகளை எழுதிக் கொள்வார். இசையைப் பொறுத்த வரையில் அவரது படங்களில் அவை உயிரோட்டமாக பயன்படுத்தப்பட்டதே ஓழிய அவரது சம கால கட்ட மற்ற இந்திய திரைப்படங்களைப் போல வெறும் அலங்காரத்துக்காகவோ, வணிக நோக்கத்துக்காகவோ ஒரு போதும் பயன்படுத்தப்படவில்லை. கதையோாட்டத்தை, கதாபாத்திரங்களை, அவர்களின் உணர்ச்சிகளின் நோக்கங்களை இசையின் மூலம் எளிமையாக பார்வையாளர்களுக்கு புரிய வைப்பதற்காகவே ரே தனது படங்களில் இசையை பயன்படுத்தினார். இசையே இல்லாமல் கூட திரைப்படத்தை ஒரு கலைஞனால் அளிக்க முடியும் என்பதை அவர் ஆழமாக உணர்ந்தே இருந்தார். மேலும் அவரை பொறுத்த அளவில் இந்திய இசை திரைப்படங்களுக்கான இசை வடிவம் இல்லை என கருதினார். ஆகையால் அவர் மேற்கத்திய இசை வடிவங்களின் மீது ஆர்வம் காட்டினார். அதே நேரத்தில் இந்திய இசையின் தனித்தன்மையும், பாரம்பரியமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் ஆழமாக விரும்பினார்.

திரைப்படத்தில் இசையின் பாத்திரம் என்பது விஷயங்களை எளிதாக உணர்த்த வேண்டும் என்பதாகவே அவரது எண்ணம் இருந்தது. “நான் பார்வையாளனாக இருந்தால் நிச்சயம் இசையை பயன்படுத்த மாட்டேன்!… இசை என்பது ஒரு அன்னியமான அம்சம் என்பதை எப்போதும் நான் உணர்ந்திருக்கிறேன். ஒருவரால் இசை இல்லாமல் கூட திரைப்படத்தை உருவாக்க முடியும். இசை இல்லாமலே ஒரு திரைக்கலைஞன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியும்” என ரே நம்பினார். மேலும் பின்னணி ஒலிகளையும், அவற்றையே படைப்பாக்க ரீதியாக பயன்படுத்தி ஒரு பின்னணி இசைக்கான சூழலை உருவாக்கிக் கொள்ளக்கூடிய படைப்பாக்க முறையையும் ரே பரிந்துரைத்தார். இதில் அவர் மிகவும் திறமையாக விளங்கினார் என்பதை அவரது படங்களை பார்க்கும் பார்வையாளர்கள் நன்கு உணர முடியும்.

ஒரு ஆவணப்படத்துக்கு அளித்த பேட்டியில், “நாங்கள் (இந்தியாவில்) பார்வையாளர்களை கருத்தில் கொள்ளாமல் ஓரளவுக்கு இசையை பயன்படுத்துகிறோம். (இல்லையெனில்) கொஞ்சம் அறிவுக்கூர்மை குறைந்த பார்வையாளர்களால் படத்தின் மனநிலையை புரிந்து கொள்ள முடியாது” என்றார்.

இசை குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், “…நாம் விரும்புவது போல இசை இசைக்கப்படுகிறது என்பதை கண்டு கொள்வதில் ஒரு பரவசம் ஏற்படுகிறது. நாம் எவ்வளவுக்கு எவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அதற்கு இசையும் ஈடுகொடுத்து அதற்குரிய விளைவை அளிக்கும். சரியான இசையை கண்டுபிடித்து இசைப்பதில் மட்டுமல்ல, அது காட்சிக்கு அர்த்தப்பூர்வமாக சரியாக பொருந்திப் போகிறது என்பதையும் கண்டு கொள்வதில் தான் இறுதியில் முழுமையான மகிழ்ச்சி ஏற்படுகிறது” என்று குறிப்பிடுகிறார்.

இந்திய இசையையும் மேற்கத்திய இசையையும் கலந்து அவர் பல்வேறு பரிசோதனைகளை செய்து பார்த்தார். ஒரு மரபான வடிவத்தை கடந்து குறிப்பிட்ட படத்துக்கு தேவையான பின்னணி இசையை அவர் இயற்றினார். ஹாரே பைரே இல் பாத்திரங்களின் தன்மையை விளக்கிக் காட்டுவதற்கு இந்திய இசையுடன் மேற்கத்திய இசையின் கூறுகளையும் பயன்படுத்தி பின்னணி இசையை உருவாக்கினார்.

ஒரு நேர்காணலில் ரே : ” பீத்தோவானின் (ஓன் மூமென்ட்) பியோனோ கச்சேரி உள்ளிட்ட 1920களின் இசைத்தட்டுகள் எங்களின் வீட்டில் இருந்தது. அது யாருக்குச் சொந்தமானது என இதுவரையிலும் எனக்குத் தெரியாது. ஆனால் ஏழு வயதிலிருந்தே அதை நான் கேட்டு வருகிறேன். புத்தகங்கள் வாயிலாக மேற்கத்திய செவ்வியல் கலைஞர்களை படித்த பிறகு, அதிலும் குறிப்பாக பீத்தோவானை குறித்து படித்த பின், நான் அவரை நாயகனாகவே வழிபடத் தொடங்கி விட்டேன். பீத்தோவானின் வாழ்க்கை வரலாறை எழுத வேண்டும் என யாராவது என்னிடம் கேட்டால் உடனடியாக நான் அதில் குதித்து விடுவேன். சில சமயம், ஒரு வேளை, கிழக்கு அல்லது மேற்கு ஜெர்மனிக்கு நான் நிஜமாகவே ஒரு ஆலோசனையை கூற விரும்புகிறேன், அதாவது அவரது வாழ்க்கையை நான் திரைப்படமாக எடுக்கிறேன் என. அன்றைய நாட்களிலிருந்தே இசை மீதான எனது ஆர்வம் தொடங்கி விட்டது. கல்லூரியில் முதல் ஆண்டில் படிக்கும் போது இசையை ஆர்வத்துடன் கேட்கத் தொடங்கினேன்”. தொடக்க காலத்தில் பீத்தோவானின் வாழ்க்கை வரலாற்றை படித்த ரேவுக்கு பீத்தோவானின் மீது அளப்பரிய காதல் ஏற்படுகிறது. அவரது வாய்ப்பு கிடைத்தால் அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க வேண்டும் என கருதியிருந்ததாக ஒரு முறை குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆர்வம் படிப்படியாக அதிகரித்து இசைத்தட்டுகளை சேகரிக்கும் ஆர்வமாக பெருக்கெடுத்தது. திரைப்படங்களுக்கு ரே அமைத்த இசையின் துல்லியம் மேற்கத்திய செவ்வியல் கால கட்டத்துக்கு இணையாக ஒப்பிடும் வகையில் காணப்பட்டது. அதிலும் குறிப்பாக மொஸார்ட்டின் பாணியான ஒன்றின் மீது ஒன்றாக படியும் குறிப்புகளை மெல்லிசை பாணியை பின்பற்றியதாக அமைந்திருந்தது.

“மொஸார்ட்டின் தாக்கத்தைப் பற்றி பேசும் போது, பெரும்பாலும் அவரது ஓபராக்கள், ஏராளமான பாத்திரங்களின் அகவயமாக பிரயாணித்து அவற்றின் தனித்தன்மையை அவர் விளக்கிச் சென்ற மேதைமையை குறித்தே நினைத்து பார்க்கிறேன். இதன் சாத்தியங்களை திரைப்படத்தில் நிகழ்த்தி காட்ட முடியுமா என்பதே என்னை பெரிதும் கவர்வதாக இருந்துள்ளது”.

இசையை குறித்து ரே பேசும் போதெல்லாம் இசையின் உருமாற்றங்களையும் குறிப்பிட்டுள்ளார். சோவியத் திரைப்பட இயக்குநர்களை குறிப்பிடுகையில், ஐசன்ஸ்டீன், பாஹ் இசையை பயன்படுத்தியதையும், புடோவ்கின் பீத்தோவானின் இசைக்கு நெருக்கமாக இருந்ததையும் சுட்டிக் காட்டுவார்.”கூடுமானவரை இசையை அறிவுப்பூர்வமான வகையிலேயே பயன்படுத்துகிறேன்” என்றும் ” உண்மையில் படத்தில் இசை எங்கே தேவை என்பதை இயக்குநர் அறிந்திருக்க வேண்டும்” என்றும் ரே கூறுகிறார்.

டேவிட் லீனின் ஏ பாசேஜ் டூ இந்தியா, லாரன்ஸ் ஆப் அரேபியா மற்றும் லயன் ஆப் டெசர்ட், பீட்டர் வெய்ரின் டெட் பொயட் சொசைட்டி உள்ளிட்ட முக்கிய படங்களுக்கு இசை அமைத்தவர் பிரெஞ்சு இசை அமைப்பாளரான மெளரைஸ் அலெக்ஸிஸ் ஜார்ரே, ரேயின் இசை குறித்து கூறுகையில், ” ஒரே சமயத்தில் நம்மை கவ்வக் கூடியதும் ஆன்மாவில் அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடியதுமாகும். ஆகவே இன்றைக்கும் ரேயின் இசை மனதுக்கு இணக்கமாக இருப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை” என்று வர்ணித்தார்.

முதன்முறையாக இசை அமைத்த அனுபவம் குறித்து ரே குறிப்பிடுகையில், “தொடக்கத்தில் இது மிகவும் கடினமானதாக இருந்தது. நான் எழுதிய இசைக் குறிப்புகளை இசைக்குழுவினர் வாசிக்கையில் நாரசமாக அலறும்.அதனால் ஏராளமாக எழுதி எழுதி கிழித்தெறிந்தேன். போஸ்ட் மாஸ்டர் படத்துக்காக ஏற்கனவே கொஞ்சம் இசை குறிப்புகளை எழுதியிருந்தேன். ஆனால் அது சரியாக இசைக்கப்பட முடியாததால், அதை பயன்படுத்தவில்லை. ஆனால், அதன் பின்னர் (படிப்படியாக) நான் கொஞ்சம் திறமையை வளர்த்துக் கொண்டேன்” என்கிறார் ரே.

ஆரண்யர் தின் ராத்ரி, பிரதித்வந்தி, சீமாபத்தா, ஜன ஆரண்யா ஆகிய படங்கள் ரேயின் இசை திறமைக்கு சாட்சியம் கூறுபவை. தொடக்கத்தில் பியானோவில் இசையையும் மெட்டுகளையும் ரே இயற்றினார். பின்னணி இசைக்கு பொதுவாக, வயலின், செல்லோ, டபுள் பேஸ் கிடார் ஆகியவற்றை பயன்படுத்திய போதிலும் இந்திய மூங்கில் புல்லாங்குழலை அவர் பயன்படுத்தவில்லை. அதே நேரத்தில் இந்திய தாள வாத்திய கருவிகளின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். சில வேளைகளில் மேற்கத்திய தாள வாத்திய கருவியான திம்பானியை அற்புதமாக பயன்படுத்தினார்.

“ஒரு திரைப்படத்தின் அனைத்து தயாரிப்பு நிலைகளில் உள்ள பணிகளை காட்டிலும், அதிகமாக எனது கவனத்தை கோருவதாக இருப்பது என்பது இசையமைப்பதுதான் என கருதுகிறேன். இசை அமைப்பதில் அதிக திறமையை பெற்றவுடன் பணி இன்னும் இலகுவானதாக இருக்கக் கூடும். இருந்த போதிலும் அந்த நேரத்தில், அப்பணி மிகவும் கடினமான ஒன்றுதான்” என ரே குறிப்பிட்டுள்ளார்.

ரேயின் சீமாபத்தா படத்தில் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்தவரும், எழுத்தாளருமான பரூன் சந்தா : “ரே பியானா முன்பாக அமர்ந்திருக்கும் படம் எப்போதும் என் மனதை விட்டு நீங்காமல் உள்ளது. அவரது வீட்டில் கடந்த 60 ஆண்டுகளாக பியானோ உள்ளது. ஆனால் அது ரேவுக்கு சொந்தமானதல்ல. போர்ச்சுக்கல்லில் உள்ள பிரகான்சாவிலிருந்து வாடகைக்குக் கொண்டு வரப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அதற்கு தவறாமல் (ரேயின் மகன்) சந்தீப் முறையாக வாடகையை செலுத்தி வந்தார். ரேவுக்கு பிறகு சந்தீப்போ, அவரது மகன் செளரதீப்போ கூட அந்த பியானோவை இசைத்து நான் பார்த்ததில்லை. கொல்கத்தா தட்ப வெப்ப நிலையை பொறுத்த அளவில் அதை தொடர்ந்து முறையாக பராமரித்து சுருதி சேர்த்து வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால் ரேவின் அந்த பியானோவை தொடர்ந்து சுருதி சேர்த்து வந்தவர் தற்போது மறைந்து விட்டார். அவருக்கு மாற்றாக ஒருவர் கிடைப்பது கடினம். ஆகவே அந்த பியானோ அப்படேியே சுருதி சேர்க்கப்படாமலும், இசைக்கப்படாமலும் அந்த வீட்டில் உள்ளது”.


நன்றி : Serenade, Navhind Times, the wire, சங்கா கோஷ் எழுதிய How Satyajit Ray’s experiment with music made history!- TIMESOFINDIA.COM, 2019, கட்டுரை, லிட்டில் ஒயிட் லைஸ், தி ஹிந்துவில்(நவ.2021) Ranjan Das Gupta எழுதிய Satyajit Ray’s signature scores கட்டுரை, Lokogandhar வலைத்தளத்தில் வெளியான SUBHADRAKALYAN எழுதிய An Introduction to the Musical Concepts of Satyajit Ray என்ற கட்டுரை, ரேயின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் உள்ளிட்டவை.

Leave a comment