கடந்து செல்லும் நதி

கோடையில் மணல் சாரியாகவும்

மாரியில் நீர் பிரவாகமாகவும்

வேகவதி

விரைந்துசெல்வது இவ்வழியாகத்தான்

அதன்

மணல் புரளும் கரைகளை அடைய

தனது கான்கிரீட் கால்களால் நடந்து செல்கிறான்

பாலத்தின்மேல்

வாகனங்கள் ஊர்கின்றன

நானூறு கோடி ஆண்டுகளாக

உயிர்கள் வளர்த்துத் தவழ்ந்திருந்த

இந் நதியின் கரைகளில்

வீற்றிருக்கும்

கல்லறை மேட்டுப் படைநிலையையும்

அல்லங்காடி யானைக்கல்லையும்

பிரளயத்தை வென்று

மணலை உலை அரிசியாக்கிய திருவாப்பனூரையும்

புட்டுக்கு மண்சுமந்த நிலத்தையும்

மல்லன்தத்தன் வெட்டிய ஏரிக்கரைத் தோப்பையும்

தமிழால் இசைபாடித் திரிந்த

எட்வர்டு வெப் ஐயர் தெருவையும் இணைக்க

பாலங்களால் முடியுமா

நகர் உறையும் மனிதர்கள்

அதன்மேல் நகர்ந்தபடியிருக்கிறார்கள்

நெடுங்காலத்துக்கு முன்பே

வேகவதி

தொல்நகர் நீங்கிவிட்டாள்

30 மார்ச் 2022
கோடை அந்தி

Leave a comment