மனத்தின் வசந்தத்தை மீட்டும் விவால்டியின் நான்கு பருவங்கள்

அன்டோனியோ லூசியோ விவால்டி

இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் 80களுக்குப் பிறகு பல்வேறு திரைப்பட முயற்சிகள், குறும்படங்கள், வணிக விளம்பரங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் என எண்ணற்ற இடங்களுக்கு பயன்படுத்தப்பட்ட இசை யாருடையது என்று கேட்டால் அனைவரும் கண்ணை மூடிக் கொண்டு இளையராஜா என்று சொல்லிவிடுவர். அவரது ஹவ் டூ நேம் இட், நத்திங் பட் வின்ட் ஆகிய இசை கோர்வைகள் இன்றைக்கு வரையிலும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அதே போல மேற்கத்திய செவ்வியல் இசையில் மொஸார்ட், பீ்த்தோவானை தவிர்த்து, நூற்றுக்கணக்கான திரைப்படங்கள், இன்னபிற என மேலே குறிப்பிட்ட, குறிப்பிடாத அனைத்திலும் பயன்படுத்தப்படும் இசை யாருடையது என்றால் எந்த ஓர் இசை ரசிகரும் கண்ணை மூடிக் கொண்டு அது விவால்டியின் இசை என்று சொல்லி விடுவர். அதிலும் குறிப்பாக அவரது நான்கு பருவங்கள் என்ற வயலின் இசைக் கோர்வைகள் கேட்பவரை அப்படியே மெய் மறக்க செய்துவிடுபவை.

இந்த இசைக் கோர்வை பயன்படுத்தப்பட்ட படங்களின், தொலைகாட்சிகளின் நிகழ்ச்சிகளை பட்டியலிட்டால் பக்கம் தாங்காது. அப்படிப்பட்ட படைப்புக்கு சொந்தக்காரர்தான் விவால்டி எனப்படும் அன்டோனியோ விவால்டி அதாவது அன்டோனியோ லூசியோ விவால்டி. 1678 இல் வெனிஸ் குடியரசில் பிறந்த விவால்டி, சிறந்த இசைஞராகவும், வயலின் கலைஞராகவும் திகழ்ந்தார். பிந்தைய பரோக் கால கட்டத்துக்கான கருவியிசைக்கு புதிய பாணியையும் பாதையையும் வகுத்து கொடுத்தவர். இவரது தந்தை ஜியோவானி பாடிஸ்டா இசை கலைஞர்களின் சங்கத்தை நிறுவியர்களில் ஒருவராக இருந்தார். அச்சங்கத்தின் தலைவராக இருந்த Giovanni Legrenzi தொடக்க கால பரோக் இசைஞர்களில் ஒருவராவார். இதனால் இளம் விவால்டி தனது தொடக்க கால இசைப்பாடங்களை லெக்ரன்சியிடம் கற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. இதனால் தனது 13 ஆவது வயதிலேயே தனது முதல் படைப்பை விவால்டி நிகழ்த்தும் வாய்ப்பும் உருவானது.

இத்தாலிய நிலக்காட்சிகளை வரைந்த மிகப் புகழ் பெற்ற ஓவியரான மார்கோ ரிச்சியின் ஓவியங்களால் தாக்கம் பெற்று விவால்டி நான்கு பருவங்கள் இசைக்கோலங்களை உருவாக்கினார். 1720 தொடங்கி 1723 வரையிலும் இவற்றை எழுதிய அவர் 1725 இல் ஆம்ஸ்டர்டாமில் இவற்றை வெளியிட்டார். அவை 12 கன்சர்ட்டோக்களை கொண்டிருந்தது. அவற்றில் நான்கு பருவங்களான வசந்தம், கோடை, இலையுதிர், குளிர்காலம் ஆகிய நான்கு கன்சர்ட்டோக்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு கன்சர்ட்டோவும் தலா 3 இயக்கங்களையும், டெம்போக்களையும் துரிதம் – மெது – துரிதம் ஆகிய பாணிகளில் இசைக்கப்பட்டுள்ளது.நான்கு பருவங்கள் என்று அறியப்பட்ட போதிலும் இதையும் உள்ளடக்கிய 12 கன்சர்டோக்களை கொண்ட The Contest Between Harmony and Invention என்ற மிகப் பெரிய இசைக் கோர்வையின் ஒரு பகுதியே இந்த நான்கு பருவங்கள்.

விவால்டி 500க்கும் மேற்பட்ட கன்சர்ட்டோக்களை எழுதியுள்ளார். அவற்றில் 230க்கும் அதிகமானவை வயலினுக்காக எழுதப்பட்டவை. இவரது பிரபலமான நான்கு பருவங்களும் வயலினுக்காகவே பிரத்யேகமாக எழுதப்பட்டது. பரோக் கால கட்டத்தில் இவ்வாறு முற்றிலும் மாறுபட்ட முறையில் அவர் இது போன்ற இசைக் கோலத்தை எழுதுவதற்கான தொடக்கத்தை எங்கிருந்து பெற்றார் என்பதை குறித்து விமர்சகர்கள் இன்னும் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.இவரது பெரும்பாலான இசைப் படைப்புகள் தான் பணியாற்றிய கைவிடப்பட்டவர்களுக்கான பள்ளியில் தன்னிடம் இசை கற்றுக் கொண்ட பெண் கலைஞர்களுக்காக எழுதப்பட்டவை.

17-18 ஆம் நூற்றாண்டில் இத்தாலியில் கலை, இலக்கியங்களில் ஏற்பட்ட மறுமலர்ச்சி காலத்தை பரோக் கால கட்டம் எனக் குறிப்பிடுகின்றனர். அக்கால கட்டத்தின் மிகவும் துணிச்சலான இசை வடிவமாக விவால்டியின் நான்கு பருவங்களை விமர்சகர்கள் கொண்டாடத் தொடங்கினர்.அக்கால கட்டத்தில் விவால்டியின் இந்த இசை மிகவும் தனித்துவமானதாக பார்க்கப்பட்டது. இது போன்ற ஒரு மாதிரியே உருவாகாத கால கட்டத்தில் விவால்டியின் செயல்பாடு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. விவால்டியின் செயல்பாடுகளுக்கு பிறகே இத்தாலியின் இசை பாணியில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படத் தொடங்கியது. எனவே இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

பரோக் கால கட்டத்தின் பரிசோதனை ரீதியானதும் புதுமையானதுமான இசையை உருவாக்கிய Arcangelo Corelli இன் தாக்கம் விவால்டிக்கு இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் தனி கருவியிசைக்கும் கச்சேரி நிகழ்த்துகளுக்கும் இடையிலான மிகப் பெரிய ஒத்திசைவை விவால்டி உருவாக்கினார். இவரது வருகைக்குப் பிறகே கச்சேரியில் தனி கருவியிசையின் செல்வாக்கு படிப்படியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அதே போல இசைக்குறிப்புகள் எவ்வாறு நிகழ்த்தப்பட வேண்டும் என்பதற்கு மிக சிறந்த எடுத்துக்காட்டுகளாகவும், முன்னோடிகளாகவும் அவரது இசைக்கோலங்கள் விளங்குகின்றன. அதிலும் குறிப்பாக அவரது புகழ் பெற்ற நான்கு பருவங்கள் இசைக் கோர்வையில், புயல்கள், பறவைகளின் கீச்சொலிகள், வயலின் இசைப்பவர்கள் இசைக்கும் போது மேற்கொள்ள வேண்டிய கற்பனைகள் என ஒரு தெளிவான வடிவங்களைக் கொண்டிருந்தது.

குடும்பத்தின் மூத்த குழந்தையான விவால்டிக்கு 1703 இல் ஞானஸ்நானம் செய்விக்கப்பட்டு மத போதகராக ஆவதற்கான பயிற்சியும் அளிக்கப்பட்டது.அவர் போதகராக நியமிக்கப்பட்ட சிறிது காலத்திலேயே தீவிர சுவாச கோளாறு, ஆஸ்துமா பிரச்னையால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து பொது பிரார்த்தனை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்தார். இவரது தனித்துவமான தலை முடியின் சிவப்பு நிறம் காரணமாக “சிவப்புத் தலை போதகர்” என செல்லப் பெயரிட்டு அழைக்கப்பட்டார். இவரது குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே அவர்களது பிரத்யேக வம்சாவளியின் காரணமாக சிவப்பு கேசம் உடையவர்களாக விளங்கினா்.

இவரது முதல் இசை அரங்கேற்றம் அவரது தந்தையுடன் சேர்ந்து 1696 இல் சர்ச்சில் நடைபெற்றது. மிகச் சிறந்த வயலின் கலைஞராக விவால்டி திகழ்ந்ததால், தனது 25 ஆவது வயதில் வெனிசில் உள்ள இசைப்பள்ளியில் இசை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். கைவிடப்பட்டவர்களுக்காக நடத்தப்பட்ட அப்பள்ளி குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு இசை கற்பிப்பதில் தனிக்கவனம் செலுத்தியது. விவால்டி வாழ்வின் பெரும்பகுதியை, கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அப்பள்ளியிலேயே வயலின் ஆசிரியராக கழித்தார். கூடவே எண்ணற்ற படைப்புகளையும் இந்த உலகுக்கு வழங்கினார். அப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் வணிக பயிற்சி பெற்று 15 ஆவது வயதிலேயே பள்ளியை விட்டு வெளியேறி வெளிநாடுகளுக்கு செல்லத் தொடங்கினர். ஆகையால் அங்கு மாணவிகளுக்கு இசைப் பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் திறமையானவர்கள் அங்கேயே தங்கி பிரபலமான Ospedale-ன் குழுவில் உறுப்பினர்களாக ஆகினர். விவால்டியின் வருகைக்கு பிறகு, அங்கு இசை பயின்ற மாணவிகளுக்கு சர்வதேச அளவில் புகழும் அங்கீகாரமும் கிடைக்கத் தொடங்கியது. அவர்களுக்காகவே அவர் கன்சர்ட்டோ,கான்ட்டோ,பிரார்த்தனை பாடல்களை விவால்டி எழுதினார்.

1704 வயலின் கற்றுக் கொடுப்பதுடன் ஒவ்வொரு பிரார்த்தனை விருந்தின் போதும் ஒரு ஓரட்டோரியா அல்லது கன்சர்ட்டோவை நிகழ்த்த வேண்டும் என அவருக்கு கூடுதல் பணி சேர்க்கப்பட்டது. இதனால் பள்ளியின் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கும் விவால்டிக்கும் இடையில் உரசல்களும் அதிருப்தியும் ஏற்படத் தொடங்கின.ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியரை பணியில் நீட்டிப்பது தொடர்பாக வாரிய உறுப்பினர்கள் குழு ஒன்று கூடி வாக்களித்து முடிவெடுக்க வேண்டும்.பெரும்பாலும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு வந்த விவால்டி,1709 இல் அவருக்கு எதிராக 6 அல்லது 7 பேர் வரை வாக்களித்தனர். இதனால் சுமார் ஒராண்டு வரை சுதந்திர இசைக் கலைஞராக காலம் கழித்தார். 1711 இல் மீண்டும் ஒருமனதாக வாக்களித்து அவரை மீண்டும் பள்ளிக்கு வரவழைத்தனர். மேலும் அவர் இல்லாதபோதுதான் அவரது செயல்பாடு எத்தனை முக்கியமானது என்பதை நிர்வாகக் குழுவினர் புரிந்து கொண்டனர். அதன் பிறகு வெகுவிரைவிலேயே அப்பள்ளியின் இசைத்துறை இயக்குநராக 1716 இல் அவருக்கு பணி உயர்வு அளிக்கப்பட்டது.

ஆயுள் முழுக்க தனது விரல்களால் வயலினை மீட்டிக் கொண்டருந்தார். அவரது புலரிகளும் அந்திகளும் வயலினிலேயே கவிகின்றன. தனது காய்த்துப் போன தோள்பட்டையிலிருந்து மூன்றாவது கரமென இறங்கும் வயலினில் சதா சர்வகாலமும் தந்திகளை மீட்டியபடி அவரது விரல்கள் இசைத் தாவரங்களென கிளைக்கத் தொடங்கியது. அவற்றிலிருந்து பெருகிய இசைக் குறிப்புகள் விழுதுகளென அந்நிலமெங்கும் பற்றிப் படர்ந்தது. அதன் கிளைகளில் சதிராடிய இலைக்கரங்கள் வெளியின் தந்திகளை மீட்டி மீட்டி பருவங்களின் இசைக் குறிப்புகளை பரவச் செய்தது. அது தானுபேயையும் வியன்னாவையும் கடந்து உலகம் முழுவதும் இசையின் பருவங்களை மிதக்க விட்டபடி இசைத்து கொண்டேயிருக்கிறது.

குரலிசை, கருவியிசை, புனித இசை, மதசார்பற்ற இசைக்கு அவரது பங்கு மிகவும் மகத்தானது. தற்காலத்தில் மிகவும் குறைவாகவே அறியப்படுபவரான விவால்டி அவரது காலத்தில் மிகவும் புகழ் பெற்ற இசைஞராக விளங்கினார், சோனாட்டா, ஓபரா தொடங்கி அவரது மொத்த படைப்புகள் மட்டும் 700க்கும் அதிகமாக இருக்கலாம் என அண்மைக்கால ஆய்வுகள் கூறுகின்றன. அவரது பெரும்பாலான ஓபராக்கள் அவர் வெனிசில் வசித்த போது படைத்தவை. அவரது பல்வேறு படைப்புகளும் ரோம், புளோரன்ஸ், வெரோனா, விசென்ஸா, அன்கோனா, மன்துவா உள்ளிட்ட இத்தாலி முழுவதிலும் பரவலாக நிகழ்த்தப்பட்டன.18 நூற்றாண்டின் மிகப் பெரிய வயலின் இசை ஆளுமையாக விவால்டி திகழ்ந்தார். அவரது நான்கு பருவங்கள் உள்ளிட்ட பல்வேறு புகழ் பெற்ற படைப்புகளும் வயலினை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டன. அவரது உருவாக்கங்களில் 221 ஆக்கங்கள் தனி வயலின் கச்சேரிக்கானவை என்றால் கற்பனை செய்து கொள்ளுங்கள். மற்ற படைப்புகள் கிளாரினெட், புல்லாங்குழல், டிரம்பெட், மாண்டலின் ஆகியவற்றையும் உள்ளடக்கியவை. விவால்டி கால கட்டத்தில் காணப்பட்ட இசைக்குழு என்பது நவீன கால கட்டமான தற்போது காணப்படுவதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

விவால்டியின் வேகம், ஆர்வம், கருவியிசைக்கான அவரது பாணி ஆகியன வெகுவிரைவாக இசையின் பொதுமொழிக்கு எடுத்தாளப்பட்டன. பரோக் கால கட்ட இசைஞர்களான ஜோகன் செபாஸ்டியன் பாஹ் உள்ளிட்ட இசையாளுமைகள் இவரது மாதிரியை எடுத்தாண்டனர். அதிலும் குறிப்பாக விவால்டியின் 10க்கும் மேற்பட்ட படைப்புகளை கீபோர்டுக்கானதாக பாஹ் மடைமாற்றம் செய்தார். தனி வயலினுக்கான விவால்டியின் படைப்புகள் அந்த கருவிக்கே உரிய மிகுந்த கலைநயத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. விவால்டியின் பல்வேறு படைப்புகளும் ஒரு சித்திரத்தை வெளிப்படுத்துவதாக அல்லது கவர்ச்சிகரமான தலைப்புகளை கொண்டதாக விளங்குகின்றன. ஒராண்டின் பல்வேறு பருவநிலைகளையும் விளக்கிக் காட்டக் கூடியதாக நான்கு பருவங்கள் என்ற தலைப்பு இசை ஆர்வலர்களையும் தாண்டி அனைவரையும் ஈர்க்கக் கூடியதாக அமைந்தது. கருவியிசைக்கான 90க்கும் மேற்பட்ட சொனாட்டக்களை விவால்டி விட்டுச் சென்றுள்ளார். அவை இலகுவான ஈர்ப்புமிக்க படைப்புகளாக விளங்குகின்றன.

1729க்கு பிறகு விவால்டி தனது படைப்புகளை அச்சிட்டு வெளியிடுவதை நிறுத்திக் கொண்டார். அதற்கு பதிலாக தனிப்பட்ட வியாபாரிகளுக்கு தனது கையெழுத்துப் பிரதியை விற்பது மிகுந்த லாபகரமானதாக இருப்பதாக கருதினார். இந்த கால கட்டத்தில் அவர் எழுதிய ஒபராக்களுக்கு ஏராளமான மதிப்பூதியத்தை அவர் பெற்றதாக சொல்லப்படுகிறது. அதே வேளையில் வெனிசிலும் இத்தாலியின் பல்வேறு நகரங்களிலும் பணம் பெற்றுக் கொண்டு கன்சர்ட்டோக்களையும், ஒபராக்களையும் அவர் நிகழ்த்தத் தொடங்கினார்.1730களுக்கு பிறகு அவரது இசை சாம்ராஜ்யம் சரியத் தொடங்குகிறது. அவர் ஏற்பாடு செய்த கச்சேரிகள் தோல்வியை சந்திக்கின்றன.பேரரசர் ஆறாம் சார்லஸை சந்தித்தப் பிறகு, தனக்கு மிகப் பெரிய பதவி கிடைக்கும் என எதிர்பார்த்து 1740 இல் வியன்னாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். ஆனால் துர்வாய்ப்பாக விவால்டி வந்த கொஞ்ச நாட்களிலேயே சார்லஸ் இறந்து விடுகிறார். அதன் பிறகு ஓராண்டுக்குள்ளாகவே விவால்டியும் உடல் நலிவுற்று வறுமை காரணமாக இறக்க நேரிடுகிறது. இதனால் 1742 இல் இவரது மேடையேற்றம் கண்ட L’oracolo in Messenia ஒபராவுக்கான முன்னேற்பாடுகளில் பங்கேற்க இயலாமலேயே 1741 ஜூலை 28 இல் காலமானார். மிகவும் எளிமையாகவே அவரது இறுதி சடங்கு நடைபெற்றதை வைத்து பார்க்கும் போது அவர் இறுதி காலத்தில் ஏழ்மையிலேயே கழித்தார் என்றே விமர்சகர்கள் கருதுகின்றனர்.

அவரது மறைவுக்கு பிறகு அவரது சுய சரிதை, இசை கோர்வைகள் உள்ளிட்டவை 27 தொகுதிகளாக தொகுக்கப்பட்டன. இவை அக்காலத்தில் மிகப் பெரிய ஆர்வலர்களும் புரவலர்களாலும் விலைக்கு வாங்கப்பட்டதாக தெரிகிறது. அதன் பின்னர் 1920களில் இது மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது டூரினில் உள்ள தேசிய நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.வாழும் காலத்தில் இத்தாலியிலும் அதற்கு வெளியே பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் மிக வேகமாக அவரது புகழ் பரவியது. போலவே மறைவுக்கு பிறகு மிக வேகமாக புகழ் மங்கியதும் விவால்டிக்கு நிகழ்ந்தது. பரோக் கால கட்டத்துக்குப் பிறகு வெளியிடப்பட்ட விவால்டியின் இசைக் கோர்வைகள் மிகப் பெரிய கவனத்தை பெறவில்லை அல்லது பெரும்பாலும் அவை புறக்கணிப்புக்கு உள்ளாகின. அவரது மிக சிறந்த படைப்பு என்று இன்று அறியப்படுகிற நான்கு பருவங்கள் உள்ளிட்ட அவரது அசலான இசைக் கோலங்கள் கூட செவ்வியல் மற்றும் ரொமாண்டிச கால கட்டங்களில் முற்றிலும் அறியப்படவில்லை. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் Fritz Kreisler நிகழ்த்திய சி கன்சர்ட்டோ விவால்டி பாணியை பின்பற்றியது. அதன் பிறகுதான் விவால்டியின் மதிப்பு அதிகரிக்க இந்த நிகழ்ச்சி உதவியாக அமைந்தது. இது விவால்டி குறித்து முறையாக ஒரு கல்விப்புலம் சார்ந்த ஆய்வைத் தொடங்க பிரான்ஸ் ஆய்வாளர் Marc Pincherle க்கு தூண்டுதலாக அமைந்தது. இதைத் தொடர்ந்தே விவால்டியின் பல்வேறு கையெழுத்துப் பிரதிகளும் மறு கண்டுபிடிப்பு செய்யப்பட்டன.

பரோக் கால கட்டத்தில் மட்டுமின்றி மேற்கத்திய இசையின் ஊடாக உலகம் முழுவதிலும் நவீன கருவியிசையில் மிகப் பெரிய பாதையை சமைத்துக் கொடுத்தவர் விவால்டி. அவரது நான்கு பருவங்கள் ஆண்டு முழுவதும் உள்ள பருவங்களையும் கடந்து பல நூறாண்டுகளாக இசை ரசிகர்களின் மனிதில் முடிவற்ற வசந்தத்தை தொடர்ந்து இசைத்தப்படி யுகங்களில் பயணிக்கிறது எல்லையற்று.

Leave a comment