வலசை

முதன் முறை என்ற போதிலும்
வானில் வழித்தடம்
நினைவில் வைத்துள்ளது பறவை
#
தன் படகை
அலகில் சுமக்கிறாய்
பல்லாயிரம் மைல்கள்
மலைகளை கடக்கிறாய்
தன் வம்சம் தளைக்க
கண்டம் தாண்டுகிறாய்
உன் சின்னஞ்சிறு
உடலிலிருந்து
எத்தனை பெரிய
விந்தைகளை உதிர்க்கிறாய்
உண்மையில் இது என்ன
#
வீட்டு மாடியில்
போட்டதை தின்று
முட்டை இடும் நாட்டு கோழியே
எதிர் வீட்டு மொட்டை சுவரில்
சோறுண்ண வருகை தரும்
நூறாண்டு கண்ட காகமே
பக்கத்து தெரு வேப்பமர
நிழலில் தரை இறங்கும்
சிட்டுக்குருவிகளே
நீங்கள் எல்லாம் யார்
இவனை சுற்றி
உங்கள் வாழ்வு சலிப்பதென்ன
#
பயணிக்கும் இடம் எல்லாம்
பறவை தேடும் மனம்
வாய்த்து விட்டால்
அதை விட
வேறு என்ன வேண்டும்
நற்பேறு
#
ஒருமுறை
சமண குகை தேடிச் சென்று
தன்னை பறவை யென்றெண்ணி
சிகரம் நீத்து கை சிறகு விரித்து
வான் வெளி ஏகினான்
நல் வாய்ப்பாக அதுவும்
ஒரு பறவையின் கனவென்றானதால்
உயிர் மிஞ்சினான்
#
பறவையின் கனவு
பறத்தலை தவிர
வேறு என்னவாக இருக்கும்
அவ்வாறு எனில்
நடமாடி திரியும் இவன்
எப் பறவையின் கனவு
#
ஜூலை 13, 2021
முன்னிரவு

Leave a comment