நதியின் மொழி

மொழி தோன்றுவதற்குமுன்பே
நான்
இந்நிலத்தை வளப்படுத்தியதை அறிந்துகொண்டான்
மெல்ல மெல்ல
சொல்லின் ஒலி வேர்களைப் பிடித்து
எனது முந்தானைக்குள் வந்து
ஒளிந்து கொண்டான்
மழலை பேசியும் மறைவாக ஓடியாடியும்
நெடுங்காலம்
என் மடியில் வளர்ந்தான்
பின்பு
கதைகள் பேசினான்
அந்தியையும் உதயத்தையும் கண்டுகொண்டான்
மரணத்தையும் ஜனனத்தையும்
என்வழியே புரிந்துகொண்டு
தலைமுறைகளைப் பெருக்கினான்
தியானித்தான்
என் கரையில் மரணித்தான்
இப்படித்தான்
மொழியை
அவனுக்குக் கற்பித்தேன்
கால வெள்ளத்தில்
அனைத்தையும் தொலைத்துவிட்டு
வெகுதொலைவு நீங்கி
இப்போது
முடிவின்றி அலைந்துகொண்டிருக்கிறான்
நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்

30 மே 2022
அந்தி

Leave a comment