அமெரிக்க நடிப்புத்துறையில் புதிய நுட்பங்களை உருவாக்கிய ஆளுமை : சன்போர்டு மெய்சனர்

“நடிப்பு என்பது கற்பனையாக உருவாக்கப்பட்ட சூழலில் உண்மையாக வாழ்வது” : மெய்சனர்.

ஸ்டானிஸ்லாவ்ஸ்கி நடிப்பு பாணியிலிருந்து பிரிந்து தனக்கென புதிய பாணியை உருவாக்கிக் கொண்டதில் சன்போர்டு மெய்சனர் பாணி குறிப்பிடத்தக்க ஒன்றாகும். உள்ளுணர்வை அடிப்படையாக வைத்து இவர் உருவாக்கிய நடிப்பு தொழில் நுட்பங்கள் அமெரிக்க திரையுலக நடிப்பு பாணியில் புதிய புரிதலுக்கு வழிவகுத்தன. அறிவை காட்டிலும் உள்ளுணர்வை அடிப்படையாக கொண்டு அவர் உருவாக்கி நடிப்பு கோட்பாடுகள் இன்றைக்கு அமெரிக்காவில் பெரும்பாலானோரின் அடிப்படை பாடங்களாக விளங்கி வருகின்றன.

சக நடிகர்களுடன் நடிப்பில் விரைவான தொடர்புகளையும் இணைப்புகளையும் உருவாக்க அவர் உருவாக்கிய வாய்மொழி வாயிலான மீண்டும் மீண்டும் உச்சரிக்கப்படும் பயிற்சிகள் அவரது பிரதான அணுகுமுறையாக விளங்கியது. இந்த அணுகுமுறையும் பயிற்சியும் பாத்திரத்தின் உண்மைத்தன்மையை அறிவதற்கு முக்கியமான திறவுகோலாக இருப்பதாக பெரும்பாலான நடிகர்கள் கருதுகின்றனர்.

ஸ்டாரன்போர்டு மெய்சனர் 1905 இல் நியூயார்க் அருகில் உள்ள புரூக்ளினில் யூத குடும்பத்தைச் சேர்ந்த தோலாடை தொழில் செய்து வந்த ஹெர்மான் மெய்சனருக்கும் பெர்தாவுக்கும் மூத்த மகனாக பிறந்தார். இவர்களது குடும்பம் ஹங்கேரியிலிருந்து அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்து வந்தது. சிறு வயதிலேயே நோஞ்சான் குழந்தையாக இருந்த மெய்சனரை சுல்லிவன் மலைப் பிராந்தியத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது சகோதரர் ஒருவர் சுகாதாரம் இல்லாத எருமைப்பாலை குடித்து நோய் வாய்ப்பட்டு இறக்கிறார். இது தன்னை மிகவும் உணர்வுப்பூர்வமாக பாதித்ததாக பின்னாளில் மெய்சனர் தெரிவித்துள்ளார். மூத்தவராக இருந்ததால் இவர் பொறுப்பின்றி நடந்து கொண்டதால்தான் இந்த சம்பவம் நடந்ததாக அப்போது பெற்றோர் இவரை சாடியதால் ஏற்பட்ட குற்றவுணர்ச்சி தனக்கு இருந்து வந்தது என்கிறார். இந்த சம்பவம் பின்னாளில் அவருக்கு நடிப்புக் கலையில் உணர்வுப்பூர்வமான பகுதிகளை கையாள நினைவிலிருந்து கொண்டு உந்துதலை அளித்துள்ளது என கருதவும் இடமுண்டு.

இளவயதிலிருந்தே நடிப்பின் மீது தாளாத ஆர்வம் கொண்டவராக மெய்சனர் விளங்கினார். தனது குடும்பத்துக்குச் சொந்தமான பியானாவை வாசிக்கக் கற்றுக் கொண்ட பிறகு, அவரை இசையிலிருந்து திருப்பி குடும்பத் தொழிலில் கவனம் செலுத்த தந்தை வற்புறுத்தினார். இதற்கிடையில் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்து விட்டு, நடிப்பு கல்லூரியில் இணைந்து நடிப்பை முறைப்படி கற்றுக் கொண்டார். அங்குதான் அவர், குரூப் தியேட்டர் என்ற நாடகக் குழுவின் இணை நிறுவனரான ஹரால்ட் கிலூர்மனை சந்தித்தார். இந்த குழுதான் பின்னாளில் அமெரிக்க நடிப்பு வரலாற்றை புரட்டிப் போட்ட குழுவாக மாறியது.

கிலூர்மன், மெய்சனரை “மெத்தட் ஆக்டிங்” என அறியப்படும் நடிப்பு கோட்பாட்டை உருவாக்கிய லீ ஸ்ட்ராஸ்பெர்க்குக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் நடிப்பு கோட்பாட்டின் மீது பல்வேறு விமர்சனங்களையும், மாறுபட்ட விளக்கங்களையும் கிலூர்மன் கொண்டிருந்தார். கிலூர்மன், ஸ்ட்ராஸ்பெர்க் ஆகியோரின் தாக்கம் மெய்சனரிடம் காணப்பட்டது. இவ்வாறான தீவிர செயல்பாட்டின் வழி குரூப் தியேட்டரின் உறுப்பினர்களில் ஒருவராக மெய்சனர் மாறினார். அதே வேளையில் நடிகையும் மற்றொரு கோட்பாட்டாளருமான ஸ்டெல்லா அட்லரை சந்தித்தார். ஸ்ட்ராஸ்பெர்க்கின் நடிப்பு கோட்பாட்டுக்கு எதிராக ஸ்டெல்லா சுயமாக நடிப்பு தொடர்பான சித்தாந்தங்களை உருவாக்கியவர். ஸ்ட்ராஸ்பெர்கும், ஸ்டெல்லாவும் ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் உணர்வுப்பூர்வ நினைவு என்கிற கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. இவற்றை விளக்குவதில் ஸ்ட்ராஸ்பெர்க்குக்கும் ஸ்டெல்லாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது, நாடக குழுவில் பிளவை ஏற்படுத்தும் அளவுக்கு சென்றது. இதில் ஸ்டானிஸ்லாவ்ஸ்கியை ஆதரித்த மெய்சனர் ஸ்டெல்லாவுக்கு ஆதரவாக இருந்தார்.
இதையடுத்து ஸ்ட்ராஸ்பெர்க் குழுவிலிருந்து வெளியேறினார்.

இதையடுத்து நியூயார்க்கில் உள்ள நெய்பர்ஹூட் பிளேஹவுஸில் நடிப்பு பயிற்சியை மெய்சனர் தொடர்ந்து அளித்து வந்தார். குழுவில் உள்ள நடிகர்கள் உணர்வுப்பூர்வ நினைவக நுட்பத்திலிருந்து தங்களது கவனத்தை மாற்றத் தொடங்கினர். அதற்கு பதிலாக “குறிப்பிட்ட சூழ்நிலையில்” பாத்திரத்தின் செயல்பாடுகளை பாதிக்கும் நிலைமைகள் குறித்து குழு வலியுறுத்தியது. இந்த மடைமாற்றம் மெய்சனருக்கு நடிப்பு நுட்பத்தில் தனது தனித்துவமான பாணியை உருவாக்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. “குறிப்பிட்ட சூழ்நிலையில்” காட்சியை உயிரோட்டமுள்ளதாக மாற்றுவதற்கு, நடிகர்கள் மிகவும் வளமான கற்பனையுடன் கூடிய வாழ்க்கையை செய்து காட்ட ஸ்டெல்லா பயிற்சி அளித்தார். அதே வேளையில் மிகவும் உள்ளார்ந்த வகையில், மனரீதியான அணுகுமுறையை மெய்சனர் உருவாக்கினார். சக நடிகர்களிடம் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி, பார்வையாளர்களை ஈர்க்கக் கூடிய வகையில் நடிகர்கள் தங்களது நடிப்பை உருவாக்க வேண்டும் என மெய்சனர் வலியுறுத்தினார். நடிகர்கள் தங்களது பழக்க வழக்கங்களிலிருந்து வெளியேறுவதற்காக வடிவமைக்கப்பட்ட பயிற்சிகளை மெய்சனர் உருவாக்கினார். இங்கு உருவாக்கப்பட்ட நடிப்பு நுட்பங்கள்தான் தற்போது வழக்கத்திலிருக்கும் மெய்சனர் நடிப்பு நுட்பங்கள் என அறியப்படுகின்றன. இந்த குழுவினரால் அரங்கேற்றப்பட்ட பல்வேறு நாடகங்களில் நடித்த இளம் நடிகை பெக்கி மெரிடித்தை பின்னாளில் எளிமையாக மெய்சனர் திருமணம் செய்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து முன்னாள் குழு நாடக குரூப்பின் நடிகர்களான எலியா கஸன், ராபர்ட் லெவிஸ், செரில் கிராஃபோர்ட் ஆகியோர் ஆக்டர்ஸ் ஸ்டுடியோவை 1947 இல் நிறுவினர். தொடக்கத்தில் மெய்சனருக்கு இதில் சேர ஸ்ட்ராஸ்பெர்க் அழைப்பு விடுக்கவில்லை. இருந்த போதிலும், சிறிது நாட்களுக்கு பிறகு அதன் முதல் பயிற்றுவிப்பாளராக மெய்சனரே பொறுப்பு ஏற்றார்.

அதன் பிறகு 1951 இல் எலியா ஹசன் ஹாலிவுட்டை நோக்கி இயக்குநராக தனது தொழிலை உருவாக்கிக் கொள்ள சென்ற பிறகு, ஸ்ட்ராஸ்பெர்க் அதன் கலை இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்டார். இருவருக்கும் இடையிலான மன உரசல்கள் ஸ்ட்ராஸ்பெர்க் மரணம் வரையிலும் தொடர்ந்தது. இது மெய்சனரை வேதனையில் ஆழ்த்தியது.

மெய்சனரின் நடிப்பு நுட்பம் மூன்று பாணிகளை மையமாகக் கொண்டுள்ளது. உணர்வுப்பூர்வமாக தயாராகுதல், மீண்டும் மீண்டும் செய்து பார்த்தல், மேம்படுத்துதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இதன் மூலம் உணர்வுப்பூர்வ நினைவை நம்பாமல், நடிகர்கள் நிகழ்காலத்தில் குறிப்பிட்ட சூழலில் இருக்கவும், தங்களது சக நடிகர்களுடன் ஈடுபட்டு நடிப்பதற்கும் இது உதவுகிறது.

உணர்வுப்பூர்வமாக தயாராகுதல் என்பதை, ஒரு காட்சிக்குள் நுழையும் நடிகர் அந்த சூழலில் உணர்வுப்பூர்வமாக வாழ்தல் என்று மெய்சனர் குறிப்பிடுகிறார். பாத்திரத்தின் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு தங்களை பாதித்தவற்றிலிருந்து தூண்டுதல்களை உணர்ச்சிப்பூர்வமாக பயன்படுத்தி நடிப்பில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறார். இதற்காக நடிகர்கள் கற்பனையான சூழ்நிலைகள் அல்லது உண்மையான நினைவுகளை பயன்படுத்தலாம். ஆனால் இந்த விஷயத்தில் காட்சியின் தொடக்கத்தில் மட்டுமே நடிகர் உணர்வுப்பூர்வமாக செயல்பட வேண்டும். அதன் பிறகு, காட்சியில் மற்ற நடிகர்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ப தங்களது செயல்பாடுகளை இயல்பாக வெளிப்படுத்த வேண்டும்.இதன் மூலம் நடிகர்கள் ஒருவருக்கொருவர் இணைந்து உருவாக்கும் ஒரு கூட்டான சூழலை மெய்சனர் உருவாக்குகிறார்.

மீண்டும் மீண்டும் செய்து பார்க்கும் பயிற்சியின் மூலம் நடிகர்களின் கவனத்தையும் உள்ளுணர்வையும் மேம்படுத்துகிறார். இந்த பயிற்சி நடிகர்கள் தங்கள் தலையை நம்பியிருப்பதிலிருந்து வெளியேற்றி, உடல் அவயங்களின் உள்ளுணர்வை பின்பற்றி நடிக்க உதவுகிறது என மெய்சனர் நம்பினார்.உண்மையான உள்ளுணர்வுகள், நேரடி செயல்பாட்டில் மற்றொருவரால் தூண்டப்பட்டு, இயல்பான மனித நடத்தையை படம் பிடித்து காட்ட இந்த அணுகுமுறை உதவுவதாக மெய்சனர் விளக்குகிறார்.

இவை அனைத்தும் மேம்படுத்துதலின் வாயிலாக நெகிழ்ச்சியான தன்மைக்கும், இயல்பான நடிப்புக்கும் வழியேற்படுத்துகிறது. மற்றவர்கள் தங்களை தூண்டும் வரை ஒரு நடிகர் எந்த வித தேர்வையும் மேற்கொள்ளக் கூடாது. இது அவர்களின் நடத்தையை நியாயப்படுத்திக் கொள்ள உதவும். உண்மையான, இயற்கையான தூண்டுதல்களை மேம்படுத்துவதற்கு, நடிகர்கள் மற்றவர்களுடன் முழுமையாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இதனால் அவர்கள் அர்த்தமுள்ள செயல்களையோ மறுவினைகளையோ தவறவிட மாட்டார்கள். இது ஒரு காட்சியில் உள்ள அனைத்து நடிகர்களுக்கும் ஒரு உள்ளார்ந்த வாழ்வை உருவாக்கிக் கொடுக்கிறது.

திரும்ப திரும்ப செய்தல் பயிற்சியானது ஒரு நடிகரை மற்றவர்களுடன் இணைக்கவும், அவர்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ப இயல்பான செயல்பாட்டையோ, எதிர்வினையையோ ஏற்படுத்திக் கொள்ளவோ உதவுகிறது. மெய்சனர் சுமார் 65 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நடிப்பு பயிற்சியை வழங்கி வந்தார். இவரிடம் ஹாலிவுட்டின் பல்வேறு பிரபலமான நடிகர்களும் கற்று சென்றுள்ளனர். அன்டோனி ஹாப்கின்ஸ், ஜேக் நிக்கல்சன், டாம் குரூஸ், சிட்னி பொல்லாக் என இவரிடம் கற்றுக் கொண்ட ஹாலிவுட் நட்சத்திரங்களின் பட்டியல் மிக நீளமானது. இத்தனை நட்சத்திரங்களை உருவாக்கிய மெய்சனர் மிகவும் குறைவான படங்களிலேயே நடித்துள்ளார் என்பது முரண்நகை. Tender Is the Night, The Story on Page One, Mikey and Nicky ஆகிய ஹாலிவுட் படங்களிலும், ஒரே ஒரு தொலைக்காட்சி தொடரில் மட்டுமே மெய்சனர் நடித்துள்ளார். 97 ஆம் ஆண்டு தனது 91 ஆவது வயதில் தூக்கத்திலேயே மெய்சனர் மரணத்தை தழுவினார்.

அமெரிக்க திரை வரலாற்றில் நடிப்பு நுட்பத்தை மாற்றி அமைத்த வரலாறு மெய்சனருக்குரியது. இவரிடமிருந்து பயின்ற பலரும் தங்களது நுட்பங்களையும் பாணிகளையும் மேலும் விரிவாக்கம் செய்து கொண்டு இவரது நடிப்பு சிந்தனையை அமெரிக்காவிலும், அதற்கு வெளியிலும் தொடர்ந்து கொண்டு சென்று வருகின்றனர். ஸ்டானிஸ்லாவ்ஸ்கியிடம் தோன்றிய நடிப்புக் கலை என்ற நதி மெய்சனர் உள்ளிட்ட மனித மனங்களின் ஓடைகள் வழியாக வரலாற்று நெடுகிலும் தொடர்ந்து சலசலத்து ஓடியபடி நடிப்பு கலையில் அற்புதங்களை உருவாக்கி வருகிறது.

நன்றி பேக் ஸ்டேஜ் உள்ளிட்ட இணையதளங்கள்.

Leave a comment